218 வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்: சாமுண்டீஸ்வரியில் சித்தராமைய்யா போட்டி

பதிவு செய்த நாள் : 16 ஏப்ரல் 2018 00:21

புதுடில்லி: கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான 218 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை காங்கிரஸ் நேற்று வெளியிட்டது. அதில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் முதல்வர் சித்தராமைய்யா மீண்டும் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் 12ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. காங்கிரஸ் ஆளும் 4 மாநிலங்களில் பெரிய மாநிலம் கர்நாடகம் என்பதால் அந்த மாநிலத்தை தக்க வைத்துக் கொள்ள காங்கிரஸ் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

அதே நேரம், கர்நாடகாவில் இழந்த ஆட்சியை இந்த முறை எப்படியாவது பிடித்தாக வேண்டும் என்ற முனைப்புடன் பாஜ செயல்பட்டு வருகிறது. எடியூரப்பாவை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ள பாஜ, மொத்த முள்ள 224 தொகுதிகளில் 150 தொகுதிகளில் வெற்றிபெறுவது என்ற இலக்குடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இதுதவிர மதச்சார்பற்ற ஜனதாதளமும் தனித்து போட்டியிடுகிறது. இதனால், கர்நாடகாவில் மும்முனை போட்டி நிலவுகிறது.

கர்நாடக தேர்தல் குறித்து இந்தியா டுடே நத்திய கருத்துக் கணிப்பில், காங்கிரசுக்கு கடந்த முறை கிடைத்தது போன்று 37 சதவீத ஓட்டுகள் கிடைத்தாலும், ஆட்சி அமைக்க போதுமான பெரும்பான்மை கிடைக்காது. கடந்த முறையைவிட தொகுதிகள் குறையும். 90 முதல் 101 இடங்கள் வரை காங்கிரசுக்கு கிடைக்கும்.

பாஜவுக்கு கடந்த தேர்தலை காட்டிலும் கூடுதல் ஓட்டு கிடைக்கும். 35 சதவீத ஓட்டுகளை பாஜ வாங்கும். இருந்தாலும் அந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது. 80 முதல் 90 இடங்களில் பாஜ வெற்றிபெறும். எஞ்சிய இடங்களில் மதச்சார்பற்ற ஜனதாதளம் வெற்றிபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வில் அரசியல் கட்சிகள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளன. மதச்சார்பற்ற ஜனதாதளம் இதுவரை 126 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. 74 பேர்களை கொண்ட முதல் பட்டியலை பாஜ  கடந்த 8ம் தேதி வெளியிட்டது.

இந்நிலையில், காங்கிரஸ் மேலிடம் 218 பேர் கொண்ட பட்டியலை நேற்று வெளியிட்டது. அதில் முதல்வர் சித்தராமைய்யா அவரது சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிடுவார் என்றும், கர்நாடக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரன் கொரடகேரே தொகுதியிலும், உள்துறை அமைச்சர் ராமலிங்கா ரெட்டியின் மகள் சவுமியா ஜெயாநகர் தொகுதியிலும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர மாநில அமைச்சர்கள் இப்போது எம்எல்ஏக்களாக இருக்கும் பலர் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

முதல்வர் சித்தராமைய்யாவின் சொந்த தொகுதியான சாமுண்டீஸ்வரியில், ஒக்காலிகா சமுதாயத்தவர்கள் அதிகம் உள்ளனர். தங்கள் சமுதாயத்தை சேர்ந்தவரான மதச்சார்பற்ற ஜனதாதளம் தலைவர் தேவகவுடாவையும், அவரது கட்சியையும் பலவீனப்படுத்தும் நடவடிக்கையில் சித்தராமைய்யா ஈடுபட்டுள்ளதால் அவர் மீது ஒக்காலிகா சமூகத்தினர் அதிருப்தியில் உள்ளனர். எனவே சாமுண்டீஸ்வரி தொகுதி பாதுகாப்பானது அல்ல என்று கர்நாடக உளவுத்துறை தெரிவித்ததாகவும் அதனால் சித்தராமைய்யா இந்த முறை வடக்கு கர்நாடகாவில் இருந்து போட்டியிடுவார் என்று சொல்லப்பட்டது. ஆனால், காங்கிரஸ் வெளியிட்டுள்ள பட்டியலின்படி சாமுண்டீஸ்வரி தொகுதியில் சித்தராமைய்யா போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.