ரபேல் நடால் விரைவில் குணமடைய ரோஜர் பெடரர் வாழ்த்து

பதிவு செய்த நாள் : 25 ஜனவரி 2018 15:11

மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் காயமடைந்த நட்சத்திர வீரர் ரபேல் நடால் விரைவில் குணமடைய ரோஜர் பெடரர் வாழ்த்தினார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் மெல்போர்ன் நகரில் நடைபெறுகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில் ஆறாம் நிலை வீரர் ஸ்பெயினின் மரின் சிலிக் உடன் முதல் நிலை வீரர் ரபேல் நடால் மோதினார்.
அப்போது 5வது செட்டின் போது இடுப்பில் ஏற்பட்ட வலி காரணமாக நடால் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து 3-6, 6-3, 6-7 (5-7), 6-2, 2-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சிலிக் அரையிறுதிக்கு முன்னேறினார்.

முதல் 4 செட்களிலும் கூட சிலிக் உடன் நடால் மிகுந்த சிரமத்துடன் விளையாடினார். இது குறித்து பெடரர் கூறுகையில், நடால் விளையாட போராடியதைக் காண மிகவும் வருத்தமாக இருந்தது. தாமஸ் பெர்டிச் உடனும் காலிறுதியில் சிரமத்துடன் ஆடினார் என்று குறிப்பிட்டார்.

இரவு தூங்க போகும் முன், எப்படி இருக்கிறீர்கள் என நடாலுக்கு செய்தி அனுப்பினேன். எல்லாம் சரியாகி விடும் என நம்புகிறேன். ஸ்கேனில் பயப்படும் வகையில் எந்தவொரு செய்தியும் இருக்கக் கூடாது என குறிப்பிட்டதாக பெடரர் தெரிவித்தார்.

களத்தில் எதிரியாக இருக்கும் நல்ல நண்பர் ஒருவர் இது போல விலகுவது மிகவும் வருந்தத்தக்கது. அவர் விரைவில் குணமடைய வாழ்த்தினேன் என்று கூறினார்.

நடாலின் ஸ்கேனில் இடுப்பு தசையின் உள்பகுதி கிழிந்து இருப்பதாக தெரியவந்துள்ளது. இதை எளிதில் குணப்படுத்தலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க வீரர் ஜேம்ஸ் பிளேக், நான் கழுத்தில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது ரோஜர் பெடரரிடமிருந்து செய்தி வந்தது. பெடரர் போன்ற பொதுநலன் கொண்டவர்கள் டென்னிஸ் விளையாட்டில் இருப்பது அதிர்ஷ்டமாகும் என்று பெடரரின் குணநலனை பாராட்டி உள்ளார்.

ஜனவரி 26ம் தேதி மெல்போர்ன் பார்க்கில் நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் பெடரர் தென் கொரிய வீரர் சங் ஹியோன் உடன் மோத உள்ளார்.

முன்னதாக நடந்த மற்றொரு கால்இறுதியில் 49-ம் நிலை வீரர் இங்கிலாந்தின் கைல் எட்மன்ட் 6-4, 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள கிரிகோர் டிமிட்ரோவுக்கு (பல்கோரியா) ‘செக்’ வைத்தார். கிராண்ட்ஸ்லாம் போட்டியில் இதற்கு முன்பு 4-வது சுற்றை கூட தாண்டாத எட்மன்ட், தற்போது அரைஇறுதியை எட்டி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

23 வயதான எட்மன்ட் அடுத்து மரின் சிலிச்சை எதிர்கொள்கிறார்.

கலப்பு இரட்டையர் 2-வது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஹங்கேரியின் டைமியா பபோஸ் ஜோடி 6-4, 6-4 என்ற நேர் செட்டில் வானியா கிங் (அமெரிக்கா)- பிராங்கோ ஸ்சுகோர் (குரோஷியா) இணையை வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றது.