மெக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் அசீமானந்த் உள்ளிட்ட 5 பேர் விடுதலை

பதிவு செய்த நாள் : 16 ஏப்ரல் 2018 15:23

ஐதராபாத்,

மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட துறவியார் அசீமானந்தா உள்ளிட்ட 5 பேரை தேசிய புலனாய்வு அமைப்பின் சிறப்பு நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது.

கடந்த 2007 ஆம் ஆண்டு ஐதராபாத்தில் மெக்கா மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டனர். 58 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கில் 10 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 

இந்த வழக்கில் வழக்கு விசாரணையில் இருந்தபோதே சுனில் ஜோஷி மர்மமான முறையில் இறந்தார். சந்தீப் டாங்கே, ராமச்சந்திர கல்சங்க்ரா ஆகிய இருவரும் தலைமறைவாக உள்ளனர்.

அசீமானந்தா, சுனில் ஜோஷி, சந்தீப் டாங்கே, ராமச்சந்திர கல்சங்க்ரா, தேஜ்ராம் பார்மர், அமித் சவுகான் உள்ளிட்ட 10 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

தேஜ்ராம் பார்மர், அமித் சவுகான் ஆகியோர் மீது விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வழக்கு விசாரணை இன்று ஐதராபாத்தின் நம்பள்ளியில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.

போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி தேவேந்திர குப்தா, லோகேஷ் சர்மா, சுவாமி அசீமானந்தா என்ற நபா குமார் சர்கார், பாரத் மோகன்லால் ரத்தேஷ்வர் என்ற பாரத் பாய், ராஜேந்திர சௌதாரி ஆகியோரை வழக்கில் இருந்து நீதிமன்றம் விடுவித்தது.