கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 106

பதிவு செய்த நாள் : 11 டிசம்பர் 2017இந்தியில் பாடிய தமிழ் சினிமா அன்று முதல் இன்று வரை!

‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் ஒரு இந்திப்பாடல். ‘டிங்க டிங்க டிங்க டிங்கணா’ என்று தொடங்குகிறது பாடல். ராஜஸ்தான் பாலைவனத்தில், பவேரிய கொள்ளைக்காரக் கூட்டத்தின் மத்தியிலே ஆடப்படுகிற நடனக்காட்சியில், பாடல் அமைந்திருக்கிறது. 'ஷோலே'யில் ‘மெஹ்பூபா மெஹ்பூபா’ பாடல் காட்சி போன்றதான சூழல்.

அந்தக் காலப்பாணியென்றால், தமிழிலேயே பாடலைப் போட்டிருப்பார்கள். இந்த காலத்தில், சொற்களுக்கு முக்கியத்துவம் இல்லை. பாடல் தருகிற ‘பீலிங்’ தான் முக்கியம்.

கொள்ளையர்களின் பொருள் வேட்டைக்குப் பிறகு நடக்கும் இன்ப வேட்டை என்ற  தொனியில் பாடல் அமையவேண்டும். ராஜஸ்தான் மண் வாசம் ஏற்படுத்த இந்தியில் பாடலின் சொற்கள் இருந்தாலும், இலக்கிய வகையிலான வரிகள் இல்லை. சொற்களே கூட டம்மியாகத்தான் அமைந்தனவோ என்ற எண்ணத்தை தருவதுபோன்ற ஓர் அமைப்பு. ஆனால் காட்சிக்குத் தோதாக அது அமைந்திருப்பதால், பாடலின் செறிவுக்குக் கூட அது பயன்படுகிறது!

ஸ்கார்லெட் மெல்லிஷ் வில்ஸன் என்ற ஆங்கில மாடல்தான் அந்த அசத்தலான நடனத்தின் முக்கிய ஆட்டக்காரியாக வருகிறார். கொள்ளைக்காரர்கள் முன்பு வெள்ளைக்காரிக்கு என்ன வேலை என்று தோன்றலாம். ஆனால் அவர் வெள்ளைக்காரியாகத் தெரியவில்லை. ஏதோவொரு அநாமதேய கலப்பு இனத்து ஜிப்ஸி போல் தோற்றம் கொடுக்கிறார். உதய்குமாரின் வரிகளும் பத்மலதாவின் போக் பாணியிலான தொனியும், குதித்தோடும்படியான ஜிப்ரானின் இசையும், அசத்தலான சத்யனின் கேமரா கோணங்களும், சிறப்பான நடன அமைப்பும் இணைந்து, பாடலை எங்கோ கொண்டுபோய் வைத்துவிட்டன.

‘தீரன் அதிகாரம் ஒன்று’,  அதிகாரம் இரண்டாக வெளிவரும் போது, இந்த ‘டிங்க டிங்க டிங்க டிங்கணா’வின் நாதவொலி அதிலேயும் தொடரக்கூடிய அளவில் பாடல் இருக்கிறது. ஆக, ஒரு தமிழ் படத்தில் வந்த இந்தி பாடலுக்கு 'ஜே' என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது! ஆனால் ஒன்று. 'தீரன்' படத்தில் அது புகுத்தப்பட்ட ஒன்றாக இல்லை. காட்சிக்குப் பொருத்தமான ஒன்றாக அமைந்திருக்கிறது.

'இந்தி ஒழிக' கோஷமும், ‘இந்தித் திணிப்பு’ கண்டனங்களும் அரசியல் மேடைகளிலிருந்து ஒரு காலத்தில் வலுவாகவும் இன்று வலுவில்லாமலும் ஒலித்தாலும், இந்தி சினிமாவின் தாக்கம் தமிழ் சினிமா மீது தொடர்ந்து இருந்துகொண்டுதான் வந்திருக்கிறது.

பாலிவுட் என்று குறிப்பிடப்படும் மும்பையில் மையம்கொண்டு இந்தியாவெங்கும் பார்வையாளர்களை கொண்ட இந்தி சினிமா, அனைத்திந்திய பரிமாணத்தை கொண்டது. அந்த வகையில், அதன் நிதி ஆதாரங்களும் தொழில்நுட்ப வலுவும், பிராந்திய சினிமாக்களைவிட பலமானவை, வளமானவை.

எம்.எஸ்.விஸ்வநாதன், தமிழ் சினிமாவின் மெல்லிசை மன்னராக இருக்கலாம். ஆனால் அவரும் கூட நவுஷாத்தைப் கேட்டு வளர்ந்தவர்தான்! அவரைத் தன்னுடைய தந்தையைப்போல் பாவித்தவர்தான். மெல்லிசை மன்னர்களின் கைவண்ணம் அறுபதுகளின் தொடக்கத்தில் ஒரு புதிய அலையாக எழுந்ததற்கு இந்தி சினிமாவின் சங்கர்– ஜெய்கிஷனின் இசையும் ஒரு வலுவான தாக்கமாக அமைந்தது.  இந்தி சினிமா இசையின் தாக்கத்தைத் தமிழ் திரை இசை ஏற்றது. இன்னுமொரு படி தாண்டி, சிலர் இந்தி மொழிப்பாடல்களையே கூட தங்களுடைய படங்களில் பயன்படுத்தினார்கள்.

'தீரன்' படம் வெளிவந்துள்ள இந்த 2017க்கு எண்பது வருடங்களுக்கு முந்தியதான செய்தி. தியாகராஜ பாகவதர் நடித்த ‘நவீன சாரங்கதரா’  படம் (1936). கே. சுப்ரமணியம் இயக்கம்.

ஹஸ்தினாபுரத்து மன்னன், தன் மகன் சாரங்கதரனுக்காகப் பெண் தேடப் போய், மகனுக்காக நிச்சயித்த சித்திராங்கத மன்னனின் மகள் சித்திராங்கியைத் தானே மணக்கப்பார்க்கிறான். அவள் மீது அவனுக்கு அவ்வளவு மோகம் பிறந்துவிடுகிறது.

சித்திராங்கிக்கோ சாரங்கதரன் மீது கொள்ளை ஆசை. ஆனால், தந்தை விரும்பும் பெண்ணை ஏறெடுத்துப் பார்க்க சாரங்கதரன் மறுத்துவிடுகிறான். தொடரும் சூழ்ச்சிகளிலும் சம்பவங்களிலும் தன் தந்தையான மன்னன் கொடுத்த தண்டனைக்கு ஆளாகி, கைகள் வெட்டப்பட்ட நிலையில் நிற்கிறான் சாரங்கதரன்.

அப்போதுதான் அந்த இடத்தில் ‘யதேச்சையாக’ ஒரு சன்னியாசினி (பெண் துறவி) வருகிறார். நடந்ததையெல்லாம் ஞானதிருஷ்டியால் அறிந்து, வெட்டுண்ட சாரங்கதரனின் கைகள் பறந்து வந்து ஒட்டிக்கொள்ளும் வகையில் ஆசீர்வாதம் புரிகிறார்.

அந்த சன்னியாசினி வேடத்தில் நடித்து, தன்னுடைய பாடல்களைப் பாடியவர், இந்துபாலா என்ற பஞ்சாபி பாடகி. அம்ருதஸரஸில் பிறந்த இந்துபாலாவின் தாய் ராஜ்பாலா, சர்க்கஸ்ஸில் பணியாற்றியவர்.  கோல்கட்டாவில் செவிலியராகப் பயிற்சி எடுத்த இந்துபாலா, ஆஸ்பத்திரியிலிருந்து விலகிப்போய் இசைப் பயிற்சியில் ஈடுபட்டு பிரபல கிராமபோன் பாடகியாக உருவெடுத்தார். கதாநாயகனுக்கு அருள் செய்யும் துறவியாக இவரை 'நவீன சாரங்கதரா'வில் சுப்ரமணியம் நடிக்க வைத்து, இரண்டு இந்தி பாடல்கள் பாடச் செய்தார்.

ஹஸ்தினாபுரம் என்ற வடக்கத்திய ராஜ்ஜியத்தில் நடப்பதாக கதை அமைக்கப்பட்டிருந்ததால், சன்னியாசினி பாடும் பாடல்கள் இந்தியில் அமைந்தன. ‘கிருஷ்ணஜி கிருஷ்ணஜி’ என்று தொடங்கும் ஒரு பாடலும், ‘மேரே தோ கிரிதரகோபால்’ என்ற பிரபல மீரா பஜனும் இந்துபாலா பாடினார். ‘கல்கத்தா மிஸ். இந்துபாலா தமிழில் பேசுவதையும் பாடுவதையும் கேட்டு மகிழுங்கள்’ என்று விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால் அவர் தமிழில் பாடியதாக தெரியவில்லை.

பழைய கிராமபோன் பாடல்களில் இந்துபாலா பாடியதைக்கேட்கும் போது, காத்திரமான குரலில் உணர்ச்சி வெளிப்படும் வகையில் பாடக்கூடியவர் என்று தெரிகிறது. 'மிஸ் சுந்தரி' என்ற பெயரில் 1937ல் வந்த ஒரு தமிழ் படத்தில், இந்துபாலாவின் தமிழ் பாடல் ஒலித்தது! சென்னை கடற்கரையில் கதாநாயகி மோட்டாரில் வரும் போது, ரேடியோவை ஆன் செய்தவுடன் இந்துபாலாவின் மேற்படிப் பாடல் வருவதாகக் காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

எம்.ஜி.சக்ரபாணிக்கு இன்ஸ்பெக்டர் வேடம் கிடைத்த 'இரு  சகோதரர்கள்' (1936) படத்தில், கே.பி.கேசவன் என்ற பிரபல நாடக நடிகர் முக்கிய வேடத்தில் நடித்தார். அவர் இந்துஸ்தானி இசையில் பாடுவதாக ஒரு இந்தி பாடல் அமைந்தது. படிப்பும், உலக அறிவும் இல்லாமல் இசையையும் நடிப்பையும் பெரிதாக கருதும் பாத்திரத்திற்கு வலுவூட்டும் வண்ணம், அந்த இந்துஸ்தானி பாடல் ஒலித்தது.

‘சதி அனுசூயா’ (1937) என்ற படத்தில், அத்திரி முனிவர் ஹரி தியானத்தின் பெருமையை ஒரு இந்தி பஜன் வாயிலாக வெளிப்படுத்துகிறார். அத்திரி முனிவர் இருந்த காலத்தில் இந்தி மொழியே இல்லாமல் இருந்திருக்கலாம்...ஆனால் மக்களுக்குப் பக்தி பாவத்தின் பெருமையைச் சொல்ல ஒரு இந்தி பஜன் பாடலைச் சேர்த்தார்கள் போலும். பிரேம் சேதனா இயக்கிய இந்த படத்தில், ராமகோடி சுவாமிகள், அத்திரி மகான் வேடத்தில் நடித்தார். அந்த இந்தி பஜன் அவருக்கு நன்றாகத் தெரிந்த பாடல் என்ற காரணத்திற்காக சேர்க்கப்பட்டிருக்கலாம். தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்தில் இப்படியெல்லாம் நடந்தது.

‘உத்தமி’ (1943) என்ற படத்தில், கதாநாயகியை தாசியாக ஆக்க முயல்பவராக டி.பி.ராஜலட்சுமி நடித்தார். அதில் பழம்பெரும் சிரிப்பு நடிகரும், வில்லன் நடிகருமான எம்.ஆர். சாமிநாதன் மிட்டாய் விற்பவராக வந்து, ‘ஆவோ பாயி, மிடாயி லேலோ’ என்று இந்தியில் பாடினார் (வாங்க சகோதரர்களே, இந்த மிட்டாய் வாங்குங்க).

நாற்பதுகளில் தொடங்கி ஐம்பதுகள் வரை, இந்தி பாடல் மெட்டுக்களை ஒரேயடியாக திருடும் ஒரு வழக்கம் மேலோங்கியிருந்தது. அதற்கு எதிராக ஒரு  இயக்கம் போல் சிலர் குரல்கொடுத்ததும் உண்டு. ஆனால், இந்தி மெட்டுக்களின் எளிமையும் வசீகரமும் பலரை ஈர்த்தன. கண்ணதாசன் எடுத்த முதல் படமான ‘மாலையிட்ட மங்கை’யின் ஹிட் பாடலான ‘செந்தமிழ் தேன்மொழியாள்’ இந்தி மெட்டுத்தானே! ‘பராசக்தி’ பேசினாளோ இல்லையோ, அவள் பாடியது இந்தி ராகத்தில்தான்!

தனிப்பெரும் நடிகராக ஐம்பதுகளின் தொடக்கத்தில் கருதப்பட்ட நாகையா, ‘என் வீடு’ (1952) என்ற படத்தில் ஒரு  இந்தி மொழிப்பாடலை அமைத்தார். கதாநாயகன்,  ஐந்து லட்ச ரூபாயுடன் தங்கம் வாங்க, அவனுடைய முதலாளியால் மும்பைக்கு அனுப்பப்படுகிறான். அங்கே லீலா என்பவள் அவனை மயக்கிப் பணத்தைப் பறிக்கிறாள். அப்போது அவள், ‘மை ஹஸ்தி காதி ஆயி, மஸ்த ஜவானி ஆயி’ என்று பாடுகிறாள் (நான் பாடிக்கொண்டும் சிரித்துக் கொண்டும் வந்தேன், மயக்கும் வாலிபத்தின் உருவமாக வந்தேன்). இதே போல், ‘டான்ஸ் பார்ட்டி’ என்ற தலைப்பில் இன்னொரு நீண்ட இந்தி பாடல் ‘என் வீடு’ படத்தில் இருந்தது. மும்பையில் நடக்கும் சம்பவங்களுக்குப் பொருத்தமாக, பாடல்கள் இந்தியில் அமைக்கப்பட்டிருக்கக்கூடும். இப்படி அமைத்ததில் நாகையாவுக்கு இன்னொரு நன்மை இருந்தது. அவர் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தன் படத்தை எடுத்ததால், எந்த மாற்றமும் இல்லாமல் இந்த இரு இந்தி பாடல்களையும் தன்னுடைய தமிழ், தெலுங்குப் பிரதிகளில் அப்படியே பயன்படுத்திக்கொள்ளும் சவுகரியமும் அவருக்கு அமைந்தது.

தமிழ்நாட்டின் சமூக, அரசியல் மற்றும் பண்பாட்டுச் சூழலில், தமிழ் இசைதான் சிறந்தது என்று மார்தட்டுவது ஒரு போக்காக உள்ளது. மக்களுக்கு சாஸ்திரிய இசை மீது ருசியோ அதைப் பற்றிப் பரிச்சயமோ அதிகம் இல்லாமல் இருந்தாலும், தமிழ் என்ற அடையாளம் அவர்களுக்குத் தெரியும் அல்லவா?  நாம்தான் சிறந்தவர்கள் என்று கூறுவதை அவர்கள் ஏற்பார்கள்! அந்த வகையில், தமிழ் இசைக்கும் (சிவாஜி) இந்துஸ்தானி இசைக்கும் (மலையாள நடிகர் திக்குரிசி சுகுமாரன் நாயர்) ஒரு போட்டி, 'தவப்புதல்வன்' படத்தில் உள்ளது. ‘உலகின் முதல் இசை தமிழ் இசையே’ என்று சிவாஜிக்கு டி.எம்.சவுந்தரராஜன் பாடினார். ‘சங்கீத் குலோன் கி பகியா ஹை’ (சங்கீதம் என்பதொரு மலர்த்தோட்டம்) என்று திக்குரிசிக்கு பி.பி.ஸ்ரீநிவாஸ் பாடினார். ஹீரோவை ஜெயிக்க வைப்பதற்காக கதையை அவர் வெற்றி பெறுவதுபோல் அமைத்தாலும், பி.பி.எஸ்ஸின் பாடல் பகுதியும் அபாரமாக அமைந்தது. இந்தி மொழியின் அழகும், அது இசைக்கு ஏற்ப வளைந்துகொடுக்கும் பாங்கும் பாடலில்  மிக அழகாக  அமைந்தன.

இந்தி மொழியை எம்.ஜி.ஆரும் விட்டுவிடவில்லை. ‘சிரித்து வாழ வேண்டும்’ (1974) என்ற படத்தில், ‘மேரா நாம் அப்துல் ரஹ்மான்’ என்ற பல்லவியை வைத்தார். முஸ்லிம் கதாபாத்திரத்திற்கு அது பொருத்தமாக இருந்தது. ‘நவரத்தினம்’  (1977) படத்தில் ஒரு முழு இந்தி பாடலிலேயே மக்கள் திலகம் பங்கேற்றார். படத்தில் அவர் சந்திக்கும் ஒன்பது பெண்களில் ஒருவர் ஜரினா வஹாப். படத்தில் அவர் ஒரு வடநாட்டு நடன நடிகை. அவருடைய மேடைநிகழ்ச்சிக்கு அவருடன் நடிக்கும் நடிகர் வராததால், தற்சயலாக எம்.ஜி.ஆர்., அந்த வேடத்தை ஏற்பதாகக் கதை செல்கிறது. ‘லட்கே ஸே மிலி லட்கி’ என்று பாடுகிறார் எம்.ஜி.ஆர்., (பையனைப் பெண் சந்தித்தாள்). பி.எல். சந்தோஷி என்ற பழைய கதாசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர் அந்தப் பாடலை எழுதினார். 1978ல் மறைந்த இவருடைய கடைசி ஆக்கங்களில் ஒன்றாக இந்தப் பாடல் இருக்கவேண்டும். ஜேசுதாஸூம் வாணி ஜெயராமும் பாடினார்கள்.

‘அவர் எனக்கே சொந்தம்’ (1977) என்ற ஆரம்பகால இளையராஜா படத்தில், வி.கே. ராமசாமி ஒரு பாடகராக வருகிறார் (அவருக்கு டி.எம்.எஸ். பின்னணி பாடுகிறார்). ‘தொலி நேனு ஜேஸின’ என்று தியாகராஜ கீர்த்தனையைப் பாட ஆரம்பித்தவர், ரசிகர்களின் கூப்பாடுகளால்  அதன் பின்னர் வந்த கல்யாணி ராக ஆலாபனையை அப்படியே விட்டு விட்டு, இந்தி ஹிட் பாடலான ‘கபீ கபீ மேரே தில் மே’ என்று பாடவேண்டிய சூழ்நிலை வருகிறது! ஹிட்டான இந்தி  பாடல்களின் தாக்கம் அதிலிருந்து தெரிகிறது. வடநாட்டு நாயகன் தமிழ் பெண்ணை காதலிக்கிறான் என்று கதை சொன்ன  மகேந்திரன், தன்னுடைய 'நண்டு' (1981) படத்தில் இரு இந்திப் பாடல்களை அமைத்தார். கைஸே கஹுன் (எப்படிக் கூறுவேன்) என்ற பாடலை புபேந்தரும் ஜானகியும் பாடினார்கள். இன்னொரு பாடல், ஜானகி குரலில் ஒலித்தது (ஹம் ஹை அகேலே). இந்தி பாடல்களை பி.பி.ஸ்ரீநிவாஸ் எழுதினார்.

கடவுள் மனித உருவில் மனிதனை சந்திக்க வந்தார்  என்று கதை சொன்னது, ‘அறை எண் 305ல் கடவுள்’ (2008). அதில் சிச்சுவேஷனுக்கு ஏற்ப, பல இந்தி பாடல்கள் இணைக்கப்பட்ட ஒரு காட்சி அமைந்தது  (தொடக்கம், ‘பர்தே மே ரெஹ்னே தோ’). வித்தியாசமான திரில்லர் படம் ‘விடியும் முன்’ (2015). அதில் ஆர்.டி.பர்மன் இசையமைத்த ‘துனியா மே, லோகோ கோ’ என்ற பழைய பாடல், ஒரு கிளப் டான்ஸ் காட்சியில் அழகாக இணைக்கப்பட்டிருக்கிறது.

நாம் தொடங்கிய ‘தீரன்’ படத்தைப் போல், ஒரு ராஜஸ்தான் பாலைவனப்பிரதேசத்தில், ‘புறம்போக்கு’ படத்திலேயும் ‘ஆஜா ஓரே காவோ ரே’ என்ற பாடல் அமைந்தது. அது பல நாடுகளில் பொய்த்துப்போன கம்யூனிசக்கொள்கைக்காக  முழங்கப்பட்ட ‘லால் சலாம்’ என்ற கோஷத்துடன் ஒலித்தது. இப்படியாக இந்தி பாடல்கள் முந்தியும் பிந்தியும் தமிழ்சினிமாவில் ஒலித்திருக்கின்றன...இனிமேலும் ஒலிக்கும்.

(தொடரும்)