வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை அரசியல் சட்டத்தின் 9 வது அட்டவணையில் சேர்க்க ஸ்டாலின் வலியுறுத்தல்

பதிவு செய்த நாள் : 16 ஏப்ரல் 2018 16:17

சென்னை,

   வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்பிரிவை 9 வது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் தீர்ப்புக்கு எதிராக, அனைத்து கட்சிகளின் சார்பில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
இதில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய ஸ்டாலின்,  காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் என்ற உணர்வை வெளிப்படுத்தும் வகையில், வைகோவின் மைத்துனர் மகன் சரவணன் சுரேஷ், கடந்த 13–ம் தேதியன்று அதிகாலையில் நடைபயிற்சி சென்றபோது

 தீக்குளித்து பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பயனின்றி கொடுமையான முறையில் இறந்துவிட்ட துயரச்செய்தியை அனைவரும் அறிந்திருப்பீர்கள். அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அனைவரும் இரண்டு நிமிடங்கள் இரங்கல் தெரிவிக்கப்படுகிறது.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் வகையில் தீர்ப்பு வந்திருப்பதை கண்டித்து நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

குறிப்பாக, வைகோ எப்படிப்பட்டதொரு சூழ்நிலையில் இந்த ஆர்ப்பட்டத்தில் பங்கேற்று இருக்கிறார் என்பதில் இருந்தே, இதன் முக்கியத்துவத்தை அனைவரும் உணர்ந்து கொள்ள முடியும்.

சமூகநீதிக்காகவும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதற்காகவும், அரசியல் சட்டத்தின் நோக்கத்தை பட்டுப்போகாமல் தடுத்து நிறுத்துவதற்கும் நாம் நடத்திக் கொண்டிருக்கும் போராட்டக்களமாக இருக்கும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரையில், நாம் பெருமையோடு சொல்ல வேண்டுமென்றால், தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்த நேரத்தில் அனைத்து சாதிகளை சேர்ந்தவர்களும் ஆலயங்களுக்குள் நுழையலாம், அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை கொண்டு வந்தார்.

இன்றைக்கு பாஜக மத்திய அரசில் பொறுப்பேற்ற பிறகு, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மாநிலத்திலும் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. இதுதான் மோடி தலைமையிலான மத்திய அரசின் மிகப்பெரிய சாதனையாக உள்ளது.

நான் நிறைவாக சொல்ல விரும்புவது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை உடனே அமுல்படுத்த வேண்டுமென்று நாம் போராட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால், இன்றைக்கு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒரு மிகப்பெரிய கொடுமையாக அதே உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கின்ற தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். அல்லது அரசியல் சட்டத்தின் 9 வது அட்டவணையில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைச் சேர்த்து, ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்க வேண்டும். இல்லையென்றால், இந்தப் போராட்டம் இன்றோடு முடியாமல், மேலும் தொடரும் என்பதை மட்டும் எடுத்துச் சொல்லி, உரையை நிறைவு செய்கிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.