கொசு வலை மூலப்பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரியைக குறைக்கதமிழ் மாநில காங்கிரஸ் கோரிக்கை

பதிவு செய்த நாள் : 17 டிசம்பர் 2017 00:35

சென்னை

நாடு முழுவதற்குமான ஒரே வரி என்ற முறையில் அமல்படுத்தப்படும் ஜிஎஸ்டி படி உள்நாட்டில் தயாரிக்கப்படும் கொசுவலைக்கான மூலப்பொருட்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி  விதிக்கப்படுகிறது. அதனால் தமிழகத்தில தயாரிக்கப்படும் கொசுவலைகளின் விலை உயர்த்தப்பட்டதால் விற்பனை குறைந்துள்ளது. அதனால் கொசு வலை தயாரிப்புக்கு உதவும் மூலப்பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரியை குறைக்க தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கரூர் மாவட்டப் பகுதியில் 90 சதவீதமும், சேலம் மாவட்டப் பகுதியில் 10 சதவீதமும் சாதாரண கொசு வலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கரூர் பகுதியில் கொசுவலைக்கான நூல் தயாரிப்பதற்கு 100 கூடங்களும், கொசுவலைக்கு துணி நெய்வதற்கு 3 ஆயிரம் தொழிற்கூடங்களும் உள்ளன. கொசுவலைக்கான மூலப்பொருட்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி  விதிக்கப்பட்டுள்ளது. அதனால்  கொசுவலைகளின் விலை உயர்ந்துள்ளது.
ஆனால் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி ஆகும் தரமற்ற கொசுவலைக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த 17.5 சதவீத ஜிஎஸ்டி 5 சதவீத இறக்குமதி வரியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த 5 சதவீத வரியையும் ரீபண்ட் ஆக்ட் என்ற சட்டத்தின் மூலம் வெளிநாட்டு கொசுவலைக்கு அந்த நாட்டு நிறுவனம் திரும்ப பெற்றுக்கொள்ள முடியும். இக்காரணங்களால் தமிழகத்தில் கரூர் மற்றும் சேலத்தில் தயாரிக்கப்பட்டுள்ள சுமார் 200 கோடி மதிப்பிற்கும் மேலான தரமான கொசுவலைகள் விற்கமுடியாமல் தேக்கமடைந்துள்ளன

தமிழகத்தில் கரூர் மற்றும் சேலம் மாவட்டப் பகுதிகளில் கொசுவலை தயாரிப்பிலும், விற்பனை செய்வதிலும் நேரடியாக சுமார் 5 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வருடத்திற்கு கொசுவலை மூலம் சுமார் ரூபாய் 500 கோடி வர்த்தகம் உள்நாட்டிலேயே நடைபெறுகிறது.

எனவே நம் நாட்டிலேயே தயாரிக்கப்படும் கொசுவலைக்கு ஜிஎஸ்டி யை வெகுவாகக் குறைக்க வேண்டும்.

நம் நாட்டில் கொசுவலை தயாரிக்கும் நிறுவனங்களை ஊக்கப்படுத்துவதையும், இந்த தொழிலையே நம்பியுள்ள சுமார் 1.50 இலட்சம் பேரின் வாழ்வாதாரத்தையும் முக்கியமானதாக கருதி மத்திய பா.ஜ.க. அரசு செயல்பட வேண்டும்.

மேலும் கொசுவலை துணி நூல் உற்பத்தியாளர்களின் கோரிக்கையான ரசாயனக் கொசுவலை உற்பத்திக்கான அனுமதியை கொடுக்க முன்வர வேண்டும்.  சிறு தொழில்கள் உற்பத்தி செய்யும் கொசு வலைகளின் ஏற்றுமதிக்கு அரசு உதவ வேண்டும். இவ்வாறு தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் அறிக்கை விடுத்துள்ளார்.