களமும் இல்லை, வீரரையும் காணோம்!

பதிவு செய்த நாள் : 12 நவம்பர் 2017

சர்வதேச அளவில், குழுக்களாக விளையாடும் கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி, கூடைப்பந்து, கைப்பந்து ஆகிய விளையாட்டுகள் மிகவும் பிரபலமானவை. இந்த விளையாட்டுகள் எல்லாம் இந்தியாவில் விளையாடப்படுகின்றன. ஆனால் சில விளையாட்டுகளைப் பார்க்கத்தான் மக்கள் பெருமளவில் கூடுகின்றனர். சில விளையாட்டுகளில்தான்  நமது விளையாட்டு வீரர்களின் அணிகளும் சர்வதேச தரத்தை எட்டுகின்றனர். அவற்றில்தான் பல போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வென்று குவிக்கிறார்கள்.

இத்தகைய நாட்களில் நாமும் வானில் பறக்கிறோம். ஆனால் தடகளப் போட்டிகள், உள்விளையாட்டு அரங்கங்களில் நடைபெறும் போட்டிகள், தனி நபர், மற்றும் குழுக்களாக வீரர்கள் களமிறங்கும் விளையாட்டுகள், ஆசிய போட்டிகள், ஐரோப்பியா விளையாட்டு விழாக்கள், ஒலிம்பிக் போட்டிகள், ஆகியவை நடக்கும் பொழுதுதான் நமது உண்மையான திறமைகள் அல்லது திறமையின்மை அரங்கேறுகிறது. பதக்கப் பட்டியலில் இந்தியாவின் பெயரை தேடத் தனிப்போட்டி தேவைப்படும் அளவுக்கு நாம் மிகவும் ஏழைகளாக இருக்கிறோம்.

இந்தியாவில் கிரிக்கெட் பெரும்பாலானோர் விரும்பும் விளையாட்டாக உள்ளது. இதற்கு ரசிகர்கள் ஏராளம். நமது கிரிக்கெட் வீரர்களும் கொடிகட்டிப் பறக்கிறார்கள். ஆனால், இதுபோன்று மற்ற விளையாட்டுகளுக்கும் அங்கீகாரம் கிடைப்பதில்லை. அந்த விளையாட்டு வீரர்களும் களத்தில் மின்னுவதில்லை.

நாம் யாரையேனும் அழைத்து, சில இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் பெயரை கேட்டால் மஹேந்திர சிங் தோனி, விராட் கோஹ்லி, ரெய்னா என பட்டியலிட்டுக்கொண்டே செல்வார்கள். ஆனால், இந்திய ஹாக்கி அணி வீரர்களோ, கால்பந்து வீரர்களின் பெயர்களையோ கேட்டால், அவர்கள் ஒரு பெயரைச் சொன்னாலே அது அதிசயம்தான்.

இந்தியா ஒரு காலத்தில் ஹாக்கிப் போட்டியில் கிங்காக இருந்தது. இன்னொரு சமயத்தில் கால்பந்து விளையாட்டு இந்திய இளைஞர்களின் கனவு விளையாட்டாக இருந்தது. அந்தந்தச் சமயத்தில் அந்தந்த விளையாட்டு வீரர்கள் முன்னணியில் இருந்தார்கள். ஆனால் அவை எதுவும் தொடர்ந்து நிலைக்கவில்லை. கிரிக்கெட்டில் மட்டும் இந்திய வீரர்கள் தொடர்ந்து தங்கள் திறமையை வெளிப்படுத்தி வந்தனர்.

கால்பந்து

இந்திய அணி கால்பந்து ஃபீஃபா தரவரிசை பட்டியலில், 146ஆவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் கால்பந்து ஆட்டத்திற்காக டிரேட்ஸ் கோப்பை, கிளாட் ஸ்டோன் கோப்பை, கோச் பெஹுர் கோப்பை போன்ற தொடர்கள் போட்டிகள் தொடங்கப்பட்டன.இந்திய அணி, 1951ஆம் ஆண்டு நடந்த முதல் ஆசிய விளையாட்டுக் கால்பந்து போட்டியில் ஈரான் அணியை தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றது. 1956ஆம் ஆண்டில், இந்தியா மெல்போர்ன் ஒலிம்பிக் கால்பந்து போட்டியில், வெறுங்கால்களுடன் விளையாடி அரை இறுதிக்குத் தகுதி பெற்றது. இதன்மூலம் இறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்ற முதல் ஆசிய கால்பந்து அணி என்ற சாதனையைப் இந்தியா படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

1962ஆம் ஆண்டில், இந்தியா மீண்டும் ஆசிய விளையாட்டு கால்பந்து போட்டியில் தங்கம் வென்றது.1951-1962 ஆம் ஆண்டுகளுக்கு இடையிலான காலம் இந்திய கால்பந்து வரலாற்றில் ஒரு பொற்காலமாக விளங்கியது. இந்திய அணியின் பயிற்சியாளர் சையத் அப்துல் ரஹீம் கீழ் இந்த காலகட்டத்திற்குள் ஏராளமான பட்டங்களையும் பதக்கங்களையும் இந்திய வீரர்கள் வென்றனர்..

ஆசிய விளையாட்டு கால்பந்து வெற்றியைத் தவிர, இந்தியா மெர்தேக்கா கோப்பை மற்றும் பல கோப்பைகளை வென்றது. கடந்த 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி சிரியா அணியை 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து நேரு கோப்பையை முதன்முறையாக வென்று சாதனை படைத்தது. அதே மாதம் இந்திய அணி தஜிகிஸ்தான் அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வென்று ஏ.எப்.சி சேலஞ்சு கோப்பைக்கும், தொடர்ந்து 2011ஆம்ஆண்டு கத்தாரில் நடந்த ஏ.எப்.சி ஆசியக் கோப்பைக்கும் தகுதிப் பெற்றது. 2009ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி சிரியா அணியை பெனால்டி முறையில் 6 - 5 என்ற கணக்கில் வென்று நேரு கோப்பையைக் கைப்பற்றியது

2011ஆம் ஆண்டு இந்திய அணி 24 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசியக் கோப்பை போட்டியில் விளையாடியது. ஆனால், இந்திய அணி அப்போது தன் சிறந்த ஆட்டத்தை வெளிபடுத்தாததால் தகுதிச் சுற்றுப் போட்டிகளிலேயே வெளியேறியது.

இந்திய கால்பந்து அணி பல சாதனைகளை படைத்துள்ளது. ஆனால் அது தொடர்ந்து நிலைக்கவில்லை. அதன் திறமையைத் தகுந்தபடி வெளிபடுத்த இயலாமல் போனது.

ஏன் இந்த அவலம்? கால்பந்து விளையாட்டில் நமது விளையாட்டு வீரர்களின் திறமைகளுக்கு, அமைப்பு ரீதியாக வடிவம் தரத் தவறிவிட்டோம். பயிற்சியாளர்கள் விளையாடுவதற்கான சிறந்த களங்களை வடிவமைக்கவில்லை. வாழையடி வாழையாக புதிய பயிற்சியாளர்களை கண்டுபிடிக்கவும், தொடர்ந்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் தவறிவிட்டோம்.

நமது விளையாட்டுத்துறைக்கான ஒருங்கிணைந்த விளையாட்டுக் கொள்கையை நாம் பிரசவிக்கவும் தவறிவிட்டோம்.

 ஹாக்கி

ஹாக்கி விளையாட்டில் இந்தியா 1928 ஆம் ஆண்டுமுதல் 1956 ஆம் ஆண்டுவரை உலகளவில் சிறந்து விளங்கியது. இக்காலத்தில் இந்தியா 6 ஒலிம்பிக் தங்கப்பதக்கங்களை தொடர்ந்து வென்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1948 ஆம் ஆண்டில் நடந்த லண்டன் ஒலிம்பிக் போட்டியிலும்,1952 ஆம் ஆண்டு நடந்த ஹல்சினிக் விளையாட்டுகளிலும் , மெல்பேர்ன் ஒலிம்பிக்கிலும் ஒரு ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்திக் காட்டியது . அப்போது இந்தியா விளையாடிய 24 போட்டிகளிலும் வெற்றி பெற்றது. இதைத்தவிர 1964 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளிலும் தங்கப் பதக்கம் வென்றது.
2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் டாக்காவில் நடைப்பெற்ற ஆடவருக்கான ஆசிய கோப்பையை இந்திய ஹாக்கி அணியினர் கைப்பற்றினார்கள்.

அதேபோல் நவம்பர் மாதம் நடைபெற்ற பெண்களுக்கான ஆசிய கோப்பையையும் இந்திய அணியினர் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் ஒரே ஆண்டில் இரண்டு கோப்பைகளையும் கைப்பற்றிய நாடு என்னும் பெருமையை இந்தியா பெற்றுள்ளது என்பது பெருமைக்குரிய விஷயமாகும்.

இவ்வாறு இந்திய அணி ஹாக்கியிலும் சிறந்து விளங்கி வருகிறது. எனினும், கிரிக்கெட் விளையாட்டைப்போல் இந்த விளையாட்டுக்கும் நல்ல வரவேற்பு இருக்கின்றதா என்று பார்த்தால், அதற்கு பதில் இல்லை. ஏன் இதுபோன்ற விளையாட்டுகளால், பெரிதும் சாதிக்க முடியவில்லை? இந்தக கேள்வியும் கோடி டாலர் கேள்வியாகும்.

விளையாட்டுகளுக்காக உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் ஒவ்வொரு மாநிலங்களிலும் ஆய்வுகளை நடத்த வேண்டும். இந்த ஆய்வின்மூலம் அனைத்து விளையாட்டுகளுக்கும் உள்ள ரசிகர்களின் எண்ணிக்கை, எதற்காக அவர்கள் இந்த விளையாட்டுகளை விரும்புகின்றனர் போன்றவற்றை அறிந்துகொள்ள வேண்டும். ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட விளையாட்டுகளில் நமது விளையாட்டரங்கம், பயிற்சி களங்கள் பற்றிய ஒளிவு மறைவற்ற திறன் ஆய்வு விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையாக இந்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும்.

இந்திய விளையாட்டுத்துறை அமைச்சகம், இந்த வெள்ளை அறிக்கையை ஆராய்ந்து, விளையாட்டுகளை மேம்படுத்துவதற்கான தக்க நடவடிக்கைகளை வரையறுக்க வேண்டும். இந்த அமைச்சகத்தின் வழிகாட்டுதலுடன் அனைத்து மாநில விளையாட்டுத்துறை அமைச்சகங்களும் செயல்படவேண்டும்.

பயிற்சிக்களம், விளையாட்டு அரங்கங்கள் பற்றியும் ஒரு ஒளிவு மறைவற்ற சுயவிமர்சனமாகவும் அந்த வெள்ளை அறிக்கை விளங்க வேண்டும்.

அவ்வாறு செய்தால் வரும் காலத்தில் இந்தியா கிரிக்கெட் விளையாட்டில் எப்படி சிறந்து விளங்குகின்றதோ, அதேபோல் அனைத்து விளையாட்டுகளிலும் முன்னணியில் திகழலாம்.

கிரிக்கெட், பேட்மின்டன், கால்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கு மாற்று விளையாட்டுகள் எதனையும் நாம் வடிவமைக்க தேவை இல்லை. ஆனால் ஆடுகளம், பயிற்சிக் களங்கள், தொடர்ந்து மேம்படுத்தப்பட வேண்டும். இவை விளையாட்டு வீரர்களை ஆரம்பப் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை இனம் காண ஓயாது உழைக்கும் நிபுணர்களை ஊக்குவிப்பாளர்களாகக் கண்டுபிடித்து நியமிக்க வேண்டும். இவ்வறு துவக்க வேகத்தை நமது விளையாட்டுத் துறை பெற்றுவிட்டால் சாதனைகள் வசமாகும்.


கட்டுரையாளர்: தினேஷ் குகன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation

வாசகர் கருத்துக்கள் :
Pratheep 13-11-2017 12:05 AM
முதலில் கிரிக்கெட் மோகத்தில் இருந்து இந்திய மக்கள் விடுபெற வேண்டும். அது ஆங்கிலேயே காலனியாதிக்க அடிமை மனோபாவத்தின் எச்சமாக இங்கே இன்னும் தொடர்கிறது. விளையாடுவதற்கு ஒரு மட்டையும் பந்தும் போதும்; மொட்டை மாடியில் கூட விளையாடி விடலாம் என்பதும் கிரிக்கெட் பிரபலமாக இருப்பதற்கு முக்கியக் காரணம்.! பள்ளிகளில் இருந்தே இங்கே அந்தந்தப் போட்டிகளுக்கு வீரர்களை தயார்படுத்த வேண்டும். ஆனால், இங்குள்ள கல்வி அமைப்பு ஏட்டுக்கல்வியை மட்டும் தான் பிரதானமாக வைத்திருக்கிறது. பி.டி. பீரியட்களை கடன் வாங்கி கணித ஆசிரியர்கள் பாடம் நடத்துவது இதற்கு உதாரணம். இதையெல்லாம் சரி செய்தால் இந்திய விளையாட்டுத்துறையில் ஒரு பெரிய புரட்சி நிகழக்கூடும்.! நல்ல கட்டுரை. வாழ்த்துகள் தினேஷ்!

Reply Cancel


Your comment will be posted after the moderation


THANIKACHALAM 13-11-2017 12:25 AM
அருமை பிரமாதம்

Reply Cancel


Your comment will be posted after the moderation


Jaishree 13-11-2017 02:10 AM
V.nice...congrats...wishing u all d best for your long journey..

Reply Cancel


Your comment will be posted after the moderation


Karthick 14-11-2017 05:28 AM
Well Done Bro, Wonderful Lines, As U said We Need Recognition To Other sports Too similarly The Way By Which We Concentrate On Cricket, if so we doesn't Need To search For The Medal List as We can Get somewhat in The Top Rankings.

Reply Cancel


Your comment will be posted after the moderation


Vishnu priya 20-11-2017 05:28 AM
Great Dinesh. All the best for your great future.

Reply Cancel


Your comment will be posted after the moderation