ஆசிபா வழக்கு வெளிமாநிலத்துக்கு மாற்றலாமா? - முதல்வர் கருத்தை கோருகிறது உச்சநீதிமன்றம்

பதிவு செய்த நாள் : 16 ஏப்ரல் 2018 17:44

புதுடில்லி,

    காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி ஆசிபா பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது தொடர்பான வழக்கை வெளிமாநிலத்துக்கு மாற்றுவது குறித்து ஜம்மு காஷ்மீர் மாநில அரசின் கருத்தை உச்சநீதிமன்றம் கோரியுள்ளது.

ஆசிபா வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் ஏஎம் கன்வில்கர், டிஒய் சந்திரசூட் அடங்கிய அமர்வு, இவ்வழக்கில் ஆசிபாவின் குடும்பத்தினர், வழக்கை நடத்த உதவிய உறவினர் தாலித் ஹுசைன் மற்றும் வழக்கறிஞர் தீபிகா ரஜாவத் ஆகியோருக்கு சிவில் உடையணிந்த போலீஸ் பாதுகாப்பு வழங்க மாநில அரசுக்கு அறிவுறுத்தி உத்தரவிட்டது.

ஆசிபாவின் தந்தை வழக்கு விசாரணையை வெளிமாநில நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து ஜம்மு காஷ்மீர் மாநில அரசின் கருத்தை அறிய உச்சநீதிமன்றம் விரும்புகிறது. எனவே இது பற்றி முதல்வர் விரைவில் பரிசீலித்து பதில் தெரிவிக்கவும் உச்சநீதிமன்ற அமர்வு அறிவுறுத்தியது.

முன்னதாக, மகளின் வழக்கில் ஜம்மு காஷ்மீர் மாநில போலீசாரின் விசாரணை திருப்தி அளிப்பதாகவும் சிபிஐ விசாரணை தேவையில்லை என்றும் ஆசிபாவின் தந்தை தெரிவித்தார்.

மேலும் வழக்கை கதுவா நீதிமன்றத்தில் இருந்து சண்டிகரில் உள்ள நீதிமன்றத்துக்கு மாற்ற விரும்புவதாக ஆசிபாவின் தந்தை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே டில்லியை சேர்ந்த வழக்கறிஞர் அனுஜா கபூர், இந்த வழக்கை கதுவா நீதிமன்றத்தில் இருந்து தேசிய நீதிமன்றத்துக்கு மாற்றும்படியும் சிபிஐ விசாரணை கோரியும் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதற்கு பதிலளித்த நீதிபதிகள் அமர்வு, ஆசிபாவின் தந்தை மாநில போலீசாரின் விசாரணை திருப்தி அளிப்பதாகவும் சிபிஐ விசாரணை தேவையில்லை என்றும் கோரியுள்ளதால், இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற தேவையில்லை என்று கூறியது.

மேலும் வழக்கை சண்டிகர் நீதிமன்றத்துக்கு மாற்றும் படி ஆசிபாவின் தந்தை விருப்பம் தெரிவித்துள்ளார். இது குறித்து மாநில அரசு ஏப்ரல் 27ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதால், தற்போது வழக்கை டில்லிக்கு மாற்றுவது பற்றி எதுவும் கூற முடியாது என்றும் அமர்வு குறிப்பிட்டது.

வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 8 பேரில் ஒருவன் மற்றும் சிறார் என்பதால் அவன் தங்கியுள்ள கண்காணிப்பு மையத்துக்கும் சிவில் உடையணிந்த மாநில போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டு வழக்கின் மறுவிசாரணையை ஏப்ரல் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

முன்னதாக, இன்று காலை தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த ஆசிபா தரப்பு வழக்கறிஞர் தீபிகா சிங் ரஜாவத், ஆசிபா வழக்கில் ஆஜராவதால் தொலைபேசியில் மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் தான் கொல்லவோ அல்லது பாலியல் பலாத்காரம் செய்யப்பட உள்ளதாக கூறினார்.

காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில், கடந்த ஜனவரி 10 ஆம் தேதி பழங்குடி முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஆசிபா கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

அதன்பின் 17 ஆம் தேதி உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். உடற்கூறு பரிசோதனையில் அவர் கூட்டு பலாத்காரம் செய்து, போதை மருந்து செலுத்தி கொல்லப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தி, சிறுமி கடத்தப்பட்டு கோயிலில் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் கோயில் நிர்வாகி சஞ்சி ராம், சிறப்பு அதிகாரி சுரேந்தர் வர்மா, அவரின் நண்பர் பர்வேஷ் குமார், அவரின் உறவினரும், மைனர் சிறுவனான பர்வேஷ் குமார் ஆகியோரைக் கைது செய்தனர்.

மேலும், இவர்களிடம் இருந்து ஆதாரங்களை அழிக்கப் பணம் பெற்றதாகக் கூறப்படும் போலீஸ் அதிகாரி தீபக் கஜுரியா, விசாரணை அதிகாரி திலக் ராஜ், துணை ஆய்வாளர் ஆனந்த் தத்தா ஆகியோரும் சிறப்பு விசாரணைக் குழுவினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் இதுவரை 3 போலீஸ் அதிகாரிகள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் மட்டும் இளம்குற்றவாளி ஆவார்.