இந்திய ஓபன் பேட்மிண்டன்: சிந்து, சாய்னா, ஸ்ரீகாந்த், காஷ்யப் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

பதிவு செய்த நாள் : 31 ஜனவரி 2018 20:39

புதுடில்லி,

    இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடர் டில்லியில் இன்று துவங்கி பிப்ரவரி 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது.


இதன் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து டென்மார்க்கின் நடால்யா கோச் ரோடியை எதிர்கொண்டார். இதில் 21 - 10,   21 - 13 என்ற நேர் செட்களில் ரோடியை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால் டென்மார்க்கின் சோஃபி ஹோல்ம்போ உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் சாய்னா 21 - 15,   21 - 9 என்ற நேர்செட்களில் சோஃபியை வென்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த்தும் ஹாங்காங்கின் லீ சியூக் யூவும் மோதினர். இதில் 21 - 17, 21 - 18 என்ற நேர்செட்களில் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றார்.

அதே போல மற்றொரு ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் காஷ்யப் மற்றும் டென்மார்க்கின் ஹேன்ஸ் கிறிஸ்டெய்ன் விட்டின்கஸ் களத்தில் இறங்கினர். இந்த போட்டியில் 21 - 14,  21 - 18 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்று காஷ்யப் 2வது சுற்றுக்கு நுழைந்தார்.

இந்திய வீரர்கள் சாய் பிரனீத், ராஜிவ் யூசெப்பை 21 - 11,  17 - 21,  21 - 17 என்ற செட்களில் வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

அதே போல, இந்திய வீராங்கனைகள் ஆகார்ஷி காஷ்யப் மற்றும் ருத்விகா ஷிவானியும் முதல் சுற்றில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.