உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிற்கு எதிராக 4 நீதிபதிகள் போர்க்கொடி

பதிவு செய்த நாள் : 12 ஜனவரி 2018 20:50

புதுடில்லி

உச்சநீதிமன்ற நிர்வாகம் சீர்குலைந்துவிட்டது, தன்னிஷ்டப்படி நீதிபதிகளை வெவ்வேறு அமர்வுகளுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மாற்றுகிறார். நிர்வாகத்தின் ஜனநாயகத்திற்கு வழியில்லாமல் போய்விட்டது. இது குறித்து இன்று காலை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிடம் நேரில் முறையிட்டோம். ஆனால் எந்த பலனும் இல்லை என்று செய்தியாளர்களிடம் நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்ஜன் கோகாய், எம்பி. லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் தெரிவித்தனர்.


உச்சநீதிமன்ற நிர்வாகத்திற்கு எதிராக இப்படி புகார் கூறினால், நிர்வாகத்தின் கன்னியம் என்ன ஆவது என செய்தியாளர்கள் சிலர் கேட்டனர். 

அதற்கு கோகாய் பதிலளித்தார். ”தலைமை நீதிபதி மீது புகார் கூறுவது என்பது எங்களுக்கு நோக்கம் அல்ல. இந்த நாட்டிற்கு நாங்கள் கடமை பட்டிருக்கிறோம். எங்கள் கடமையை நிறைவேற்றுவதற்காகவே நாங்கள் உங்களிடம் பேசுகிறோம். உச்சநீதிமன்றத்தில் எதுவும் முறையாக இல்லை. எதிர்காலத்தில் இளம் தலைமுறையினர், நாங்கள் 4 பேரும் எங்கள் கடமைகளை செய்யத்தவறிவிட்டோம் என்று எங்கள்மீது குறை சொல்லக்கூடாது. எங்கள் ஆத்மாக்களை நாங்கள் விற்றுவிட்டோம் என்ற பழிச்சொல் எங்கள்மீது விழக்கூடாது” என்று தெரிவித்தார்.

நீதிபதிகள் 4 பேரும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிடம் தாங்கள் தந்த 7 பக்க கடிதத்தின் பிரதியை செய்தியாளர்களிடம் வழங்கினர்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிடம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தந்த கடிதத்தின் சாரம்சம் வருமாறு:

இந்திய உச்சநீதிமன்றம் அதற்கு முன்னர் உருவான கொல்கத்தா, பம்பாய், மெட்ராஸ் உயர்நீதிமன்றங்கள் பின்பற்றிய நிர்வாக நடைமுறையை பின்பற்றி தனது நிர்வாக நடைமுறையை வகுத்துள்ளது.

அடிப்படையில் ஆங்கிலோ சாக்ஸ்ன் ஜிரீஸ் புருடன்ஸ் மற்றும் நடைமுறையைப் பின்பற்றி அமைந்துள்ளன.

உச்சநீதிமன்றத்தின் அமர்வுகளை அவற்றுக்கான விசாரணைப் பொருள்களையும் தீர்மானிக்கும் மாஸ்டர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்பதில் சந்தேகமில்லை. அவர் சமமானவர்களின் மத்தியில் முதல்வராகச் செயல்படுபவர் மற்ற நீதிபதிகள்மீது அவருக்கு மேலாண்மை அதிகாரம் எதுவும்  கிடையாது

அதுவும் ஒன்றுக்கு மேற்பட்ட நீதிபதிகளை உறுப்பினர்களாகக் கொண்ட நீதிமன்றங்களில் அமர்வுகளுக்குத் தேவையான நீதிபதிகளின் எண்ணிக்கை அடிப்படையிலும் முடிவு செய்வது வழக்கம்.

இத்தகைய அமர்வுகள் முடிவுசெய்யப்பட்ட பிறகு வேறு யாரும் அந்த அமர்வின் பணியில் அல்லது அந்த அமர்வு விசாரிக்கும் வழக்கு அல்லது பொருள் குறித்து கருத்து கூறுவது இல்லை.

இந்த இரண்டு அடிப்படை விதிகளில் இருந்து விலகுவது முறையற்றதாகும். நீதிமன்றத்தின் ஆளுமை குறித்த சந்தேகங்களை எழுப்பும்.

இந்த இரண்டு விதிகள் சமீபத்தில் மாற்றப்பட்டுள்ளன என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். இவை முழுமையாகப் பின்பற்றப்படவில்லை.

நாட்டுக்கு மிகவும் முக்கியமான, நீதிமன்றத்துக்கு மிகவும் முக்கியமான வழக்குகளை தாங்கள் விரும்பிய அமர்வுகளுக்கு, விருப்பப்படி  எந்தவிதமான அடிப்படையும் இல்லாமல் ஒதுக்கப்பட்டுள்ளன.

இத்தகைய போக்கு முற்றிலும் கைவிடப்பட வேண்டும்.

இதற்கு ஆவணங்களை ஏன் தெரிவிக்கவில்லை என்றால் நீதிமன்றத்துக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. ஏற்கெனவே ஏற்பட்ட பாதிப்புகளை மேலும் அதிகரிக்கவில்லை.

நீதிபதிகள் நியமனம் தொடர்பான மெமோரண்டம் ஆப் புரொசிசர்ஸ் தயாரிப்பது 2016ஆம் ஆண்டு வழக்கு ஒன்றின் மையப் பொருளாக இருந்தது.

ஆனால், இதே விஷயத்தை மற்ற பின்னால் வந்த அமர்வுகள் குறிப்பிடவேண்டிய தேவையே இல்லை.

ஆனால், ஐந்து நீதிபதிகளைக் கொண்ட குழுவுடன் விவாதித்து தலைமை நீதிபதி பரிந்துரைகளை மத்திய அரசுக்கு அனுப்பிவிட்டார். மத்திய அரசும் ஏற்றுக்கொண்டது.

இந்தப் பணி நீதிபதிகள் மாநாட்டில் விவாதிக்கப்பட்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனைவருடன் கலந்து முடிவு எடுக்க வேண்டிய விஷயம்.

அதனால் விஷயம் தெரியாத மற்ற நீதிபதிகள் இப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று 2017 மார்ச் மாதத்திலும் 27.10.2017ஆம் தேதி வேறு வழக்குகளிலும் கருத்து கூறியுள்ளன.

நீதிபதி கர்ணனுக்கு எதிரான வழக்கை விசாரித்த ஏழு உறுப்பினர் அமர்வில், நீதிபதிகளுக்கு இம்பீச்மெண்ட் அதாவது தண்டனை தரக்கூடாது, மாற்று நடைமுறை வகுக்க வேண்டும். அதனை நியமனத்தின்போதே வகுத்துவிட வேண்டும் என்று 2017 ஜூலை 4ம் தேதி தெரிவித்தது.

அந்த 7 நீதிபதிகளும் நீதிபதிகள் நியமன விதிகள் பற்றிப் பேசவில்லை.

இத்தகைய நிலைமை அறியாமல் முக்கிய விஷயங்கள் குறித்து முன்னுக்கு பின் முரணாக கருத்து தெரிவிக்கப்படும் குழப்பத்தை தவிர்க்க முடியும். இதற்கான பொறுப்பு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கையில் உள்ளது.

இவ்வாறு, நீதிபதிகள் ஜே. செலாமேஸ்வர், ரஞ்ஜன் கோகாய், மதன் பி லோகுர், குரியன் ஜோசப் ஆகிய நால்வரும் தங்கள் கூட்டுக் கடிதத்தில் கூறியுள்ளனர்.


நீதிபதிகளின் கடிதப் பிரதியை காண இங்கு சொடுக்கவும்:

https://drive.google.com/open?id=1Qc9ZkvKtWC9nVuYFIxDYon7aNo9MMrEO