ஓல்டு இஸ் கோல்டு: தன்னம்பிக்கைக்கான ஒரு தரமான படம்!

பதிவு செய்த நாள் : 26 நவம்பர் 2017வாழ்க்கையில் விரக்தியடைந்து தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் இருப்பவர்களுக்குள் நம்பிக்கை நாற்றுகளை விதைக்கும் தரமான படைப்புதான்  ‘வானமே எல்லை’.இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கத்தில் இப்படம் அவருக்கான முத்திரையைப் பதித்திருந்தது. இதில் ஆனந்தபாபு, பானுப்ரியா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.மரகதமணி இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியது.இனி வனமே எல்லை…

கொள்கைப் பிடிப்புள்ள இளைஞர் ஆனந்த்பாபு, சமூகத்தில் மலிந்திருக்கும் ஊழல் குறித்து ஆவணப்படம் ஒன்றை எடுக்கிறார். அதைப் பார்த்த அவரது நண் பன், ‘நீதிபதியாகப் பணியாற்றும் உன் தந்தையே ஒரு ஊழல் பேர்வழிதானே?’ என்று சொல்கிறார். ‘நீ சொல்வதுபோல் என் தந்தை ஊழல் பேர்வழியாக இருந்தால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன்’ என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வருகிறார்.

வீட்டுக்கு வந்த ஆனந்த்பாபுவுக்கு கடும் அதிர்ச்சி காத்திருக்கிறது. தந்தை ஒருவரிடமிருந்து கட்டுக்கட்டாக லஞ்சம் பெறுவதைப் பார்க்கிறார். தந்தையின் செயலை தாயாரும் நியாயப்படுத்துகிறார். இவற்றைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஆனந்த்பாபு வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

பெரும் பணக்காரரான கொச்சின் ஹனீபாவின் மகன் பப்லு தாயை இழந்தவர். தந்தையின் அலுவலகத்தில் பணியாற்றும் விசாலி கண்ணதாசனும் இவரும்  காதலிக்கின்றனர். பப்லுவின் தந்தை தன் மகனை பணக்காரர் ஒருவரின் மகளுக்குத் திருமணம் செய்து வைக்கத் திட்டமிடுவதால், அவனது காதலுக்கு எதிர்ப்பு  தெரிவிக்கிறார். தந்தை இல்லாத விசாலி கண்ணதாசனின் தாயார் ஒய்.விஜயாவும் இதேபோல் தன் மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

‘இவர்கள் காதலைப் பிரிக்க வேண்டுமானால் நாம் இருவரும் மறுமணம் செய்து கொள்வதுதான் ஒரே வழி’ என்று கொச்சின் ஹனீபா சொல்ல, ஒய்.விஜயா  இதை ஏற்றுக் கொள்கிறார். இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். விசாலி கண்ணதாசன் பணக்காரத் தந்தையின் மகளாக தன் வாழ்க்கையை சந்தோஷத்துடன் கழிக்கத் தயாராகிறார். இதனால் விரக்தியடையும் பப்லு தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ள நினைக்கிறார்.

இதேபோல் மதுபாலா வயதான பணக்காரருக்குத் தன்னைத் திருமணம் செய்து வைக்கத் திட்டமிடுவதால் விரக்தியடைந்து தற்கொலை செய்ய  முடிவெடுக்கிறார்.

பல ஆண்களால் வன்பாலுறவுக்கு ஆட்பட்ட ரம்யா கிருஷ்ணனும் வாழ்க்கையில் வெறுப்படைந்து தன்னைத்தானே மாய்த்துக் கொள்ளும் முடிவுக்கு  வருகிறார்.  உயர் ஜாதியில் பிறந்த காரணத்தால் வேலை கிடைக்காமல் கஷ்டப்படும் ஏழை இளைஞனும் தற்கொலை முடிவுக்கு தள்ளப்படுகிறார்.  தற்கொலை முடிவில் இருக்கும் இந்த ஐந்து பேரும் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு நூறு நாட்கள் சந்தோஷமாக வாழ்க்கையை அனுபவித்து விட்டு,  சாக நினைக்கின்றனர்.

 சில நாட்களில் வேலை இல்லாத இளைஞன் தற்கொலை முடிவிலிருந்து பின் வாங்குவதுடன், ரகசியமாக மற்றவர்களின் மனதையும் மாற்ற முயற்சிக்கிறார்.  திடீரென தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும், தனது மரணத்தைப் பார்த்தாவது மற்றவர்கள் மனம் திருந்தி வாழ்க்கையை வாழ வேண்டும் என்றும்  சொல்லி கடிதம் எழுதி வைத்து விட்டு காணாமல் போகிறார்.

 இந்த நிலையில் இவர்கள் இருக்கும் வீட்டு வாசலில் திடீரென ஒரு குழந்தை கிடக்கிறது. குழந்தைக்குத் தேவையான பணிவிடைகளை நால்வரும் செய்கின்றனர். குழந்தையை அனாதை விடுதியில் சேர்த்துவிட்டு நால்வரும் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுடன் வீட்டைவிட்டு வெளியேறுகின்றனர்.

அனாதை இல்லத்தில் ஏராளமான மாற்றுத் திறனாளிகளைப் பார்க்கின்றனர். உடலில் குறைபாடுகள் இருந்தாலும், அவர்கள் நம்பிக்கையுடன் வாழ்க்கையை  எதிர்கொண்டு சந்தோஷமாக வாழ்வதைப் பார்த்த பிறகு தற்கொலை எண்ணத்தை விட்டொழித்து மனம் மாறி மகிழ்ச்சியுடன் வாழத் தொடங்குகின்றனர்.

சில சுவாரஸ்யங்கள்:

தரமான படங்கள் வசூல் ரீதியிலும் வெற்றி பெறும் என்பதை நிரூபித்த மிகச் சில படங்களில் ஒன்று ‘வானமே எல்லை’. பார்வையாளர்கள் மற்றும்  பத்திரிகைகளின் பாராட்டுதல்களை பரவலாகப் பெற்ற இப்படம் நூறு நாட்கள் ஓடி வெற்றி பெற்றது. கவிஞர் கண்ணதாசன் மகள் விசாலி கண்ணதாசனை இந்தப் படத்தில் நடிகையாக அறிமுகப்படுத்தியிருந்தார் கே.பாலசந்தர். பானுப்ரியா கவுரவ வேடத்தில் சிறப்புத் தோற்றம் தந்திருந்தார். ‘வானமே எல்லை’ படத்தில் இடம் பெற்ற ‘சோகம் இனி இல்லை’, ‘கம்மங்காடு’ ஆகிய பாடல்கள் பிரபலமடைந்தன.

---– எஸ். கணேஷ்