காமன்வெல்த் விளையாட்டுகளில் இந்தியா சாதனை: பிரதமர் மோடி, ராகுல் காந்தி பாராட்டு

பதிவு செய்த நாள் : 15 ஏப்ரல் 2018 13:46

புதுடில்லி,

ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த 21வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்திய விளையாட்டு வீரர்கள் நிகழ்த்திய சாதனைகளுக்கும் வாங்கி குவித்த பதக்கங்களுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தியும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் நமது விளையாட்டு வீரர்கள் நிகழ்த்திய சாதனைகள் காரணமாக ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படுகிறோம். வெற்றிகளை குவித்த நமது வீரர்களுக்கு பாராட்டுகள் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் செய்தி பதிவிட்டுள்ளார்.

இந்த சாதனைகள் இந்திய இளைஞர்களுக்கு ஊக்கம் தந்து அவர்களும் பல்வேறு விளையாட்டுகளில் முதலிடம் பெற ஊக்குவிக்கும் என நம்புவதாக மோடி குறிப்பிட்டுள்ளார்.

அரசை பொருத்தமட்டில், எல்லா வகையான உதவிகளும் வழங்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ராகுல் பாராட்டு

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா 3-வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியா 26 தங்கப்பதக்கங்களை வென்று நமக்கு எல்லாம் பெருமை சேர்த்துள்ளது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

பேட்மிண்டன்

காமன்வெல்த் போட்டிகளின் இறுதி நாளான நேற்று பெண்களுக்கான பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனைகள் சாய்னா நேவால் மற்றும் பிவி.சிந்துவுக்கு இடையில் பலப்பரிட்சை நடந்தது.பிவி.சிந்து (இடது), சாய்னா நேவால் (நடுவில்)
கிடாம்பி ஸ்ரீகாந்த்(இடது)

இந்த போட்டியில் சாய்னா நேவால், 21-18, 23-21 என்ற செட் கணக்கில் சக வீராங்கனை பிவி.சிந்துவை வீழ்த்தினார். இதன்மூலம் தங்கப் பதக்கத்தை சாய்னா நேவாலும், வெள்ளிப் பதக்கத்தை பிவி.சிந்துவும் வெற்றிபெற்றனர்.

இது காமன்வெல்த் போட்டியின் ஒற்றையர் பிரிவில் சாய்னா நேவால் பெறும் இரண்டாவது தங்கப் பதக்கமாகும். 2010 ஆம் ஆண்டு டில்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் சாய்னா தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் ஆடவருக்கான பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

இந்த போட்டியில் மலேசிய வீரரான லீ சாங் வேய் 21-19, 21-14, 21-14 என்ற நேர் செட் கணக்கில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்தை தோற்கடித்தார். இதன்மூலம் லீ சாங் தங்கப் பதக்கத்தையும், கிடாம்பி ஸ்ரீகாந்த் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.

இதேபோல் ஆடவருக்கான இரட்டையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியின் இறுதிச் சுற்றும் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்திய வீரர்கள் சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி – சிராக் ஷெட்டி ஆகியோர் இங்லாந்து வீரர்களிடம் வீழ்ந்தனர். இதன்மூலம் தங்கப் பதக்கத்தை இங்கிலாந்து வீரர்களும், வெள்ளிப் பதக்கத்தை இந்திய வீரர்களும் வென்றனர்.

ஸ்குவாஷ்

இறுதி நாளான இன்று மகளிருக்கான் இரட்டையர் ஸ்குவாஷ் போட்டியின் இறுதிச் சுற்று இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனைகள் தீபிகா பல்லிகல் – ஜோஷ்னா சின்னப்பா ஆகியோர் வெள்ளிப் பதக்கத்தை வென்றனர்.

இன்று நடைபெற்ற இந்த போட்டியில், நியூசிலாந்து வீராங்கனைகள் ஜோவேல் கிங் – அமாண்டா லாண்டர்ஸ் ஆகியோர் 11-9, 11-8 என்ற செட்களில் வெற்றிபெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றனர்.

டேபிள் டென்னிஸ்

இன்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த மணிகா பத்ரா – சத்தியன் ஞானசேகரன் ஆகியோர் வெண்கலப் பதக்கத்தை வென்றனர். இந்த போட்டியில் இவர் தங்கள் நாட்டின் சக போட்டியாளர்களான அச்சந்தா சரத் கமல் – மவுமா தாஸ் ஆகியோரை 11-6, 11-2, 11-4 என்ற செட் கணக்கில் வீழ்த்து வெண்கலப் பதக்கத்தை தட்டிச்சென்றனர்.

இதேபோல் இன்று நடந்த ஆடவருக்கான இறுதிப் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் சரத் அச்சந்தா இங்கிலாந்து வீரர் சாமுவல் வாக்கரை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

காமன்வெல்த் போட்டிகளின் இறுதி நாளான இன்று 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் என மொத்தம் 66 பதக்கங்களுடன் இந்தியா 3 ஆவது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2014-ம் ஆண்டில் நடந்த 20 ஆவது காமன்வெல்த் போட்டிகளில் பதக்கப்பட்டியல் இந்தியா 5ஆவது இடத்தில் இருந்தது. அப்பொழுது பெற்ற பதக்கங்கள்: தங்கம்-15,  வெள்ளி- 30  வெண்கலம்- 19, மொத்தம்-64

2010-ம் ஆண்டு புதுடில்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா 101 பதக்கங்களை வென்றது. இந்த 101 பதக்கங்களில் 38 தங்கப்பதக்கங்கள். எனவே நாம் நம்முடைய கடந்த கால சாதனைகளை சமநிலைப்படுத்தவே நீண்ட தூரம் நடந்தாக வேண்டும்.