பணத்தின் நிழலான பிட் காயினுக்கு தடை எப்பொழுது?

பதிவு செய்த நாள் : 08 பிப்ரவரி 2018

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பிப்ரவரி முதல் தேதி அன்று மத்திய அரசின் 2018 - 2019 ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அருண் ஜெட்லி வாசித்த பட்ஜெட் உரையில் இந்தியாவில் பிட் காயின் போன்ற கிரிப்டோ கரன்சிகளை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார். 

க்ரிப்டோ கரேன்சி என்றால் என்ன?
டிஜிட்டல் கரேன்சிகள் அனைத்தும் க்ரிப்டோ கரேன்சி என்று அழைக்கப்படும். இந்த வகையைச் சேரந்ததுதான் பிட்காயின்.
இந்தியாவிற்கு ரூபாய், அமெரிக்காவிற்கு டாலர், மற்றும் ஜப்பானிற்கு யென் என்று ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு நாணயம் இருப்பது போல இன்டர்நெட்டில் உள்ள ஒரு கரென்சி தான் பிட் காயின். இதை டிஜிட்டல் நாணயமுறை என்றும் சொல்லலாம். கணினியில் கண்களால் மட்டுமே பார்க்கக்கூடிய ஒரு பண வகை, இது முற்றிலும் மின்னணு பரிவர்த்தனைக்கானது.

பிட்காயின் எப்படி அறிமுகம் ஆனது:

கடந்த 2010ம் ஆண்டு ஒருவர் 10,000 மதிப்புள்ள பிட்காயினை வெறும் 50 டாலருக்கு விற்க முன்வந்தார். அப்பொழுது அந்த காயினை வாங்க யாரும் முன்வரவில்லை. 2013 வரை பிட்காயினை பற்றி யாருக்கும் தெரியாது. அப்பொழுது அந்த பிட்காயினை யாரவது வாங்கி இருந்தால் அவர்கள் தான் இன்றைய பில்லியனர்கள் ஆவர்கள்.

இந்த அளவுக்கு பிட்காயினின் மதிப்பு உயர காரணம்?

இந்த கேள்விக்கு பதில் சைப்ரஸ் (Cyprus) நாடு வெளியிட்ட அறிவிப்பு ஆகும். சைப்ரஸ் நாட்டில் குறைந்த வரி, மற்றும் வரி வசூல் நடவடிக்கைகள் மிகவும் குறைவு. அதனால் பல நாடுகளில் இருந்து முக்கிய பிரமுகர்கள் எல்லாம் தங்களின் சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் வரி செலுத்தப்படாத கருப்புப் பணத்தை சைப்ரஸ் நாட்டு வங்கிகளில்தான் பதுக்கி வைப்பார்கள். கணக்கு வைத்திருப்போர் பட்டியல் விவரத்தை சைப்ரஸ் நாடு வெளியிடுவது இல்லை.

இது போன்ற தவறான வங்கி நடவடிக்கையால் பல பிரச்சனைகள் வர தொடங்கியது. இந்தக் கட்டத்தில்தான் மக்களுக்கு முதன் முதலில் பிட்காயின் பற்றி தெரிய வந்தது. இந்த பிரச்சனையின் ஆரம்பம் 2008ம் ஆண்டு  நடந்த பல நிகழ்வுகள்தான் காரணம்.  

கடந்த 2008ல் உலக நாடுகளின் பொருளாதாரம் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்தது. இதனால் எல்ல நாடுகளும் பெரும் பாதிப்படைந்தன. பொருளாதார வீழ்ச்சியால் நாட்டில் வேலை வாய்ப்பு, ரூபாயின் மதிப்பு, கடன் சுமை என பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மக்கள் மிகவும் பாதிப்படைந்தனர். வங்கித் துறை மற்றும் நிதி நிறுவனம் மீதும் மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போனது.இந்நிலையில் மக்கள் அதிருப்தி அடைந்தனர். வங்கி மற்றும் நிதி நிறுவனம் மீது கோபம்  எற்பட்டது. இந்த கோபத்தின் வெளிப்பாடாக சிலர் க்ரிப்டோகரன்சி பிளாக்கை (blog) இணையத்தில் பரப்பி வந்தனர்.  இது எந்த வங்கியுடனும் தொடர்பு இல்லாத ஒரு கரன்சியாகும்

அப்படி அறிமுகமானதுதான் பிட்காயின். இதனை கண்டு பிடித்தது ஒருவரா அல்லது ஒரு குழுவினரா என்பது இன்னும் தெரியவில்லை.

சடோஷி நகமோட்டா என்ற தனிமனிதரால் உருவாக்கப்பட்ட இந்த பிட்காயின் டிஜிட்டல் நாணயம் என நம்பப்படுகிறது. அதன் சாப்ட்வேரையும் இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இதனை கணினியில் உள்ள ஒரு அல்காரிதம் கொண்டுதான் உருவாக்க முடியும். அதிகபட்சமாக 21 மில்லியன் பிட்காயின் தான் உருவாக்க முடியும். பிட்காயின் தேவைகள் குறையும் பொழுது அதன் பாதிப்பு குறையும். அதன் தேவை அதிகமானால் பிட்காயின் மதிப்பும் கூடும்.

இதன் சாப்ட்வேர் மூலம் ஒருவர் மற்றவருக்கு நேரடியாக கரன்சியை அனுப்ப முடியும். அனுப்பியது யார் என்று தெரியாது. பிட்காயினை பெற்றுக்கொண்வர் யார் என்பதும் தெரியாது. இந்தக் இரகசியக் குறியீட்டு முறை மூலம் இதில் அடிப்படை பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பிட்காயின் பிளாக் செயின் தொழில்நுட்பம் (Block Chain Technology) கொண்டு அமைக்கப்பட்டது.

பிட்காயினை எப்படி பயன்படுத்துவது?

பிட்காயினுக்கு உள்ள ஆப்பை (App) தரவிறக்கம் செய்ய வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முகவரி இருக்கும். ஆனால், அந்த முகவரி நிலையானது அல்ல. அடிக்கடி மாறக்கூடியது. நாம் ஒருவருக்கு பிட்காயின் அனுப்பவேண்டும் என்றால் அப்போதைய அவரின் முகவரி அல்லது எதாவது ஒரு குறியீடை கொண்டு அவர்களின் முகவரிக்கு அனுப்ப வேண்டும். ஒவ்வொரு முறையும் இது போல் பரிமாற்றம் நடக்கும்.

பிட்காயின் மதிப்பு

பிட்காயினை உருவாக்கி நடைமுறைக்கு கொண்டுவரும் பொழுது  ஒரு பிரச்சனை உருவானது. அது என்னவென்றால், அதற்கு எப்படி மதிப்பு கொண்டு வர வேண்டும் என்பது தான்.

பிட்காயினின் மதிப்பு ஒரு டாலரா, 100 டாலாரா அல்லது பூஜ்யமா என்று தெரியாமால் இருந்தது. பின் அதனை சோதனை முறைக்கு பயன்படுத்தினர். அப்படி நடந்த முதல் சோதனையின் போது ஒருவர் 10,000 பிட்காயினை பரிமாற்றம் செய்து 2 பீட்சாக்களை வாங்கியுள்ளார். பிட்காயின் கொடுத்து பொருளை பரிமாறிக்கொள்வது அதுவே முதல் முறையாகும்.

https://en.wikipedia.org/wiki/Silk_Road_(marketplace)

இதையடுத்து உலகின் மிக ரகசியமான கறுப்புச் சந்தையாக செயல்பட்ட “சில்க் ரோடு” எனும் இணைய தளத்தில் கஞ்சா, ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பவர்கள் தங்களின் இணைய தள கறுப்புச்சந்தை ஆன்லைன் மையத்தை சில்க் ரோடு இணைய தளத்தில் இங்கே அமைத்துக்கொண்டு ரகசியமாக இயக்கி வந்தனர். இதற்கென தனி சாப்ட்வேர் உள்ளது அதனை கொண்டுதான் அணுக முடியும். அந்த அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் மட்டுமே அதனைக் காண முடியும்.    

இந்த இணைய தளத்தில் பிட்காயின் மூலம் சட்ட விரோத பணபரிமாற்றம், கஞ்சா, ஹெராயின் விற்பனை மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆயுதம் விற்பனை அதற்கென பணம் செலுத்துதல், பணம் பெறுதல் போன்ற சட்ட விரோத செயல்களுக்கு இந்த இணையதளம் பயன்பட்டது. மொத்தத்தில இண்டர்நெட் பிளாக் மார்க்கெட் என இதனைக் கூறலாம். அரசாங்கத்திற்குத் தெரியாமல் பிட்காயின் கொண்டு இந்த பரிமாற்றத்தை நடத்தி வந்தனர்.

பீட்சா வியாபாரத்தில் சந்தைக்கு வந்த பிட்காயின், பயங்கரவாதம், கொலை,கொள்ளை, போதைப் பொருள் விறபனைக்கு துணையாக இப்பொழுது பயன்படுத்தப்படுகிறது.

துவக்கத்தில் சில முக்கிய பிரமுகர்கள், முதலீட்டாளர்கள், கட்டுப்பாடுகள் இல்லாத சுதந்திரத்தில் நம்பிக்கை கொண்டவர்கள், மென்பொருள் பொறியாளர்கள் மட்டுமே  இதில் ஆர்வம் காட்டி வந்தனர்.  இதுவே 2013ம் ஆண்டு வரை பிட்காயின் பற்றி விவரங்கள் பெரியதாக வெளிவரவில்லை.

இந்நிலையில் சைப்ரஸ் நாட்டு வங்கி கேட்பவர்களுக்கு எல்லம் கடன் கொடுத்து வந்தது. ஆனால் அதனைத் திரும்பப் பெற முடியாமல் அந்த நாடு பெரும் பொருளாதரா வீழ்ச்சியை சந்தித்தது. அதனை எதிர்கொள்ள முடியாமல் அந்நாட்டு தலைவர் திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அது, அந்நாட்டு மக்கள் வங்கியில் வைத்திருந்த சேவிங்ஸ் அக்கவுண்டில் (saving account) உள்ள பணத்திற்கு 6 முதல் 10 சதவீதம் வரை வரி வசூலிக்கப்படும் என்றும் அந்த வரித் தொகையை வங்கியிலிருந்து அரசு எடுத்துக் கொள்ளும் என்று கூறப்பட்டது. சொன்னபடி சைப்ரஸ் அரசு தான் விதித்த வரிக்கான தொகையையும் எடுத்துக் கொண்டது.இந்த செயல் அந்நாட்டு மக்களிடைய அதிருப்தியும், கோபத்தையும் வெளிப்படுத்தியது. இது ஒரு பெரிய போராட்டமாக வெடித்தது. இந்த செயலால் பொருளாதரா வீழ்ச்சி என்றால் இந்த நிலை தான் ஏற்படும் என்று மக்கள் அச்சம் கொண்டனர்.

மக்களுக்கு வங்கி மீதும் அரசாங்கம் மீதும் நம்பிக்கை இல்லாமல் போனாது.

வங்கியில் பணம் போட்டால் தானே வரி விதிக்கப்படும். அந்தப் பணத்துக்குத்தானே அந்தக் கணக்கின் உரிமையாளருக்குக் கூடத் தெரியாமல் வரித்தொகை எடுத்துக் கொள்ளப்படும்.

இந்த அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க பணத்தின் நிழலான பிட்காயினை பயன்படுத்த கோடிக்கணக்கானவர்கள் முன் வந்தனர்.

பிட்காயினின் மதிப்பும் உயர தொடங்கியது. அதன் மீது ஆர்வம் காட்டியதால் அதன் மதிப்பு இன்னும் கூடியது.

இதையடுத்து பிட்காயினுக்குக்கூட ஏ.டி.எம் வர ஆரம்பித்தது. பல பிரபலங்கள் பிட்காயினை வாங்க ஆரம்பித்தனர். மிக பெரிய நிறுவனங்கள் பிட்காயினை கொடுத்து தங்கள் சாப்ட்வேர் வாங்கலாம் என்று அறிவித்தனர். மேலும் பிட்காயினை கொடுத்து விண்வெளிக்கு டிக்கெட்டும் வாங்கலாம் என்ற நிலையில் அதன் மதிப்பு மேலும் மேலும் உயரத் தொடங்கியது.

இதுவே மக்களின் மத்தியில் பிட்காயின் பயன்பாடு அதிகரிக்க காரணமாகும்.

பிட்காயின் வர்த்தகத்துக்கு சீனா வங்களாதேசம் ஹாங்காங், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் தடை விதிக்கவில்லை.

வங்களாதேசம், நேபாளம், பொலிவியா, ஈகுவடார் போன்ற நாடுகள் மட்டுமே பிட்காயின் வர்த்தகத்துக்கு தடை விதித்துள்ளன.

இந்தியா பிட்காயினை தடை செய்வதாக அறிவித்துள்ளது. ஆனால், அந்த அறிவிப்பை இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை.

2012ம் ஆண்டு செப்டம்பரில் 13 டாலாராக இருந்த 1 பிட்காயின் 2013ல் 1000 டாலராக மதிப்பு உயர்ந்தது. இன்றைய நிலையில் ஒரு பிட்காயின் மதிப்பு 18,000 டலராக உயர்ந்துள்ளது.    

இந்நிலையில், தற்போது பரபரப்பான விஷயமாகிவிட்ட பிட்காயின்களில் முதலீடு செய்வதற்கு பலர் விருப்பத்துடன் உள்ளார்கள். ஆனால் நிதி வல்லுனர்கள் சிலர் இந்த ஆர்வம் சரியா என்பதில் சந்தேகம் கொண்டுள்ளனர். மேலும் இது முற்றிலும் ஆன்லைனில் நடக்கும் பிட்காயின் வர்த்தகத்தை ஆய்வு செய்வதற்கு எந்த கட்டுப்பாட்டு அமைப்பும் இல்லை. அதனால் பிட்காயின் சரிவுக்குக் கொண்டு போகும் என்று மிக பெரிய முதலீட்டாளரான வாரன் பபேட் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்தியாவில் பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சிகள் சட்டப்பூர்வமானவை கிடையாது. இந்த வகை கிரிப்டோகரன்சிகளுக்கு இந்தியாவில் விதிமுறைகள் உருவாக்கவில்லை. இது போன்ற கிரிப்டோகரன்சிகள் எதும் ரிசர்வ் வங்கியின் அனுமதியையும் பெறவில்லை.

பிட்காயின் கொண்டு நடக்கும் எந்த பரிவர்த்தனையும் வங்கிக் கணக்குகளுக்குள் வாராது. இதனால் கருப்பு பணத்தை பதுக்குவதற்கு அதிக வாய்ப்பாக அமையும். மேலும் சட்ட விரோத செயல்களுக்கு இதனை எளிதாகப் பயன்படுத்த முடியும். அதனால் இந்தியாவில் கிரிப்டோ கரன்சிகளை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். என்று நிதி அமைச்சர் அருண்ஜெட்லி 2018 - 2019 ஆண்டுக்கான பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.

பிட்காயின் பிளாக் செயின் தொழில்நுட்பத்தை மட்டும் வங்கி பரிமாற்றங்களுக்கு பயன்படுத்த திட்டமிடுவோம் என்று அருண்ஜெட்லி கூறியுள்ளார்.

பட்ஜெட்டில் அறிவித்ததை எல்லாம் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அமல்படுத்துவர் என்று உறுதியாக நம்ப வாய்ப்பு இல்லை.

விவசாய விளைபொருள்களுக்கு அரிவிக்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மேலும் 50 சதவீதம் கூடுதாலாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று பட்ஜெட் உரையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கான திட்டம் இன்னும் தயாராக வில்லை மாநில அரசுகளை இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நிதி ஆயோக் பரிசீலிக்கிறது என்றும் கூறி வருகிறார்கள். இந்த அறிவிப்பு எப்படி முடியும் எனத் தெரியவில்லை.

தேசிய சுகாதராப் பாதுகாப்பு திட்டத்திற்கு ரூ.2000 கோடி என முதலில் ஒதுக்கினார் அருண் ஜெட்லி அப்புறம் இந்தத் தொகை போதாது என்கிறார்கள். அடுத்த வருடம் ஜி.எஸ்.டி வசூல் வரும். அதில் நடத்தலாம் என்றார். இப்பொழுது செஸ் வரி வசூலைக் கொண்டு நடத்தலாம் என நிதி ஆயோக் கூறப்படுகிறது.

அரவான் போல இந்தத் திட்டமும் களப்பலி ஆகலாம். இந்நிலையில் பிட்காயினை மட்டும் அருண் ஜெட்லி நினைவில் வைத்திருந்து தடை செய்வர் என்று எப்படி நம்புவது?

நிஜ உலகில் கறுப்புப் பண பேர் வழிகளை வளைத்துப் பிடிக்க உயர்மதிழப்புள்ள ரூபாய் நேட்டுகள் செல்லாது என்றார் பிரதமர் மோடி.

பிட்காயினை இண்டர்னெட் பிளாக் மார்கெட்டுக்கு அடித்தளம். இதை விட்டு வைத்தாலும் எல்லாம் டிஜிட்டல் மயம் என்று சேர்ந்திசை வழங்குகிறார்கள் மத்திய அமைச்சரவை உறுப்பினர்கள் நல்ல காரியத்தை விரைந்து செய்வது அனைவருக்கும் நல்லது.

பிட்காயினை அருண் ஜெட்லி தடை செய்ய நாமும் கோருவோம்.  


கட்டுரையாளர்: முத்துலட்சுமி

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation