சேலம் ஸ்டீல் ஆலையை தனியார் மயமாக்க வேண்டாம் : பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

பதிவு செய்த நாள் : 17 டிசம்பர் 2017 02:14

சென்னை,

தமிழகத்தில் உள்ள உயர்திறன் கொண்ட சேலம் ஸ்டீல் பிளாண்ட் ஆலையை தனியாருக்கு விற்பனை செய்ய வேண்டாம் என்று பிரதமருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் 15.5 கிலோ மீட்டர் பரப்பில் சேலம் ஸ்டீல் பிளாண்ட் இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலை நாற்பது ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது.
இங்கு 2000 பேருக்கு வேலை வழங்கப்படுகிறது. சேலம் ஸ்டீல் பிளாண்டின் நிதிநிலைமை நாளுக்கு நாள் அபிவிருத்தி அடைந்து வருகிறது. 2015-16ல் இருந்த நிலைமையை விட 2017-18ல் நிதி நிலைமை மேம்பட்டுள்ளது. இந்த ஆலையை விரிவுப்படுத்த ரூபாய் 2005 கோடியை மாநில அரசு வழங்கி உள்ளது. இந்த தொகையை குறைந்த வட்டிக்கடன், மூலதன மானியம், முதலீட்டு மானியம், மின்சார வரி விதிப்பிலிருந்து விலக்கு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றிக்கு செலவிட முடிவு செய்யப்பட்டது.

சேலம் ஸ்டீல் பிளாண்ட் நிலை மேம்பட கால அவகாசம் அவசியம். எனவே சேலம் ஸ்டீல் பிளாண்டை தனியார்மயமாக்கக் கூடாது என்று மத்திய இரும்பு, உருக்குத் துறை, சேலம் ஸ்டீல் பிளாண்ட் ஆகியவற்றுக்கு ஆலோசனை தரும்படி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் பழனிசாமி இன்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.