கட்டுமானத்திற்கு உவர் நீர் உதவுமா?

பதிவு செய்த நாள் : 10 ஜனவரி 2018

வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயின்ட் என அனைத்திலும் நம் கட்டுப்பாட்டையோ தேர்வையோ மீறி எதுவும் நடக்காமல் பார்த்துக் கொள்வது அவசியம். நமது ஆலோசனை மற்றும் கண்காணிப்பு எப்பொழுதும் இருக்குமாறு பார்த்துக் கொள்வது, மிக அவசியம்.

கட்டுமானத்துக்கு அடிப்படையான பொருள்களில் ஒன்று தண்ணீர். ஆனால் பொதுமக்கள் அதன் தரம் எப்படி இருக்கிறது என்பது குறித்து எந்தவொரு ஆய்வும் நடத்துவதாக தெரியவில்லை. கிடைக்கும் நீரை கட்டுமானத்திற்கு பயன்படுத்திக்கொள்கின்றனர். எதிர்காலத்தில் இதனால் வரும் பிரச்சனைகளையோ ஆபத்தையோ ஒருபோதும் சிந்தித்துப் பார்ப்பதே இல்லை. கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் நீர் கட்டிடத்தின் ஆயுள் காலத்தை தீர்மானிப்பதில் பெரும்பங்கு வகிப்பதை மக்கள் உணரத் தவறுகின்றனர்.

மணல், கருங்கல் ஜல்லி, சிமெண்ட் ஆகியவற்றுடன் தண்ணீருடன் கலந்து தயாரிக்கப்படும். கான்க்ரீட்-ஐ கட்டுமானத்திற்கு பயன்படுத்துகிறது. இந்த கலவையின்போது சேர்க்கப்படும் தண்ணீர் மிக முக்கிய பங்கு ஆற்றுகிறது. நீரின் அளவு, அதன் தரம் ஆகியவற்றை பொருத்தே காங்க்ரீட்டின் வலிமை அமைகிறது. நீரின் அளவு அதிகமானால் அந்த கான்கிரீட் கலவையின் வலிமை குறைந்துவிடும். நீரின் அளவு குறையாமலும், சரியான அளவு இருக்கும்படி பயன்படுத்தவேண்டும். அவ்வாறு பயன்படுத்தினால் மட்டுமே கான்க்ரீட் சரியான வலிமையுடன் கட்டுவதற்கு ஏற்புடையதாக அமையும்.

கட்டுமானத்தில் உவர்நீர் பயன்படுத்தலாமா? கூடாதா? என்பதே பலரிடம் கேள்விக்குறியாக உள்ளது. கான்க்ரீட் கட்டிடங்களை உவர்நீர், உவர் மண், கடல்நீர் ஆகியவற்றைக்கொண்டு கட்டினால் அந்த கட்டுடம் பலவீனமாகும் என்று பலரும் நினைக்கின்றனர். அது உண்மைதான்.

உவர்ப்புச் சுவை உள்ள நீரையோ, மணலையோ கட்டிடம் கட்ட பயன்படுத்தினால், அந்த கட்டிடத்திற்கு அதிக நாட்கள் ஆயுட்காலம் இருக்காது. அதற்கு காரணம் அதில் பயன்படுத்தப்படும் கான்கிரீட் அல்ல. அதில் பயன்படுத்தப்படும் எஃகு கம்பிகளே காரணமாகும்.

பொதுவாக எஃகு, இரும்பு போன்ற உலோகங்கள்மீது உவர்நீர் பட்டுவிட்டால், அது துருபிடித்துப்போகும். அதேபோல் உவர்நீர் எஃகு கம்பிகள்மீது பட்டுவிட்டால், அந்த கம்பிகள் துருப்பிடிக்கச் துவங்கிவிடும். துருப்பிடித்த கம்பிகள் விரிவடைந்து, அதை சுற்றியுள்ள கான்கிரீட்-ஐ வலுவிழக்கச்செய்யும். இதன் விளைவாக கான்க்ரீட் தன் வலிமையை இழந்து உடையத்துவங்கும். இதனால் கட்டிடத்தின் ஆயுட்காலம் குறையும்.

உவர்நீரை பயன்படுத்துவது எப்படி?

கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் நீரை முதலில் பரிசோதிக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். நீரில் உப்பு, அமிலம், சர்க்கரை அளவு ஆகியவற்றில் எது இருந்தாலும் கட்டிடத்தை பாதிக்கும். ஆகையால் அந்த நீரை ஆய்வகத்தில் சோதிக்கவேண்டும். கட்டுமானத்திற்கு பயன்படுத்தும் நீர் ஐஎஸ்:3025-1986 தரநிலையை உறுதிபடுத்தவேண்டும்.

ஐஎஸ் தரநிலைக்கு என்றால் என்ன:

ஐஎஸ் என்பது இந்தியாவில் கட்டிடங்கள் கட்டும் பொறியாளர்கள் பயன்படுத்தும் தர நிர்ணய கோட்பாடுகளாகும். இதில் குறிப்பிடப்பட்டுள்ள கோட்பாடுகள் மற்றும் விதிமுறைகளின்படிதான் அனைத்து கட்டிடங்கள், விமான நிலையங்கள், ரயில்வே, பாலங்கள், அணைகள் ஆகியவை கட்டப்படவேண்டும்.கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் எந்தவொரு பொருளாகட்டும், அந்த பொருள் எப்படி இருக்கவேண்டும் என்று ஐஎஸ் தரநிலை கோட்பாடுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் நீரின் தரம் மற்றும் எவ்வளவு நீர் உபயோகிக்கவேண்டும் என்பது குறித்தும் ஐஎஸ் 3025 இல் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன் கோட்பாடுகள் கீழ் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆய்வுகள்

ஐஎஸ் தரநிலை

அளவு (மிகி/லிட்டர்)

கார-அமில நிலை
ஐஎஸ்3025:1983(பகுதி11)

3 - 11

சல்பேட்
ஐஎஸ்3025:1986(பகுதி-24)

20 - 1000

குளோரைட்
ஐஎஸ்3025:1988(பகுதி-32)

20 – 5000

இடைநீக்கப்பட்ட திடப்பொருட்கள்
ஐஎஸ்3025:1984(பகுதி-17)

1 - 3000

கரைந்த திடப்பொருட்கள்
ஐஎஸ்3025:1984(பகுதி-16)

10 - 1000

அமிலத்தன்மை
ஐஎஸ்3025:1986(பகுதி-22)

0 - 2500

காரத்தன்மை
ஐஎஸ்3025:1986(பகுதி-23)

0 - 5000

ஆவியாகும் எச்சம்
ஐஎஸ்3025:1984(பகுதி-18)

10 - 1000

நிலையான எச்சம்
ஐஎஸ்3025:1984(பகுதி-18)

10 - 5000

இந்த கோட்பாடுகளின்கீழ் கட்டுமானத்திற்கு நாம் பயன்படுத்தும் நீர் இணங்கவேண்டும். அவ்வாறு சரியாக இருந்தால், பிரச்சனையே இல்லை. நம் கட்டுமான பணியை எந்தவித தயக்கமுமின்றி தொடங்கலாம். ஆனால் வரையறுக்கப்பட்ட இந்த அளவில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் கண்டிப்பாக அந்த நீரை சரிசெய்தோ வேறு நீர் மாற்றியோதான் அதை பயன்படுத்தவேண்டும்.

கார - அமில நிலையை சரிசெய்வது எப்படி?

நீரின் அமில நிலை வரையறுக்கப்பட்ட கோட்பாடுகளுக்குள் இல்லையெனில், 1லிட்டர் நீரில் 10 மில்லி லிட்டர் சோடியம் ஹைட்ராக்சைட் மற்றும் ஃபெனாப்தலீனையும் சேர்த்தால், சீராகிவிடும்.

இதேபோல் காரநிலை கோட்பாடுகளுக்குள் இல்லையெனில், 1லிட்டர் நீரில் 50 மில்லி லிட்டர் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தையும், மெத்தில் ஆரஞ்ஜையும் சேர்த்து சீராக்கவேண்டும். பின்னர் இந்த நீரை கட்டுமான பணிகளுக்காக பயன்படுத்தலாம்.

உவர்நீரை சரிசெய்வது எப்படி?

ஆய்வில் நீரில் உப்பு அளவு கோட்பாடுகளுக்குள் இணங்கவில்லை என்றால், 100 லிட்டர் உவர் நீரில் 10 மில்லி லிட்டர் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை கலந்து சீராக்க வேண்டும். இப்படி சீராக்கப்பட்ட நீரை கான்க்ரீட் கலவையில் பயன்படுத்தலாம். சீராக்கப்பட்ட நீரை ”குயூரிங்” என்று சொல்லக்கூடிய கட்டுமானப் பணியில் ஒரு நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு இடைப்பட்ட காலகட்டத்திற்குள் செய்யப்படும் நீராற்றுதலுக்கு பயன்படுத்தலாம்.

எஃகு கம்பிகளை தவிர்க்கலாம்

கான்க்ரீட் கட்டுமான பணிகளுக்கு எஃகு கம்பிகளை பயன்படுத்தினால் இந்தவகை பிரச்சனைகள் ஏற்படும். இதுபோன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள கட்டுமான சந்தைகளில் புச்திய தொழில்நுட்பமான கருங்கல் கம்பிகள் (Basalt Reinforcent) தற்போது வந்துள்ளன. இந்த கம்பிகள் எரிமலை பாறைகளில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. எரிமலை கருங்கற்கள் உவர்நீரினால் பாதிப்படையாது. இந்த கருங்கல் கம்பிகள் சாதாரணமாக பயன்படுத்தும் எஃகு கம்பிகளைவிட இரண்டு மடங்கு வலுவானதாகும். ஆகையால் இவற்றை பலரும் வாங்கி கட்டுமான பணிகளில் பயன்படுத்தி வருகின்றனர்.

பல வருடங்களாக இது குறித்து ஆய்வு நடத்தி வரும் பொறியாளர் அர்னால்ட் வில்சன், கருங்கல் கம்பிகள் (Basalt Reinforcent) உவர்நீர், உவர் மண் ஆகியவற்றுடன் பயன்படுத்தினாலும் அது எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது. இதுவரை பல கட்டிடங்கள் அந்த கம்பிகள் மூலம் கட்டப்பட்டுள்ளன. அவை அனைத்தும் வலிமையாக இருப்பதாக தெரிவித்தார்.

இந்த கருங்கல் கம்பிகள் (Basalt Reinforcent) சாதாரண எஃகு கம்பிகளைவிட 89 சதவீத எடை குறைவானது. 10 மில்லி மீட்டர் சுற்றளவுகொண்ட 100மீ நீள இந்த கம்பிகளை ஒரு மனிதர் எளிதில் தூக்கிச்செல்லலாம். இந்தவகை கம்பிகளை தேவையான அளவிற்கு எளிதில் வெட்டி பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த கம்பிகள் அமிலம், துரு, அல்கலி போன்றவற்றால் பாதிப்பே அடையாது. இதற்கு எந்தவித சிறப்பு கோட்டிங்கும் கொடுக்கவேண்டிய அவசியமும் இல்லை. எஃகு கம்பிகளைவிட இந்த கருங்கல் கம்பிகள் (Basalt Reinforcent) அதிக இழுவிசை வலிமை கொண்டது.

இத்தகைய காரணங்களால் இந்த கருங்கல் கம்பிகளை (Basalt Reinforcent) கட்டுமானங்களுக்கு பயன்படுத்தலாம். இதனால், கட்டிடத்தின் ஆயுட்காலம் ஒருபோதும் பாதிக்காமல் காக்கலாம்.

இந்தவகை கருங்கல் கம்பிகளை உற்பத்தி செய்யும் இந்திய கம்பெனிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். இவற்றில் மும்பையில் உள்ள ஆரோ டெக்னிக்கல் டெக்ஸ்டைல்ஸ் பிரைவேட் லிமிடட் மற்றும் நிக்குஞ்ச் எக்ஸிம்ப் எண்டர்பிரைஸ் பிரைவேட் லிமிடட் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

இந்த கருங்கல் கம்பிகள் கட்டுமான தொழில் உயர்ந்தபட்ச தொழில்நுட்ப வெளிப்பாடுகளுடன் அமைந்துள்ளன. இந்தியா போன்ற ஏழை நாட்டில் இன்னும் எல்லோருக்கும் வீடு கட்டிக்கொடுப்பதை தன்னுடைய திட்டங்களில் ஒன்றாக ஏற்று அரசுகள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.

சாதாரண உருட்டுக் கம்பிகளைவிட நான்கு மடங்கு கூடுதல் விலையில் இந்த கருங்கள் கம்பிகள் விற்கப்படும். இவ்வளவு அதிக விலைக்கொண்ட கருங்கல் கம்பிகளை பயன்படுத்த எல்லோராலும் முடியுமா என்பது கேள்விக்குறிதான். ஆனால் பயனை நோக்கும்போது, குறைந்த விலைக்கு உற்பத்தி செய்து விற்க அரசு முயற்சி செய்தால் நன்றாக இருக்கும்போல் தோன்றுகிறது.


கட்டுரையாளர்: தினேஷ் குகன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation

வாசகர் கருத்துக்கள் :
karthi 11-01-2018 01:09 AM
அருமையான கட்டுரை இதை படித்தவர்கள் கண்டிப்பாக தன்னையே ஒரு சிவில் இஞ்ஜீனீயராக நினைத்துக் கொண்டு தங்கள் கட்டுமானங்களில் பயன்படுத்தும் அளவிற்கு பல தகவல்கள் உள்ளது. இது எனக்கு மிகவும் பயனாக அமையும். மேலும் இது போன்ற கட்டுரைகளை அதிகமாக அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி

Reply Cancel


Your comment will be posted after the moderation