தேடும் பணி தொடரும், மீனவர்களுக்கு உதவ ஐஏஎஸ் அதிகாரி விரைகிறார், டீசல் மற்றும் உணவுக்கு தலா ரூ 1000 வழங்க முதலவர் ஆணை

பதிவு செய்த நாள் : 07 டிசம்பர் 2017 03:00

சென்னை

ஆழ்கடல் பகுதியில் மீனவர்களைத் தேடும் பணி தொடரும். தமிழக மீனவர்கள் தற்பொழுது கரை ஒதுங்கிய ஐந்து மாநிலங்களுக்கும் ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. மீனவர்களின் விசைப்படகுகளுக்கு தலா 750 லிட்டர் டீசலும், நாட்டுப்படகாக இருந்தால் 200 லிட்டர் எரிஎண்ணெயும் வழங்கப்படும். மீனவரகளின் உணவுக்காக தலா ரூ 1000 வழங்கவும் முதல்வர் கே.பழனிசாமிஒ ஆணையிட்டுள்ளார்.

 கன்னியாகுமரி மாவட்டத்தில் "ஒகி" புயலால் காணாமல் போன மீனவர்களை கண்டறிய மேற்கொள்ளப்படும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை முடுக்கிவிட கடற்படை, விமானப்படை மற்றும் இந்திய கடலோர காவல் படை  அதிகாரிகளுடன் இன்று (6.12.2017) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

 ‘ஒகி’ புயலினால் பாதிப்படைந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் உடனடியாக மீட்பு, நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டு, அப்பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  முக்கியமாக, காணாமல் போன மீனவர்களை மீட்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை ஆய்வு செய்து, அதனை மேலும்  முடுக்கிவிட இன்று (6.12.2017) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் கடற்படை, விமானப்படை மற்றும் இந்திய கடலோர காவல் படை  அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை மேற்கொண்டார்கள்.  

இக்கூட்டத்தில் துணை முதலமைச்சர்ஓ. பன்னீர்செல்வம், மீன்வளம் மற்றும் பணியாளர் நிருவாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயகுமார், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், கூடுதல் தலைமைச் செயலாளர் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மற்றும் நிதித்துறை (கூடுதல் பொறுப்பு) ராஜீவ் ரஞ்சன், கூடுதல் தலைமைச் செயலாளர் உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை நிரஞ்சன் மார்டி, வருவாய் நிருவாக ஆணையர் முனைவர் கொ. சத்யகோபால், பொதுத்துறை (பொறுப்பு)  செயலாளர்  முனைவர் பி.செந்தில்குமார்,  பேரிடர் மேலாண்மை ஆணையர் ராஜேந்திர ரத்னூ, மற்றும் பொதுத்துறை கூடுதல் செயலர் திருமதி  மைதிலி கே. ராஜேந்திரன், இந்திய கடற்படையின் (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி) ரியர் அட்மிரல் அலோக் பட்நாகர், இந்திய விமானப்படையின் ஸ்டேஷன் கமாண்டர் சுந்தர் மணி, கிழக்கு பிராந்திய கடலோர  காவல் படை ஐ.ஜி. ராஜன் பர்கோத்ரா, இந்திய கடற்படை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின்  சி எஸ் ஓ ஆபரேஷன்ஸ் (FOTNA) ஷ்யாம் சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மீன்பிடிக்கச் சென்று "ஒகி" புயலினால் கரை திரும்ப முடியாமல் உள்ள மீனவர்களை மீட்க தமிழ்நாடு அரசு, இந்திய கடற்படை, இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடலோர காவல் படையினருடன் இணைந்து எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக பெரும்பாலான மீனவர்கள் மீட்கப்பட்டு அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு சென்ற மீனவர்களில் சிலர் இன்னமும் கரை திரும்பவில்லை என மாவட்ட நிர்வாகம் செய்து வருகின்ற கணக்கெடுப்பின்போது மீனவர்களின் உறவினர்கள் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் இம்மீனவர்கள், கர்நாடக மாநிலத்தின் மங்களூருக்கு அருகிலுள்ள "மாரிகோ” தீவிலும், குஜராத், இலட்சத்தீவுகள் மற்றும் மாலத்தீவுகளுக்கிடையே உள்ள  ஆழ்கடல் பகுதியிலும் இருக்கக்கூடுமென  மீனவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இம்மீனவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்பதற்கான தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணியினை கடலோர காவல் படையும், இந்திய விமானப்படையும், இந்திய கடற்படையும் கூட்டாக இணைந்து அரபிக்கடல் பகுதியில், அனைத்து மீனவர்களும் மீட்கப்படும் வரையிலும் தீவிர மற்றும் தொடர் தேடுதல் மேற்கொள்ள வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வலியுறுத்திக் கூறினார்கள்.

காணாமல் போன மீனவர்கள் தற்சமயம் இருக்கக்கூடும் எனக் கருதப்படும்  இடங்களின்  அட்ச, தீர்க்க ரேகை விவரங்கள் சென்னையிலுள்ள கடலோர தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு (எம்.ஆர்.சி.சி) ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. அவற்றின் நகல் ஒன்று உடனடி பார்வைக்காக இன்று கடற்படை, விமானப்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.

 காணாமல் போன கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த நாட்டுப் படகு மீனவர்களை  கண்டுபிடித்து மீட்பதற்கு துhத்துக்குடியில் அமைந்துள்ள கடலோர காவல் படையினர் கன்னியாகுமரி மாவட்ட கடலோர பகுதி முழுவதும், வான் வழி மற்றும் கடல் வழியாக தீவிர மற்றும் தொடர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள  வலியுறுத்தப்பட்டது.

காணாமல் போன மீனவர்களின் குடும்பத்தினருக்கு தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து உடனடி தகவல் வழங்கிட கன்னியாகுமரி மாவட்டம், கிராத்தூர் கிராமத்தில் தமிழ்நாடு மீன் வளத்துறை உதவி மையம் ஒன்றினை அமைத்துள்ளது.  இம்மையத்துடன் ஒருங்கிணைந்து இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படை உதவி மையம் ஒன்றினை, தமிழ் பேசும் அலுவலர்களைக் கொண்டு அமைத்து, தேடுதல் மற்றும் மீட்புப்பணிகள் குறித்த முன்னேற்ற விவரங்களை மீனவர்களின் குடும்பத்தினருக்கு அவ்வப்போது தெரிவிக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டார்கள்.

சென்னையில் செயல்பட்டு வரும் கிழக்கு பிராந்திய இந்திய கடலோர காவல் படை மற்றும் இந்திய கடற்படை நிலையங்கள், தெற்கு மற்றும் மேற்கு பிராந்திய  நிலையங்களுடன்  ஒருங்கிணைந்து தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.  மேலும், இம்மீனவர்களுக்கு தேவையான உணவு, மருத்துவ உதவி மற்றும் எரிஎண்ணையினை இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல் படையினர் உடனடியாக வழங்க வேண்டுமென மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். 

இனி வரும்  காலங்களில் கீழ்க்கண்டவைகளை கடைப்பிடிக்க வேண்டுமென மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எடுத்துரைத்தார்கள்:- தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாட்டு மீனவர்களின் தேவைகளை பூர்த்தி செய்திடவும், புயல் மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் ஒருங்கிணைந்த தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்கு உகந்த வகையில்,  சென்னையிலுள்ள கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தில் போதுமான பணியாளர்கள் மற்றும் உயர் தொழில்நுட்ப வசதிகளுடன்  மேம்படுத்திடவும்,  

புயல் போன்ற அசாதாரண  காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,  இந்திய கடலோர காவல் படை மற்றும் இந்திய கடற்படையினரால் தமிழ்நாடு கடற்கரை பகுதியில்  வான்வழி கண்காணிப்பு மேற்கொண்டு, மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, மீன்பிடித்துக்கொண்டிருக்கும் மீனவர்களை உடனடியாக கரைக்குத் திரும்பச் செய்யவேண்டும் என்றும்,  கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களின் நீண்ட நாளைய கோரிக்கைகளான பிரத்யேக கடலோர காவல் படை நிலையம் ஒன்றினை ஹெலிகாப்டர்கள் மற்றும் இறங்குதள வசதிகளுடன் கன்னியாகுமரி மாவட்டத்தில் விரைவில் நிறுவி, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டிட துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் கேட்டுக்கொண்டார்கள்.

மேலும், மீனவர்களை அவர்களது படகுகளுடன் அவரவர் சொந்த ஊர்களுக்கு சம்பந்தப்பட்ட மாநில அரசு உதவியுடன் கொண்டு வந்து சேர்க்கும் பணியினை மேற்கொள்ள ஏதுவாக, மூத்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் டாக்டர் சந்தோஷ் பாபு, இ.ஆ.ப., அவர்களை கர்நாடகா மாநிலத்திற்கும், திரு. ஷம்பு கல்லோலிகர், இ.ஆ.ப., அவர்களை மகாராஷ்டிரா மாநிலத்திற்கும், திரு. சந்திரகாந்த் பி. காம்ளே, இ.ஆ.ப., அவர்களை குஜராத் மாநிலத்திற்கும், திரு. அருண் ராய், இ.ஆ.ப., அவர்களை கேரள மாநிலத்திற்கும் மற்றும் திரு. ஏ. ஜான் லூயிஸ், இ.ஆ.ப., அவர்களை லட்சத்தீவு யூனியன் பிரதேசத்திற்கும் அனுப்ப மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டார்கள்.

அண்டை மாநிலங்களில் கரை சேர்ந்துள்ள மீனவர்கள் பத்திரமாக தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்கு ஏதுவாக விசைப்படகு ஒன்றுக்கு 750 லிட்டர் டீசல் எரி எண்ணையும், நாட்டுப்படகு ஒன்றுக்கு 200 லிட்டர் எரி எண்ணையும், உணவுப்பொருட்கள் வாங்குவதற்காக படகிலுள்ள மீனவர்களுக்கு தலா ரூபாய் 1000/-  வீதம் சிறப்பினமாக வழங்க வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்கள்.

இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.