கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 108

பதிவு செய்த நாள் : 25 டிசம்பர் 2017மராட்டிய வீரர் சிவாஜியை நடிகர் சிவாஜி கணேசன் சந்தித்ததும் சந்திக்காமல் போனதும்!

விழுப்புரம் சின்னையா கணேசன் என்ற நடிகர், வீர மராட்டிய மன்னர், சத்ரபதி சிவாஜியாக நாடகத்தில் நடித்ததும், ‘சிவாஜி’ என்ற பட்டம் பெற்றார். கணேசன் என்ற பெயரும் கூட சிவாஜியுடன் வந்தால்தான் முகவரியைப் பெறும் என்கிற அளவுக்கு, ‘சிவாஜி’ என்ற பெயர் பிரபலம் ஆனது, பொருந்திப்போனது.

இந்த வகையில், திரைத்துறைக்கு வருவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பே கூட, 1946ல், ‘சிவாஜி’ என்று போற்றப்பட்ட நடிகர், தமிழ் சினிமாவில் 277 படங்களில் நடித்தும்,  ஒரு படத்தில் கூட வீர சிவாஜியாக படம் நெடுக நடிக்கும் வாய்ப்பு பெறவேயில்லை!

‘ராமன் எத்தனை ராமனடி’ (1970) என்ற படத்தில் ஒரு காட்சியில், மராட்டிய மன்னர் சிவாஜியாக அவர் நடிக்கத்தான் செய்தார். ஆனால், முகலாயர்களைக் கதி கலங்கச்செய்து, பாரத நாட்டின் பண்பாட்டையும் ஆன்மிக மரபுகளையும் காத்த சத்ரபதி சிவாஜியாக, ஒரு முழுப்படத்தில் ‘சிவாஜி’ கணேசன்   நடிக்கவே இல்லை!

சின்ன வயதிலே பார்த்த கட்டபொம்மன் கூத்து அவர் மனதிலே பதிந்து, கட்டபொம்மனை முதலில் நாடகமேடையிலும், பிறகு திரைப்படத்திலும் அவர் சித்தரித்துக்காட்டி வெற்றியும் அடைந்தார். ஆனால் அவரை யாரும் ‘கட்டபொம்மன் கணேசன்’  என்று அழைக்கவில்லை. ‘சிவாஜி’ கணேசன் என்றுதான் அழைத்தார்கள். ஆனால், அந்த சிவாஜியை மட்டும் சிவாஜியின் தமிழ்த்திரைப்படப்பட்டியலில் காணமுடியாமல் போனது!

தனக்கு சிவாஜி என்ற பட்டம் வருவதற்கான நாடக வாய்ப்பு, நாடக நடிகர் கணேசனுக்கு அவருடைய 18வது வயதிலேயே, 1946ல் வந்தது. அது வந்த விதம் குறித்து சிவாஜி ‘எனது சுயசரிதை’ என்ற நூலில்  குறிப்பிட்டிருக்கிறார். ‘‘ஏழாவது சுயமரியாதை மாநாடு நடப்பதற்கான ஏற்பாடு நடந்துகொண்டிருந்தது.... அதற்காக அண்ணா, ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்’ என்ற நாடகம் எழுதினார்...அதில் எம்.ஜி.ஆர்., சிவாஜி கேரக்டரில் நடிப்பதாக இருந்தது. அவருக்காக உடையெல்லாம் தைத்தார்கள். ஆனால், என்ன காரணத்தாலோ தெரியவில்லை, எம்.ஜி.ஆர்., அந்தக் கேரக்டரில் நடிக்கமாட்டேன் என்று கூறிவிட்டார்....(நாடகம் நடத்தப்படுவதற்கான நாள் நெருங்கிக்கொண்டிருக்க)... அண்ணா என்னைப் பார்த்து, ‘கணேசா, நீ சிவாஜியாக நடிக்கிறாயா?’ என்றார்’’.

நாடகத்தின் தொண்ணூறு பக்கப் பிரதி, கணேசன் கையில் பகல் பதினோரு மணிக்குக் கொடுக்கப்பட்டது. அதன் பிறகு என்ன நடந்தது? ‘‘...(மூவருடன்), ஆறு மணியளவில் அண்ணா அலுவலகத்திற்குத் திரும்பினார். ‘அண்ணா, நீங்கள் இப்படி அமருங்கள்’ என்று கூறி, அவர் எழுதிக்கொடுத்த வசனங்களைப் பேசி நடித்துக்காட்டினேன்....அண்ணா ஓடி வந்து என்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டார். ...‘ஏழே மணி நேரத்தில் நீ இதை மனப்பாடம் செய்துவிட்டாயே! நீதான் சிவாஜி’, என்றார்.’’

சென்னை ஐகோர்ட்டுக்கு எதிரே மாநாடு நடந்தது. அப்பொழுது அங்கே ஒரு பெரிய அரங்கம் இருந்தது. ‘சிவாஜி  கண்ட இந்து ராஜ்ஜியம்’ அங்கே மூன்று மணி நேரம் நிகழ்த்தப்பட்டது.

‘‘யாரோ ஒரு சின்னப்பையன் சிவாஜி வேஷத்தில் குறுக்க நெடுக்க நடந்துகொண்டிருந்தானே, அவன் யார்?” என்று கேட்டார் பெரியார்.

‘‘அதற்கு, அவன் கணேசன் என்றொரு பையன் என்று என்னை அவர்முன் கூட்டிச்சென்று நிறுத்தினார்கள்’’.

‘‘அப்போது பெரியார், ‘நீதான் கணேசனா? இன்று முதல் நீ ‘சிவாஜி’ என்றார்.’’  

‘என்னுடைய வாழ்க்கை மேலே செல்வதற்கு எவ்வளவு உறுதுணையாக இருந்தது அந்தப் பெயர்’, என்று பிற்காலத்தில் கசிந்துருகிப்பேசுவார், ‘சிவாஜி’ கணேசன்!

ஈ.வே.ரா.வுக்கு கணேசன் என்ற பெயர் பிடிக்காமல் இருந்ததால், ‘இனி நீ சிவாஜி’ என்று பேசியிருக்கலாம். ஆனால் திராவிடத்திலே கூட இல்லாமல் அப்பால் மராட்டியத்து சிங்கமான சத்ரபதி சிவாஜியின் பெயரை இடுவதில் அவருக்கு என்ன அத்தனை மகிழ்ச்சி?

இது தொடர்பான கேள்வியை, ‘எனது சுயசரிதை’  நூலுக்காக சிவாஜி கணேசனிடம் உரையாடி, பதில்களைப் பெற்ற டி.எஸ்.நாராயணஸ்வாமி எழுப்பத்தான் செய்தார். தமிழ் மன்னர்களை விட்டுவிட்டு, ‘‘சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்’ என்று ஏன் எழுதினார் அண்ணா, என்று வினவினார். ‘அருமையான கேள்வி’ என்று ஆமோதித்த சிவாஜி,    எழுதப்பட்ட நாடகத்தின் மையக்கருத்தை எடுத்துக்கூறினார். அதாவது, தன்னுடைய வீரத்தாலும் ராஜதந்திரத்தாலும் நாட்டின் தலைவனாக  உருவெடுத்த ஒருவனால், பிராமணர்களின் சூழ்ச்சியால் தன்னை மன்னனாக முடிசூட்டிக் கொள்ள முடியவில்லையாம். பிராமணர்களின் ஆதிக்கத்திற்கு சிவாஜியும் பணியவேண்டிவந்ததாம். வீர சிவாஜிக்கே இந்த நிலையென்றால், வெங்காய மனிதர்களின் நிலையை நினைத்துப்பாருங்கள் என்று கூறுவதுதான் பெரியார் வழி, அண்ணா வழி என்று கூறிய சிவாஜி, அதை வழிமொழிந்தார்!

வெள்ளையர்கள் தங்கள் பிரித்தாளும் சூழ்ச்சிகளின் ஓர் அங்கமாக, ஆரியர்கள் இந்தியா மீது போர் தொடுத்து அதன் பூர்வகுடிகளை அடிமைப்படுத்தினார்கள் என்று கதைக் கட்டி விட்டார்கள். அதெல்லாம் வெறும் புளுகு என்று இன்று அறிவியல்பூர்வமாக தெரிந்துவிட்டது. ஆனால், ஆரிய மாயையை  முன்னெடுத்துச் சென்ற இயக்கம், பிராமணர்களை ஆரியர் என்று கூறி அவர்கள் மீது துவேஷத்தைப் பரப்பியது. அதுதான், சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியத்தின் முதலும், நடுவும், இறுதியும்!

பின்னாளில், மகாராட்டிரம் மராட்டியருக்கே என்ற கோஷத்துடன் எழுந்த சிவசேனை, சிவாஜி மகாராஜாவின் பிம்பத்தைத் தன்னுடைய குறுகிய நோக்கங்களுக்குப் பயன்படுத்திக்கொண்டதுபோல், திராவிட இயக்கம் சிவாஜியைத் தனக்குச் சாதமாக்கிக்கொள்ள முயன்றது. அன்றைய திராவிட அரசியலுக்கு, மராட்டிய வீரன் சிவாஜி ஏதோவொரு எசகுபிசகான முறையில் பயன்பட்டான். அதை நிறைவேற்றிக் கொள்ளும் பாதையில், சில அரசியல்வாதிகளுக்கு வி.சி.கணேசன் உபயோகப்பட்டார். திராவிட இயக்கத்தின் செல்வாக்கு சினிமா உலகத்தின் மீது வலுவாக இருந்த காலகட்டத்தில், சிவாஜியாக நடித்தவர் என்ற அடையாளம் வி.சி.கணேசனுக்கு உதவியது. முதல் படமான ‘பராசக்தி’யிலே கூட அவர் ‘சிவாஜி கணேசன்’ என்றுதான் அறியப்பட்டார்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு வந்த ஒரு திருப்பத்தில், ‘திருப்பதி கணேசா’ என்று அழைக்கப்படப்போகும் ஒரு தருணம் வந்தாலும், கணேசன் சிவாஜியானது ஆனதுதான். ஏனென்றால், மராட்டிய வீரன் சிவாஜிக்கு அண்ணா கற்பித்த பாத்திரத்தைவிடவும் பெரிய அளவிலான தேசிய பரிமாணம் இருந்தது. காங்கிரஸ் கட்சியில் இணைந்த சிவாஜி கணேசனுக்கு, சிவாஜி என்ற அடைமொழி சரியாகப் பொருந்திப்போனது!

பாரதியின் பார்வையில் வீர சிவாஜி எப்படி இடம்பெற்றார், பாரதியின் கவிதையின் எப்படி வெளிப்பட்டார்? தன்னுடைய போர்வீரர்களிடம் சிவாஜி பேசும் வீரவுரையை இந்தியா பத்திரிகையில் வடித்து (17.11.1906), ‘சிவாஜி தமது சைன்னியத்தாரிடம் கூறியது’ என்ற தலைப்பின் கீழ், பாரத மக்களின் தேசப்பற்றைத் தூண்டினார் பாரதியார். ‘பாரதப் பூமி பழம் பெரும் பூமி, நீரதன் புலவர் இன்னினைவு அகற்றாதீர், பாரத நாடு பார்க்கெல்லாம் திலகம், நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்’ என்ற பிரபல வரிகள் வரும் இந்தக்கவிதையில், நாட்டுக்கு நேர்ந்த துன்பங்களை சிவாஜி மகராஜா பட்டியலிட்டு,

‘பிச்சை வாழ்வுகந்து பிறருடைய ஆட்சியில் அச்சமுற்றிருப்போன் ஆரியன் அல்லன்’ என்கிறார். இங்கே ‘ஆரியன்’ என்பது பண்பாடு உடையவர்களைக் குறிக்கும், பிறப்பால் வரும் இனத்தை அல்ல. கடவுள் கூட, ‘ஆரியன்’ என்று தமிழ் நூல்களில் அழைக்கப்படுகிறார். ‘ஆரியன் கண்டாய், தமிழன் கண்டாய்’ (தேவாரம் 844, 5), ‘பாசமாம் பற்றறுத்து எம்மைப் பாரிக்கும் ஆரியனே’ என்று திருவாசகம் பேசுகிறது. ஆனால் ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்’ நாடகத்தில், அது ஒரே ஒரு சாதியின் பெயர்! சிவாஜியை தேசப்பற்றின் மந்திரமாகப் பயன்படுத்திய பாரதியைப்போலத்தான் அரவிந்தரும் செயல்பட்டார். சிவாஜியின் வீரப் படைத்தலைவர்களில் ஒருவனான பாஜி ராவ் குறித்து அழகான ஓர் ஆங்கில கவிதையை அவர் இயற்றினார்.

வீர சிவாஜியைக் கட்சிப்பிரசாரத்திற்குப் பயன்படுத்திய ஒரு நாடகத்தில் நடித்தது இருக்கட்டும், அந்த மராட்டிய வீரனின் முழு  சரித்திரத்தைத் திருத்தமாக  நடிக்கக்கூடிய ஒரு வாய்ப்பு சிவாஜி கணேசனுக்கு வராமல் இல்லை. அதைப் பற்றிய செய்தி, 1955ன் முடிவில், ஒரு பத்திரிகையில் வந்தது. ‘‘வீர சிவாஜியின் விஜயம்” என்று தலைப்பிடப்பட்ட அந்த செய்தி தந்த தகவல் இதுதான் --– சிவாஜி கணேசனுக்கு அடைமொழியாக இருக்கும் சிவாஜி வேடத்தில் அவரைக் கண்டுகளிக்கவேண்டும் என்ற ஆவல் ரசிகர்களுக்கு உண்டு. அந்த ஆவல் வெகுவிரைவிலேயே பூர்த்தியாகப் போகிறது. ‘தெனாலிராமன்’ படத்தைத் தயாரித்துவரும் விக்ரம் புரொடக்ஷ்ன்ஸார், அடுத்து சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கையைப் படமாக்கத் திட்டமிட்டு வருகிறார்கள். இதில் சத்ரபதியாக, ‘சிவாஜி’ நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். தயாரிப்பாளரான பி.எஸ்.ரங்கா இப்படத்தை டைரக்ட் செய்வார்’’.

இப்படி செய்தி வந்ததே தவிர, சிவாஜி நடித்த ‘சிவாஜி’ படம் வெளிவரவேயில்லை! சிவாஜியை வீரசிவாஜியாக காணவேண்டும் என்ற ரசிகர்களின் ஆவல் தீரவேயில்லை. சில ஆண்டுகளுக்குப் பிறகு சிவாஜியைத்  தன்னுடைய ‘நிச்சயதாம்பூலம்’ (1962) படத்தில் நடிக்கவைத்து இயக்கினார் பி.எஸ்.ரங்கா. வீர சிவாஜி பற்றிய பேச்சே இல்லை.

மராட்டிய வீரர் சிவாஜியின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்க மராட்டிய திரைப்படத்துறையில் அருமையான முன்னுதாரணங்கள் இருந்தன. பாபு ராவ் பெயின்டர் என்ற மேதை, ‘சிம்ஹகத்’ என்ற படத்தை, தானே சிவாஜியாக நடித்து இயக்கியிருந்தார் (1923). அரங்க அமைப்பிலும் லைட்டிங்கிலும் அசத்திய இந்த படத்தின் பெரிய வெற்றிக்குப் பிறகுதான் அன்னிய ஆட்சி, திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி விதிக்கத்தொடங்கியது!  மவுனப் படமான இந்த ‘சிம்ஹகத்’ திரைப்படத்தை, சாந்தாராம் 1933ல் பேசும் படமாக எடுத்தார். பால்ஜி பெண்டார்கர் என்ற இன்னொரு திரைப்பட மேதை, 1962ல் ‘சத்ரபதி சிவாஜி’ என்ற அருமையான படத்தை எடுத்தார். இதை இன்றும் இணையத்தில் கண்டுகளிக்கலாம். சி. ராமச்சந்திராவின் அருமையான பாடல்களும் உண்டு. தாய் ஜீஜாபாயின் மீது எல்லையற்ற மரியாதையும், பாரத பூமியின் பாரம்பரியங்களில்  மதிப்பும் கொண்ட மன்னவனின் சரித்திரம் ஓரளவு இந்த படத்தின் வாயிலாக விளங்கும். வீர சிவாஜியை ஜாதிக்குடுக்கைக்குள் அடைத்து அதை  பூதாகாரமாக்கும் பிரயத்தனங்கள் இந்த படத்தில் இல்லை. ‘சத்ரபதி சிவாஜி’யை எடுத்த பால்ஜி பெண்டார்கருக்கு பின்னாளில் பால்கே விருதும் வழங்கப்பட்டது (1991).

பண்பாட்டு சிறப்புடைய சில படங்களில் நடித்து, மக்களுக்கு சேவை செய்யும் சிறந்த வாய்ப்பு சிவாஜி கணேசனுக்கு கிடைத்தாலும்,  சரித்திர சிவாஜியாக நடிக்கும் பேறு மட்டும் அவருக்குக் கிட்டவில்லை. முதல்வராக அண்ணா இருந்து மறைந்த ஆண்டில் தயாரிப்பிலிருந்த ‘ராமன் எத்தனை ராமனடி’ திரைப்படத்தில் (1970), ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்’ நாடகத்திலிருந்து ஒரு காட்சியை நடித்துக்காட்டினார் சிவாஜி. நன்றி அறிதலாகவும் இறந்தவருக்கு காணிக்கையாகவும் செய்திருக்கலாம்.

ஜாதி என்கிற பரிமாணத்தை மீறி, தெலுங்கில் வந்த ‘பக்த துக்காரா’மில், வீர சிவாஜியாக வெளிப்பட்டார் சிவாஜி (1973). இந்த படத்தில், ஏ. நாகேஸ்வர ராவ் துக்காராமாக நடித்தார். கோயிலிலிருந்து பாண்டுரங்கன் விக்கிரகம் காணாமல் போகும் போது, பழி துக்காராம் மீது விழுகிறது. தீர்ப்பு கூற சிவாஜி மகராஜா நேரில் வருகிறார். துக்காராமின் பக்தி, பாண்டுரங்கனை மீண்டும் சன்னிதிக்கு வரவழைக்கிறது. ‘எனக்கு நீங்கள் நிரபராதி என்று ஏற்கனவே தெரியும். ஆனால் உலகுக்கு உங்களுடைய மகத்துவம் தெரியவேண்டும் என்று தான் சற்றுக்கடுமையாக இருந்தேன்’ என்கிறார் சிவாஜி! ‘என்னுடைய மாங்கல்யம் காப்பாற்றப்பட்டது’ என்று கூறும் துக்காராமின் மனைவியிடம், ‘காப்பாற்றப்பட்டது உங்களுடைய மாங்கல்யம் மட்டும் அல்ல அம்மா...இந்து சமயத்தின் புகழ் இமயம் வரை வளர்ந்திருக்கிறது’ என்கிறார் சிவாஜி! இந்த வகையில் வீர சிவாஜியாக நடித்தவரும் நம்முடைய சிவாஜிதான்! என்ன கம்பீரம்! எத்தனை மிடுக்கு! அபாரம்! நல்ல நடிப்பு மிளிர்வதற்கு உயர்ந்த ஒரு சூழல் தேவைப்படுகிறது! அது ‘பக்த துக்காரா’மில் நல்ல முறையில் இருந்தது.  

 (தொடரும்)