சென்னையில் ஏன் சரிந்தது வீட்டு விற்பனை?

பதிவு செய்த நாள் : 11 மார்ச் 2018

இந்தியாவில் சென்னையில்தான் அதிக அளவிலான கட்டப்பட்ட வீடுகள் விற்கப்படாத நிலையில் உள்ளன. மொத்தம் எவ்வளவு வீடுகள் விற்கப்படாமல் இருக்கிறது என்று தெரியுமா? மொத்தம் 42,000 வீடுகள் சென்னையில் கட்டிமுடிக்கப்பட்டு விற்கப்படாமல் உள்ளன இவை இந்தியாவின் ஒட்டுமொத்த அளவில் 20 சதவீதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இது ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜோன்ஸ் லாங் லாசாலே எடுத்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

சென்னையின் தெற்கில் உள்ள புறநகர் பகுதிகளான பழைய மகாபலிபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலை ஆகிய இடங்களில்தான் பெரும்பாலான வீடுகள் விற்கப்படாமல் உள்ளன. அந்த இரண்டு பகுதிகளில் மட்டும் 30,000 வீடுகள் வரை விற்கப்படாமல் உள்ளன. இது சென்னையில் விற்கப்படாமல் உள்ள கட்டப்பட்ட வீடுகளில் 75 சதவீதமாகும்.

இதேபோல், மேற்கு புறநகர் பகுதிகளான என்எச்4 மற்றும் ஜிஎஸ்டி சாலைகளில் மொத்தம் 8,000 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டு விற்கப்படாத நிலையில் உள்ளன. இந்த பகுதிகளில் வீடுகளின் விற்பனை கடந்த ஆண்டு முதல் சரிவை சந்தித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த தகவல்களை வைத்து பார்க்கும்போது கடந்த 2015 ஆம் ஆண்டு இறுதியில் சென்னையில் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து வீடுகள் விற்பனை மந்தமானது. பின்னர் கடந்த 2017 ஆம் ஆண்டில் விற்பனையில் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

2017 ஆம் ஆண்டு கட்டுமானத்துறை வீழ்ந்ததற்கு முக்கிய காரணங்கள் பணமதிப்பிழப்பு (ரூ.500, ரூ.1000 செல்லாது) நடவடிக்கை, ரெரா சட்டம் (ரியல் எஸ்டேட்டிற்கான விதுமுறைகள்) அமல், ஜிஎஸ்டி வரி விதிப்பு ஆகியவை ஆகும்.

ஜிஎஸ்டி வரிவிதிப்பு

கட்டுமானத் துறையில் ஜிஎஸ்டி வரி விதிப்பை அறிந்துகொள்ளும்முன், இதுவரை கட்டுமானத் துறையில் என்னென்ன வரி விதிப்புகள் இருந்தன என்பது குறித்து அறிந்துகொள்வது மிகவும் அவசியம். இத்துறையில் சேவை வரி, ஸ்வச் பாரத் (தூய்மை இந்தியா) செஸ், கிரிஸ் கல்யாண் செஸ், ‘வாட்’ என்றழைக்கப்படும் மதிப்புக்கூட்டு வரி, முத்திரைத் தாள் கட்டணம், பத்திரப் பதிவு கட்டணம் எனப் பல வரிகளும் கட்டணங்களும் உள்ளன.


இப்படி விதிக்கப்பட்ட பல வரிகள் தற்போது மாற்றப்பட்டுள்ளன. ஜிஎஸ்டி என்னும் ஒரே வரியாக தற்போது விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக மொத்தம் 12 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. இந்த 12 சதவீதம் என்பது முத்திரைத்தாள் கட்டணம், பத்திரப் பதிவு கட்டணம் ஆகியவை இல்லாமல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் இந்த இரண்டும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.

கட்டுமானப் பணிகளுக்கும் தனியாக ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டால் அதற்கு ஜிஎஸ்டி 18 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, கட்டுமானம் எழுப்புதல், நிறுவுதல், வீட்டை மேம்படுத்தல், வீட்டைப் பழுது பார்த்தல், சீரமைத்தல் போன்ற வேலைகளை ஒப்பந்த அடிப்படையில் எடுத்துச் செய்யும் கட்டுமான நிறுவனங்கள் 18 சதவீத ஜிஎஸ்டி வரியைச் செலுத்த வேண்டும். இந்தப் பணிகளுக்கு சராசரியாக இதுவரை 11 முதல் 18 சதவீதம் வரை வசூலிக்கப்பட்டு வந்தது. தமிழகத்தைப் பொறுத்தவரை இந்தப் பணிகளுக்கு 5 சதவீதமே வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், ஜிஎஸ்டி வரிவிதிப்பால் இனி கூடுதலாக  வரி கட்டவேண்டியுள்ளது. கட்டுமான பொருட்களான சிமெண்ட், கம்பிகள், மணல் என அனைத்து பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன.

ஒரு கோடிக்கு மேல் மதிப்புள்ள வீட்டினை வாங்கினால் அதன் 30 சதவீத மதிப்பில் 15 சதவீதம் வரியாக வசூலிக்கப்பட்டுவருகிறது. ஒரு கோடிக்கும் குறைவான மதிப்பில் வீடு வாங்கினால், அதன் 25 சதவீத மதிப்பில் 15 சதவீதம் வரியாக வசூலிக்கப்பட்டு வருகிறது.

நீங்கள் வாங்கும் ஒரு வீட்டின் விலை ஒரு கோடிக்கும் மேல் இருந்தார். உதாரணத்திற்கு வீட்டின் விலை ரூ.1,20,00,000 ஆக இருந்தால், அதற்கு கட்ட வேண்டிய வரி 5,40,000 ஆகும். இதுவே 1 கோடிக்கு கீழ். உதாரணத்திற்கு  ரூ.80லட்சமாக இருந்தால், அதற்கு கட்டவேண்டிய வரி 3 லட்சமாகும்.

ஜிஎஸ்டியால் ஏற்பட்டுள்ள விலை உயர்வு காரணமாக ஏற்கெனவே கட்டிமுடிக்கப்பட்ட வீடுகள் விற்கப்படாமல் உள்ள சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ரெரா சட்டம் அமல்

ரியல் எஸ்டேட் தொழிலை கட்டுப்படுத்தவும் ஒழுங்குமுறைக்குள் கொண்டுவரவும் 2016 ஆம் ஆண்டின்  ரியல் எஸ்டேட் ஒழுங்குபடுத்தல் சட்டம் கடந்த ஆண்டு மத்திய அரசு அமல்படுத்தியது. அதன்படி சட்டத்தில் சில விதிமுறைகளை மத்திய அரசு வரையறுத்திருந்தது.

மாநில அரசுகள் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் விதிகளை உருவாக்கி அறிவிக்க வேண்டும் என்றும் மத்திய கேட்டுக்கொண்டது. தமிழக அரசு, விதிகளை கடந்த 2017 ஜனவரி மாதம் இறுதி செய்து அறிவித்தது.

இந்த சட்டத்தின்படி முறைகேடான கட்டுமானங்கள் கட்டப்படுவதும், ரியல் எஸ்டேட் தொழிலில் உள்ள மோசடிகளும் குறைக்கப்படும். முன்னதாக எல்லாம் ஒரு அபார்ட்மெண்ட்ஸ்-ஐ கட்டும் முன்னர் அதற்கான விலையை நிர்ணயித்து திட்டங்களை வகுத்து வாடிக்கையாளர்களிடம் பணத்தை பெற்றுக்கொள்வர். பின்னர் வீட்டு கட்டுமானம் முடிவடைந்த பின்னர் கூடுதலாக பணம் தேவைப்படுகிறது என்று கூறி மேலும் பணம் வாங்கிக்கொள்வார்கள். ஆனால் இந்த சட்டத்தின் மூலம், ஒரு குடியிருப்பு கட்டிடத்தை கட்டவேண்டும் என்றால், அதன் கட்டுமானப் பணிகள் முழுவதும் முடிக்கப்பட வேண்டும். பின்னர் அதற்கான விலையை நிர்ணயித்து அதற்கான சான்றிதழை அரசிடம் இருந்து பெறவேண்டும். அதன் பின்னரே வாடிக்கையாளர்களிடம் அந்த வீடு விற்கப்படவேண்டும்.

மேலும் குறிப்பிட்ட தேதிக்குள் கட்டுமான நிறுவனங்கள் வீட்டை கட்டி வாடிக்கையாளரிடம் கொடுக்கவில்லையெனில் அதற்கான தண்டனையை அவர்கள் அனுபவித்தே ஆகவேண்டும். இதன்படி குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்படாமல் இருந்தால், அவர்களுக்கு அதிக அபராதம் விதிக்கப்படும். பின்னர் வாடிக்கையாளர்களிடம் வீட்டு மனைக்கான பட்டா, சான்றிதழ்கள் ஆகியவற்றை குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் வழங்கவில்லை என்றால் பில்டர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படும்.

குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் முடிக்கவேண்டும் என்று பில்டர்கள் அதற்காக அவசர அவசரமாக அனைத்து கட்டுமான பொருட்களையும் உயர்ந்த விலையில் பெறுகின்றனர். சந்தையில் குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் கட்டுமானப் பணிகளுக்கு தேவைப்படும் பொருட்களை உடனடியாக பெறுவது என்பது இப்போது முடியாத சூழ்நிலையாக உள்ளது. அப்படி பெறவேண்டும் என்றால், அதற்கு அதிக விலை கொடுத்து பெறுவதே ஒரே வழியாகும். அகையால், பில்டர்களும் தங்கள் கடமையை முடிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அதிக விலைகொடுத்து கட்டுமான பொருட்களை வாங்குகின்றனர்.உடனடியாக கிடைக்கவேண்டும் என்றால் அதற்காக பணம் அதிகம் செலவு செய்யவேண்டியது இப்போதைய சூழ்நிலை. குறைந்த காலத்திற்குள் முடித்துத் தரவேண்டும் என்றால் அதற்கு அதிக ஆள் பலம் தேவை. அதிக ஆட்கள் பணிக்கு நியமித்தால், அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவேண்டும். இப்படி அனைத்திலும் செலவு செய்துகொண்டே வரும் பில்டர்கள், இறுதியாக வீட்டின் விலையை உயர்த்திவிடுகின்றனர். இதில் கடைசியாக பாதிக்கப்படுவது வாடிக்கையாளர்கள்தான்.

இந்த சட்டத்தின் விளைவாக வீட்டின் விலை உயர்ந்ததே மிச்சம். இதனால் பல நன்மைகள் இருந்தாலும், விலை உயர்வு என்ற ஒரே காரணம் வாடிக்கையாளர்களுக்கு பெரும் கவலையை அளிக்கின்றது.

ரியல் எஸ்டேட் தொழில் மோசடிகளை கட்டுப்படுத்த தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு, அதில் வாடிக்கையாளர்கள் தங்களது புகார்களைத் தெரிவிக்கலாம் என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

மணல் தட்டுப்பாடு

கடந்த 10 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழில் வளர்ச்சி காரணமாக, கிராமங்கள், நகரங்கள் என அனைத்து இடங்களிலும் அதிக அளவிலான வீடுகள் கட்டப்பட்டுவருகின்றன. இதன் காரணமாக இதை சார்ந்த மணல், ஜல்லி, செங்கல், பெயிண்ட், இரும்பு, குழாய், டைல்ஸ், கிரானைட், மார்பிள் உள்ளிட்டவைகளின் விற்பனையும் அதிகரித்தன. இதனால் பலர் பலனடைந்தனர். இந்நிலையில் கடந்த ஓராண்டாகவே மணல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்படும் என்பதால் மணல் எடுப்பதற்கு விவசாயிகளின் எதிர்ப்பு அதிகரித்தது. இதையடுத்து மணல் குவாரிகளை அரசே எடுத்து நடத்தியது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள மணல் குவாரிகளை மூடுவதற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ஒரு யூனிட் மணல் 15 ஆயிரம் ரூபாய் வரை வரலாறு காணாத வகையில் விலை உயர்ந்துள்ளது. அப்படி இருந்தும் மணல் கிடைப்பது என்பது சிரமமாக இருந்து வருகின்றது.

இதையடுத்து மணலுக்கு மாற்றாக ஜல்லி உடைக்கும் போது வெளிப்படும் கிரஷர் பவுடருடன் சிமென்ட் கலந்து கட்டுமான பணிக்கு பயன்படுத்தி வருகின்றனர். தற்போது எம்சாண்ட் இரண்டு யூனிட்டிற்கு ரூ.18 ஆயிரம் வரை விற்பனை செய்து வருகிறது. கடந்த காலங்களில் 2 யூனிட் ரூ.6 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது பல மடங்கு கூடுதலாக விலை நிர்ணயித்து விற்பனை செய்துவருகிறது குறிப்பிடத்தக்கது.

எம் சாண்ட் எனப்படும் இதன் விலை சமீபகாலமாக இதுபோல உயர்ந்துள்ளதால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். தொடர்ந்து மணல் தட்டுப்பாடு நிலவுவதால் கட்டுமான பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளது. இதனை சார்ந்துள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கட்டுமானங்களின் விலை அதிகரித்து விற்கப்பட்டு வருகிறது. ஆகையால், சென்னையில் வீடுகள் விற்பனை ஆகாமல் இருப்பதற்கு இதுவும் முக்கிய காரணமாக விளங்குகிறது.

பணமதிப்பிழப்பு 

பணமதிப்பிழப்பிற்கு காரணமாக கட்டுமானத்துறை நிலைகுலைந்த நிலைக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் பண மதிப்பு நீக்க அறிவிப்பு ரியல் எஸ்டேட் துறையைக் கடுமையாகப் பாதித்துள்ளது. வழக்கமாக வீடு வாங்குவதற்கு முன்னர் பல்வேறு கட்டுமான நிறுவனங்களிடமும் வாடிக்கையாளர்கள் வீடுகளின் விலை நிலவரத்தைக் குறித்து விசாரிப்பதுண்டு. இந்த நடவடிக்கையை வைத்தே கட்டுமான நிறுவனங்கள் ரியல் எஸ்டேட் நிலவரம் எப்படி அமையும் என்பதை ஊகித்துக்கொள்ளும். கள நிலவரத்தை அறிந்துகொள்ள, கட்டுமான நிறுவனங்களுக்கு உதவும் அடிப்படையான தகவலாக இது கருதப்படுகிறது.

கடந்த ஒரு வருட காலமாக இது குறித்து விசாரிக்க வருவோரின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது. வீடுகள் வாங்குவோரின் எண்ணிக்கையும் குறைந்து காணப்படுகிறது. மத்திய அரசின் பணமதிப்பிழப்பு அறிவிப்புக்குப் பிறகே இந்த நிலைமை ஏற்பட்டிருப்பதாகச் ரியல் எஸ்டேட் துறையைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

கட்டிமுடிக்கப்பட்ட வீடுகள், விற்பனை ஆகாமல் இருப்பதற்கு முக்கிய ஜிஎஸ்டி, 1000ரூ 500ரூ செல்லாது என்ற அறிவிப்பு, ரெரா சட்டம் ஆகியவை தான். ஆனால் இவை ஒட்டுமொத்த நாட்டிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பிற மாநிலங்கள் பெரிதும் பாதிக்கப்படவில்லை. அது ஏன்? என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழும். 

சென்னையில்தான் அதிக அளவிலான கட்டிமுடிக்கப்பட்ட வீடுகள் விற்கப்படாமல் உள்ளன. இதற்கு என்ன காரணம் என்பதை கூர்ந்து ஆய்வு செய்தால் தெரியவரும். இதற்கு பிரதான காரணம் சென்னையில் பெய்த கனமழையும், அதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஆகியவை ஆகும்.

சென்னை வெள்ளம்

சென்னையில் கடந்த 2015 டிசம்பரில் பெய்த கனமழை காரணமாக சென்னை வெள்ளக்காடாக காட்சியளித்தது. குறிப்பாக ரியல் எஸ்டேட், அபார்ட்மெண்ட்ஸ் விற்பனைகள் நடக்கும் ஈ.சிஆர், ஓ.எம்.ஆர், ஜி.எஸ்.டி சாலை, பள்ளிக்கரணை, சோழிங்கநல்லுார், துரைப்பாக்கம், பெரும்பாக்கம், மேடவாக்கம், சிட்லபாக்கம், கிழக்கு தாம்பரம், மேற்கு தாம்பரம், முடிச்சூர், பழைய பெருங்களத்துார், ஊரப்பாக்கம், வண்டலுார், போரூர், குன்றத்துார், அய்யப்பன் தாங்கல், காட்டுப்பாக்கம், அம்பத்துார், ரெட்டேரி, கொளத்துார் ஆகிய பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தன.புறநகர் பகுதிகளின் உண்மையான முகத்தை அந்த சம்பவம் காட்டியிருக்கிறது. நீர்நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டுமான நிறுவனங்களால் கட்டியதாலேயே மிகப் பெரிய வெள்ளத்தினால் அப்பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார்களும் எழுந்தவண்ணம் உள்ளன.

மழைக் காலங்களில் கடலில் கலக்க வேண்டிய மழை நீர், ஆக்ரோஷமான வெள்ள நீராக மாறி குடியிருப்புப் பகுதிகளில் புகுந்து விடுகிறது. இதற்கு என்ன காரணம்?

வெள்ளத்தைக் கட்டுப்படுத்த மாநில அரசு நிறைய திட்டங்கள் செயல்படுத்தியது. ஆனால் அத்தனையிலும் அலட்சியம், ஊழல்.  கொசஸ்தலை, கூவம், அடையாறு மற்றும் பக்கிம்ஹாம் உள்ளிட்ட கால்வாய்களிலும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது. பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட பின்பும் சென்னை வெள்ளத்தில் மிதக்கிறது.

கடந்த 1980ஆம் ஆண்டில் 80% காலியிடங்கள், 20% கட்டிடங்கள் என்கிற நிலை 2015ஆம் ஆண்டில் 20% காலியிடங்கள், 80% கட்டிடங்கள் என மாறியுள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை திட்டமிடாமல் உருவாக்கப்பட்ட நகரமாக இருந்து வருகிறது. ஏற்கெனவே ஜார்ஜ் டவுன் பகுதியில் 99%, ரங்கநாதன் தெருவில் 50% கட்டிடங்கள் விதிகளை மீறி கட்டப்பட்டிருக்கின்றன.

சென்னை மாநகர திட்டங்கள் 1, 2 நகர் ஊரமைப்புத் துறையால் வகுக்கப்பட்ட விதிமுறைகள் மீறியுள்ளன. இனி புதியதாக பெரிய கட்டுமானங்கள் எதுவும் கட்ட அனுமதிக்கக் கூடாது. மாறாக சென்னைக்கு வெளியே சுமார் 50 கிமீ தொலைவில் செயற்கை நகரங்களை திட்டமிட்டு உருவாக்க வேண்டும். நீண்டகால திட்டங்களான சுரங்க நீர்த்தேக்கத் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும்.

எவ்வளவுதான் செயற்கை வடிகால்களை அமைத்தாலும் வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிப்பவை இயற்கையாக அமைந்த தாங்கல்கள். பெரும் வெள்ளங்களைத் தாங்கிப் பிடிப்பதால் இவை தாங்கல்கள் என்றழைக்கப்படுகின்றன. தென் சென்னை இயற்கையான மூன்றடுக்கு தாங்கல் பாதுகாப்பு கொண்டதாக இருந்தது.

மடிப்பாக்கம் ஏரி, பள்ளிக்கரணை ஏரி, நாராயணபுரம் ஏரி, வடக்குப்பட்டு ஏரி, நன்மங்கலம் ஏரி ஆகியவை தென் சென்னையின் முதலாம் அடுக்கு பாதுகாப்பு வளையத்திலிருக்கும் தாங்கல்கள். பக்கிம்ஹாம் கால்வாய்க்கு முன்பாக அமைந்திருக்கும் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் இரண்டாம் அடுக்கு பாதுகாப்பு வளையத்திலிருக்கும் தாங்கல். கேளம்பாக்கம் தொடங்கி மாமல்லபுரம் வரை சுமார் 4 கிமீ பரப்பளவில் பரந்திருக்கும் உப்பங்கழிகள் மூன்றாம் அடுக்கு பாதுகாப்பு வளையத்திலிருக்கும் தாங்கல்கள்.

முதல் அடுக்கிலிருந்து வெளியேறும் வெள்ள நீர் இரண்டாம் அடுக்கான பள்ளிக்கரணை சதுப்புநிலத்தைக் கடந்து, இறுதியாக மூன்றாம் அடுக்கு தாங்கலான உப்பங்கழிகளில் தேங்கி நின்று, கடல் நீர் உள்வாங்கும்போது கடலுக்குள் சென்று கலக்கும்.

மத்திய சென்னையில் தாங்கல்கள் கிடையாது. இங்கு அடையாற்றையும் கூவத்தையும் இணைப்பதன் மூலம் வெள்ளத்தை கட்டுப்படுத்து வருகிறது பக்கிம்ஹாம் உள்ளிட்ட கால்வாய்கள். வடசென்னையில் கொசஸ்தலை எண்ணூரில் கலக்கும் முன்பாக இருக்கும் புழல் ஏரி, செங்குன்றம் ஏரி, சூரப்பட்டு ஏரி ஆகியவையே தாங்கல்கள். இன்று இந்த தாங்கல்களும் இருந்த இடம் தெரியாமல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

முதலாம் அடுக்கு தாங்கல்களான மடிப்பாக்கம், பள்ளிக்கரணை ஏரி,  இரண்டாம் அடுக்கு தாங்கலான பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் பெரும் பகுதிகள் கட்டிடங்களாகிவிட்டன. கேளம்பாக்கம் தொடங்கி மாமல்லபுரம் வரையுள்ள தாங்கல்களும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறு நீர் வெளியேறும் அனைத்து பகுதிகளிலும் வீடுகள் மற்றும் இதர கட்டுமானங்களை கட்டினால் மழை நீர் தேங்கி நிற்காமல் என்ன ஆகும்.

இந்த காரணங்கள் வீடு வாங்கியவர்கள், வீடு வாங்க நினைப்பவர்கள் ஆகியோரின் மத்தியில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. இதனால், இங்கு புதிதாக கட்டப்பட்ட வீடுகளின் விற்பனையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.


கட்டுரையாளர்: தினேஷ் குகன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation

வாசகர் கருத்துக்கள் :
Vishal 12-03-2018 01:12 AM
Everything is true need to take some action nice article very useful

Reply Cancel


Your comment will be posted after the moderation


Thanigai 13-03-2018 03:52 PM
அருமையான பதிவு

Reply Cancel


Your comment will be posted after the moderation


G. Vishnu Priya 18-03-2018 09:37 PM
Nice article

Reply Cancel


Your comment will be posted after the moderation


Dr.Siddar Pandian 30-04-2018 08:54 PM
Very informative

Reply Cancel


Your comment will be posted after the moderation


கா. சதாசிவம். 01-05-2018 01:30 PM
தாங்கள் தெரிவிப்பது மிகச் சரியான உண்மையை.. ரியல எஸ்டேட் துறையை அரசு 10 ஆண்டுகளுக்கு முன்பே ஒழுங்குப் படுத்தாமல், அரசுக்கு பத்தியப்பதிவின் மூலம் வருமானம் தேவை என்ற அடிப்படையில் சப்ரிஜிஸ்ட்டர் ஒரு வீட்டை பலருக்கு பத்திரவு செய்த கொடுமைகள்...கழிவு நீர் செல்லமுடியாமல் செப்டிங் உபயோகித்து பூமியை கெடுத்த பாவம்..மத்தியரசின் பொருளாதாரக்கொள்கைகள்..விலை யேற்றம், கட்டுமானத் தொழிலாளர்களின் சம்பளம்...பல பிரச்னைகள், அரசியல்வாதிகளின் ஏரி ஆக்கிரமிப்பு கல்லூரிகள்.. இவற்றையெல்லாம் இனி யேனும் திட்டமிட்டு முறைப்படுத்தினால் வீடு வாங்குவார்கள்..அதுவரை கட்டுமான வீடுகள் விற்பது எப்படி என அறிவியலாளர்கள், அனுபலசாலிகளிடம் யோசனைக்கேட்டு, கட்டுமானத் தொழிலில் மறுமலர்ச்சி ஏற்படுத்த தினமலர் உதவட்டும்.

Reply Cancel


Your comment will be posted after the moderation