ஒரு பேனாவின் பயணம் – 137– சுதாங்கன்

பதிவு செய்த நாள் : 11 டிசம்பர் 2017

1980ம் வருடம் வெளியான படங்கள் நூற்றுக்கும் மேலே!

1.   'அந்தரங்கம் ஊமையானது'

2. 'அழைத்தால் வருவேன்'

3. 'அன்புக்கு நான் அடிமை'

4. 'அன்னப்பறவை' 5. 'அவன் அவள் அது' 6. 'ஆயிரம் வாசல் இதயம்'  7. 'இதயத்தில் ஓர் இடம்' 8. 'இவர்கள் வித்தியாசமானவர்கள்'

9. 'இளமைக்கோலம்' 10. 'இணைந்த துருவங்கள்' 11. 'உச்சக்கட்டம்'

12. 'உல்லாச பறவைகள்'

13. 'ஊமை கனவு கண்டால்'

14. 'எதிர் வீட்டு ஜன்னல்'

15. 'எல்லாம் உன் கைராசி'

16. 'எங்க வாத்தியார்' 17. 'எங்க ஊர் ராசாத்தி' 18. 'எங்கள் தங்க ராஜா'

19. 'ஒரே முத்தம்' 20. 'ஒரு கை ஓசை' 21. 'ஒரு தலை ராகம்' 22. 'ஒரு மரத்துப் பறவைகள்' 23. 'ஒரு வெள்ளாடு வேங்கையாகிறது'

24. 'ஒத்தையடிப் பாதையிலே'

25. 'ஒளி பிறந்தது' 26. 'கரடி',

27. 'கல்லுக்குள் ஈரம்' 28. கண்ணில் தெரியும் கதைகள்' 29. 'கரும்பு வில் 30 காதல் கிளிகள்' 31. 'காதல் காதல் காதல்' 32. 'காளி' 33. 'காலம் பதில் சொல்லும்' 34. 'காடு' 35. 'கிராமத்து அத்தியாயம்' 36. 'கீதா ஒரு செண்பகப்பூ' 37. 'குரு'

38. 'குருவிக்கூடு'

39. 'குமரிப்பெண்ணின் உள்ளத்திலே' 40. 'சரணம் ஐயப்பா' 41. 'சாமந்திப்பூ' 42. 'சாவித்திரி'

43. 'சின்னஞ்சிறு கிளியே'

44. 'சின்னச் சின்ன வீடு கட்டி'

45. 'சுஜாதா' 46. 'சூலம்'

47. 'சவுந்தர்யமே வருக வருக'

48. 'தர்மராஜா' 49. 'தனிமரம்'

50. 'திரையில் பூத்த மலர்'

51. 'துணிவே தோழன்' 52. 'தூரத்து இடி முழக்கம்' 53. 'தெய்வீக ராகங்கள்' 54. 'தெரு விளக்கு'

55. 'தைப்பொங்கல்'

56. 'நட்சத்திரம். 57. 'நதியைத் தேடி வந்த கடல்' 58. 'நான் போட்ட சவால்' 59. 'நான் நானேதான்'

60. 'நிழல்கள்' 61. 'நீரோட்டம்'

62. 'நீர் நிலம் நெருப்பு'

63. 'நெஞ்சத்தைக் கிள்ளாதே'

64. 'பருவத்தின் வாசலிலே'

65. 'பவுர்ணமி நிலவில்' 66. 'பணம் பெண் பாசம்' 67. 'பாம்பே மெயில்' 68. 'பாமா ருக்மணி'

69. 'பில்லா' 70. 'புதிய தோரணங்கள்' 71. 'பூட்டாத பூட்டுக்கள்'   72. 'பெண்ணுக்கு யார் காவல்' 73. 'பொற்காலம்'

74. 'பொன்னகரம்.

75. 'பொல்லாதவன்'

76. 'மழலைப்பட்டாளம்'

77. 'மற்றவை நேரில்' 78. 'மன்மத ரதங்கள்' 79. 'மங்கள நாயகி'

80. 'மலர்கின்ற பருவத்திலே'

81. 'மரியா மை டார்லிங்' 82. 'மாதவி வந்தாள்' 83. 'மீனாட்சி',

84. 'முழு நிலவு' 85. 'முயலுக்கு மூன்று கால்' 86. 'முரட்டுக்காளை' 87. 'மூடுபனி' 88. 'மேகத்துக்கும் தாகம் உண்டு' 89. 'எமனுக்கு எமன்' 90. 'யாக சாலை' 91. 'ரத்த பாசம்' 92. 'ராமன் பரசுராமன்' 93. 'ராமாயி வயசுக்கு வந்துட்டா'

94. 'ரிஷிமூலம்' 95. 'ருசி கண்ட பூனை'  96. 'வசந்த அழைப்புகள்' 97. 'வறுமையின் நிறம் சிவப்பு'

98. 'வண்டிச்சக்கரம்'

99. 'வள்ளிமயில்' 100. 'விஸ்வரூபம்' 101. 'வேலி தாண்டிய வெள்ளாடு' 102. 'வேடனைத் தேடிய மான்' 103. 'ஜம்பு'

104. 'ஜானி' 105.  'ஸ்ரீதேவி'. மொத்தம் 105 படங்கள் வெளியாகின.

ஆனால், இதில் 95 படங்களுக்கு மேலே எல்லாமே குறைந்த செலவில் அதிகம் பிரபலமில்லாத நடிகர்களை வைத்து எடுக்கப்பட்ட படங்கள். சிவாஜி நடித்த கஜபதி ஆர்ட் பிக்சர்ஸ் தயாரிப்பான 'எங்கள் தங்க ராஜா' படம் நன்றாக ஓடியது. இதை இயக்கி, தயாரித்தவர் தெலுங்கு இயக்குநர் வி.பி. ராஜேந்திர பிரசாத்.

 சிவசங்கரி எழுதிய நாவல் 'ஒரு சிங்கம் முயலாகிறது'. அந்த நாவலை வாங்கி அதை முக்தா பிலிம்ஸ் 'அவன் அவள் அது' என்ற பெயரில்  சிவகுமார், லட்சுமி, ஸ்ரீப்ரியாவை வைத்து படமாக்கியது.

 அந்த வருடத்தில் வந்த ஒரு வித்தியாசமான படம் இது என்று சொல்வேன். அப்போதெல்லாம்   artificial insemination  அதாவது, இரவல்  கரு என்பது அத்தனை பிரபலமாகாத சமயம் அது.

 மனைவியால் குழந்தை பெற்றெடுக்க முடியாது. அதனால் ஒரு விலை மாதுவை வாடகைக்கு வாங்கி கணவனின் விந்தை அந்த பெண்ணுக்குள் செலுத்தி, அந்த பெண்ணை கர்ப்பமாக்கி அவள் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்வது. அவள் ஒரு வாடகைத் தாய், அவ்வளவுதான்.  ஆனால், அவள் வயிற்றில் கரு உருவானபோது அந்தப்  பெண் எப்படி தாய்மையின் உணர்ச்சிக்கு அடிமையாகி, யார் கொடுத்த விந்தில் இந்த குழந்தை பிறந்தது என்பது தெரியாமல், பிறகு அவன் யார் என்று தெரிந்து அவனையே அவள் நேசிக்க துவங்குகிறாள் என்பதுதான் அடிப்படைக் கதைக்கரு.

 மிகவும் வித்தியாசமான கதைக் கருவைக் கொண்டது அந்தப் படம். அதே வருடம் 'உச்சக்கட்டம்' படம் மூலமாக புதிய இயக்குநர் ராஜ்பரத் அறிமுகமானார்.  இந்த படத்தில் சரத்பாபுதான் கதாநாயகன். படம்  ஒரு கிரைம் த்ரில்லர்! இந்த படம் எடுக்கப்பட்ட விதம், கதை சொல்லப்பட்ட பாணி, சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பெரிய வெற்றியை அடைந்ததைக் கண்டு பல பிரபல இயக்குநர்கெளல்லாம் கூட மிரண்டு போனார்கள்.

முதலில் இந்த படத்திற்கு ராஜ்பரத் வைத்திருந்த பெயர் 'முற்றுப்புள்ளி'.

இந்த படத்திற்கு பாடல் எழுத வந்தார் கவிஞர் வாலி. கதையைக் கேட்டார். அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. தலைப்பைக் கேட்டார். `நாசமாப் போச்சு. இப்படி ஒரு நல்ல கதைக்கு இப்படியா அபசகுணமா ஒரு தலைப்பு வைக்கிறது? முற்றுப்புள்ளின்னா உன் வாழ்க்கை இதோடு முடிஞ்சு போச்சுன்னு அர்த்தம். மாத்து தலைப்பை. 'உச்சக்கட்டம்'  இதுதான் உன் படத்தின் தலைப்பு. நீ உச்சத்துக்கு போகணும்’ என்றார்.அதுவே 'உச்சக்கட்டம்' படமானது.

நல்ல கதாபாத்திரங்களில் ஒரு நல்ல நடிகராக வளர்ந்து கொண்டிருந்த ரஜினிகாந்த்திற்கு மோசமான, நல்ல ஆண்டு இது.  அவர் நடித்த 'எல்லாம் உன் கைராசி' படம் படுதோல்வி. முதல் படத்தை தேவர் பிலிம்ஸுக்கு வெளியே ஒரு படத்தை இயக்கினார்  சாண்டோ சின்னப்ப தேவரின்  தம்பி எம்.ஏ. திருமுகம். ரஜினிகாந்த்திற்கு ஜோடி சமீபத்தில் மறைந்த இயக்குநர் ஐ.வி.சசியின் மனைவி சீமா.

 இதே வருடத்தில்தான் ரஜினிகாந்த் கதாநாயகனாக 'காளி' படத்தில் நடிக்க, இந்த படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்தார் சீமா. இந்த படத்தை அவருடைய கணவரான ஐ.வி.சசியே இயக்கியிருந்தார். இது சசி படமாகவும் இல்லை, ரஜினி படமாகவும் இல்லை.

 கமல்ஹாசனுக்கு சுமாராக போன படம் 'உல்லாச பறவைகள்'. அமெரிக்காவிலும், ஜெர்மனியிலும் எடுக்கப்பட்ட இந்த படத்தை பஞ்சு அருணாசலத்தின் சகோதரர் கே.என்.சுப்பு தயாரித்திருந்தார். சிவாஜியின் ஆஸ்தான இயக்குநரான  சி.வி. ராஜேந்திரன் இயக்கியிருந்தார். இந்த வருடத்தை கலக்கிய இரண்டு படங்கள் உண்டு!

 ஒன்று -– பாக்யராஜ் ஊமையாக நடித்து, கதை, வசனம் எழுதி இயக்கியிருந்த 'ஒரு கை ஓசை'. இதில்தான் அவர் கன்னடத்து பெண்ணான அஸ்வினியை அறிமுகப்படுத்தியிருந்தார். இதே அஸ்வினிதான் பிறகு மகேந்திரனின் 'உதிரிப்பூக்கள்' படத்தில் ஓர் அருமையான வேடத்தில் நடித்தார். மற்றொன்று சினிமா ரசிகர்களையும், சினிமா தொழிலில் இருந்தவர்களையும் வியக்க வைத்த ஒரு மாபெரும் வெற்றிப் படம் 'ஒரு தலை ராகம்'.

எல்லோருமே இந்த படத்தில் புதியவர்கள். தயாரிப்பாளர் இப்ராஹிமும் சினிமாவுக்கு புதிது. அவரே படத்தை இயக்கியிருந்தார். இதில்தான் டி.ராஜேந்தர் அறிமுகமானார். அவர் எல்லாப் பாடல்களையும் எழுதியிருந்தார். இசை : ஏ.ஏ. ராஜ் – டி. ராஜேந்தர் என்று வரும். எல்லா பாடல்களும் அமோக வெற்றி.  ஒரு வருடம் ஓடிய படம். இந்த படத்தை எடுத்து விட்டு கிட்டத்தட்ட ஒரு வருடமாக பல விநியோகஸ்தர்களுக்கு படத்தை போட்டுக் காட்டினார் தயாரிப்பாளர். ஆனால் யாரும் படத்தை வாங்க முன்வரவில்லை. பிறகு சென்னை கோடம்பாக்கத்தில் அப்போது இருந்த லிபர்டி திரையரங்கில் மட்டும் முதலில் வெளியானது.

 படம் முதல் வாரம், படுசுமார். இரண்டாவது வாரத்திலிருந்து படம் சூடு பிடித்தது. தன் பிறகு தமிழகமெங்கும் ரிலீஸ் ஆகி, ஒரு வருடம் எல்லா ஊர்களிலும் ஓடியது.

ராஜேந்தரின் புகழ் பட்டித் தொட்டியெங்கும் பரவியது.` வாசமில்லா மலரிது, வசந்தத்தை தேடுது,’  'கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம், களையிழந்த மாடத்திலே முகாரி ராகம்’  `ஆஹா மன்மதன் ரட்சிக்கணும் இந்த மந்திர காளைகளை’ 'கூடையிலே கருவாடு, கூந்தலிலே பூக்காடு’ ` நான் ஒரு ராசியில்லா ராஜா,’ `இது குழந்தை பாடும் தாலாட்டு', 'இது இரவு நேர பூபாளம்’ என்று எல்லா பாடல்களும் பட்டித் தொட்டியெங்கும் ஒலித்தன.

இந்த படத்தில்தான் நடிகர் ரவீந்தர் அறிமுகமானார். பின்னாளில் டி.ராஜேந்தருக்கு மனைவியான உஷா நடித்தார். முதலில் அவர் படத்தில் நடித்த ரவீந்தரைத்தான் அவர் காதலித்தார். அவர்கள் இருவரும்தான் திருமணம் செய்து கொள்ளப்போவதாக பகிரங்கமாக செய்திகள் கூட வந்தன. ஆனால், அந்தக் காதல் முறிந்துபோனது. ஆனால், சில காலம் கழித்து அதைப் பற்றி கவலைப்படாமல் உஷாவை திருமணம் செய்து கொண்டார் டி.ராஜேந்தர். அந்த தம்பதியின் மகன்தான் நடிகர் சிம்பு.

 தம்பதி ஏ.எல் ராகவன் – எம்.என். ராஜம் எடுத்த படம் 'கண்ணில் தெரியும் கதைகள்'. 'அன்னக்கிளி' படத்தை இயக்கிய தேவராஜ்– மோகன் படத்தை இயக்கியிருந்தனர். இந்த படத்திற்கு  ஐந்து இசையமைப்பாளர்கள். இளையராஜா,  சங்கர்– கணேஷ், ஜி.கே. வெங்கடேஷ், கே.வி. மகாதேவன், அகத்தியர்.  படத்திற்காக வாங்கிய கடனுக்காக ராகவன் – ராஜம் தம்பதி தங்களின் வீட்டையே விற்க வேண்டிய நிலை வந்தது.  'அவள் அப்படித்தான்' படத்தை இயக்கிய ருத்ரய்யா எடுத்த படம் 'கிராமத்து அத்தியாயம்'.  இது அவரது சொந்தப் படம். முதலில் இந்த படம் பத்திரிகையாளர்களுக்கு போட்டுக் காட்டப்பட்டது.  படத்தை படுகேலி செய்தபடி பார்த்தார்கள் பத்திரிகையாளர்கள். அதனால் விநியோகஸ்தர்கள் யாரும் வாங்க முன்வரவில்லை.  8.8.1980 ல் வெளிவரவேண்டிய படம் 19.9. 80ல் வெளியானது. இந்த வருடம் ரஜினிகாந்த்திற்கு திருப்பமாக அமைந்த படம் 'முரட்டுக்காளை'. ஏவி.எம். தயாரிப்பில் ரஜினி நடித்த முதல் படம்.  ஏவி.எம். செட்டியார்  இறந்து ஒரு வருடத்திற்குள்  ரிலீஸ் செய்ய வேண்டும் என்று நினைத்து முடியாமல் போய் தாமதமாக வெளிவந்த படம். தமிழ் திரையுலகில் ரஜினியை மிகப்பெரிய ஹீரோ அந்தஸ்துக்கு இட்டுச் சென்ற படங்களில் இந்த படம் மிகவும் முக்கியமானது.

`முரட்டுக் காளை'யை பொறுத்தவரை சண்டைக் காட்சிகள் எல்லாமே சிறப்பாக அமைந்தன. அதற்குக் காரணம் ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்னத்தின் ஈடுபாடும், இயக்குநர் எஸ்.பி. முத்துராமனின் திட்டமிட்டு செயல்படும் திறமையும்தான்.

 அதில் ஒரு டிரெய்ன் பைட்டை வைக்க திட்டமிட்டார்கள்.  `இதுவரை வேறு எந்த படத்திலும் இப்படியொரு சண்டை காட்சி வந்ததில்லை’ என்று பேசும்படி காட்சி அமைய வேண்டும் என்று தயாரிப்பாளர் சரவணன் ஆசைப்பட்டார்.  எஸ்.பி.எம். கணக்கெல்லாம் போட்டு `லட்சத்து எழுபத்தைந்தாயிரம் ரூபாய்  இந்த ஒரு காட்சிக்கு மட்டும் செலவாகும் சார் பரவாயில்லையா?' என்று தயாரிப்பாளர் சரவணனை கேட்டார்.

`செலவாகட்டும். பரவாயில்லை’ என்று சொல்லிவிட்டார் சரவணன். அதே மாதிரி அந்த சண்டைக் காட்சிகளை அருமையாக எடுத்திருந்தார் எஸ்.பி. முத்துராமன். மூன்றே நாட்களில் அந்தக் கடினமான காட்சியை எடுத்து தயாரிப்பாளரை அசத்தினார் இயக்குநர் முத்துராமன்.  அவர் சொன்ன செலவு கணக்கிற்கும் குறைவாகவே காட்சியை எடுத்து கொடுத்து தயாரிப்பாளரை வியக்க வைத்தார் முத்துராமன்.

அந்தக் காட்சியை ஜூடோ ரத்னம் மிகவும் ரிஸ்க் எடுத்து செய்திருந்தார். காட்சியில் நடித்த அத்தனை நடிகர்களுக்கும், அவர் கொடுத்த துல்லியமான பயிற்சி அந்தக் காட்சியின் சிறப்புக்கு காரணமாக அமைந்தது.  நல்லி குப்புசாமி செட்டியாருக்கு இரண்டு மகன்கள்– ராமநாதன், விஸ்வநாதன். இருவரும் ஏவி.எம். சரவணனுக்கு நண்பர்கள். அவர்கள் சரவணனிடம் ஒரு சீன மொழி திரைப்பட வீடியோ கேசட்டை கொடுத்தார்கள்.  அதில் இடம்பெற்றிருந்த சண்டைக் காட்சிகள் படு திரில்லாக இருந்தன. அந்த அடிப்படையில் சண்டைக் காட்சியை அமைத்தார்கள். ஒளிப்பதிவாளர் பாபு மிகவும் திறமையாக அக்காட்சியில் கேமராவை கையாண்டிருப்பார்.

சவுண்ட் எபெக்ட்ஸை அந்த சீனப் படத்திலிருந்து எடுத்து மிக நேர்த்தியாக அதில் சேர்த்திருந்தார் எடிட்டர் விட்டல்.  இந்த படம் வந்தபோது இந்த சண்டைக்காட்சியை பற்றி பத்திரிகைகள் பிரமாதமாக எழுதின.    

இந்த படத்தில் வில்லன் ரோலுக்கு யாரை போடுவது என்று தயாரிப்பாளரும், இயக்குநர் முத்துராமனும் யோசித்துக் கொண்டிருந்தார்கள். யாருமே அவர்களுக்கு  சரியாகப் படவில்லை. அவர்கள் தேடியது

ஒரு வித்தியாசமான, புதுமுக வில்லனை. அப்போது …

(தொடரும்)