தமிழக சட்டசபையில் ஜெயலலிதா உருவப்படம்: சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார்

பதிவு செய்த நாள் : 12 பிப்ரவரி 2018 12:47

தமிழக சட்டசபையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார்.தமிழக சட்டசபையில் ஜெயலலிதா படதிறப்பு விழா நடைபெற்றது.  முதல்வர்  எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் சபாநாயகர் தனபால் படத்தை திறந்து வைத்தார்.  

இந்த நிகழ்ச்சியில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் , மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அரசு தலைமைக் கொறடா எஸ். ராஜேந்திரன்,  அதிமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள்  மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் அனைவரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில்  முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

”தமிழ்நாட்டை ஜெயல்லிதா என்கிற தெய்வம் எங்களை வழிநடத்தி ஆட்சி செய்கின்றது. உலகத்தையே உற்று கவனிக்க வைத்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த சட்டப்பேரவையில் வரலாறு படைத்தவர் ஜெயலலிதா” என்று கூறினார்.

மேலும்,”மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால்தான் தமிழக மக்கள் வளர்ந்தார்கள். வளர்ச்சித்திட்டங்கள், நலத்திட்டங்களை தந்துவிட்டு சென்றிருக்கிறார் ஜெயலலிதா. ஜெயலலதாவின் அரசியல் வளர்ச்சி என்பது அக்னியில் இருந்து மீண்ட பீனிக்ஸ் பறவை போன்றது.பல சோதனைகளையும் வேதனைகளையும் கடந்து 6 முறை முதல்வராக இருந்துள்ளார். பூமி உள்ளவரை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகழ் இருக்கும்” என முதல்வர் எடப்பாடி பழனிசாமி  கூறினார்.

ஜெயலலிதாவின்  உருவப்படம் 7 அடி உயரம் மற்றும் 5 அடி அகலம் கொண்டது.  பச்சை நிற சேலையுடன் அவர் நிற்பது போன்று உருவப்படம் வரையப்பட்டுள்ளது. இந்த படத்தை கவின் கல்லூரி முன்னாள் முதல்வர் மதியழகன் வரைந்துள்ளார்.  சட்டசபையில் 11வது தலைவராக ஜெயலலிதாவின் படம் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உரை:

மக்கள் நலனுக்காகவே வாழ்ந்தவர் ஜெயலலிதா என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உரையாற்றினார்.

தமிழர்களின் நலனுக்காகவே வாழ்ந்த ஜெயலலிதாவை, தமிழ் கூறும் நல்லுலகம் மறக்கவே மறக்காது என்பதைத்தான் ஜெயலலிதாவின் இந்த திருவுருவப் படத்திறப்பு நிகழ்ச்சி நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

வாக்குகளை வாங்குவதற்காக மட்டுமே, மக்களைச் சந்திக்கின்ற தலைவர்களுக்கு மத்தியில், மக்களை வாழ வைப்பதற்காகவே, மக்களை சந்தித்த ஒரே தலைவர், ஜெயலலிதா.

மக்களுக்கான திட்டங்களைத் தந்து, மக்களால் நான்... மக்களுக்காகவே நான்... உங்களால் நான்... உங்களுக்காகவே நான்... - என்ற சத்திய வாசகத்தை, சரித்திரமாக மாற்றி காட்டினார் ஜெயலலிதா.

அவர் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும், நிலைத்த புகழோடு, நீக்கமற நம்முள் நிறைந்திருக்கிறார்.

இவ்வாறு, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தன் உரையில் கூறினார்.

திருவள்ளுவர், காந்தி, ராஜாஜி, காமராஜர், பெரியார், அண்ணா, காயிதே மில்லத், முத்துராமலிங்க தேவர், எம்.ஜி.ஆர். மற்றும் அம்பேத்கர் ஆகியோரது உருவப்படங்கள்  தமிழக சட்டப் பேரவையில் வைக்கப்பட்டு உள்ளன.  இப்பொழுது முதன் முதலாக பெண் தலைவரின் படம் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மு.க.ஸ்டாலின் இருக்கைக்கு எதிரே ஜெயலலிதாவின் உருவப்படம் வைக்கப்பட்டுள்ளது.  இந்த நிகழ்ச்சியில் திமுக, காங்கிரஸ், தேமுதிக, உள்ளிட்ட கட்சியினர்களும், ஆர்கேநகர் தொகுதி எம்எல்ஏ டிடிவி தினகரன் ஆகியோரும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.