ஹாக்கி ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் அணி

பதிவு செய்த நாள் : 06 நவம்பர் 2017 01:34

புதுடில்லி:

ஜப்பானில் இன்று நடைப்பெற்ற மகளிருக்கான ஹாக்கி ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி சீனாவை வீழ்த்தி கோப்பை கைப்பற்றியது. கடந்த மாதம் நடைபெற்ற ஆடவருக்கான ஆசிய கோப்பையையும் இந்திய அணி வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.


மகளிருக்கான ஹாக்கி ஆசிய கோப்பை இறுதி போட்டி இன்று ஜப்பானில் உள்ள கிஃபு ஹாக்கி மைதானத்தில் இன்று நடைப்பெற்றது. இந்த போட்டியின் முதல் 15 நிமிடங்களில் இரண்டு அணிகளும் ஒரு கோலும் அடிக்கவில்லை. சரியாக 25 ஆவது நிமிடத்தில் இந்திய வீராங்கனை நவ்ஜோத் கவுர் முதல் கோல் அடித்து அசத்தினார்.

பின்னர் சீனாவை சேர்ந்த வீராங்கனை ஜோங் ஜியாகி குவைட் 47 ஆவது நிமிடத்தில் பெனால்டி கார்னர்-ஐ சாதகமாக பயன்படுத்திக்கொண்டு ஒரு கோல்-ஐ தன் அணிக்கு பெற்றுத்தந்தார். 60 நிமிட முடிவில் இரண்டு அணிகளின் கோல்களும் 1-1 என்ற நிலையில் இருந்தன. இதனால் இரு அணிகளுக்கும் இடையே பெனால்டி ஷூட் என்னும் முறையில் போட்டி நடத்தப்பட்டு வெற்றியாளர் யார் என்று தீர்மானிக்கும் முடிவுக்கு தள்ளப்பட்டனர்.

இந்த பெனால்டி ஷூட்டில், இரு அணிகளும் 4-4 என்ற சம கோல்கள் பெற்று அசத்தினார். இந்திய அணி சார்பில் மோனிகா மாலிக், நவ்ஜோத் கவுர், லிமினா மின்ஸ் ஆகியோர் அபாரமாக கோல்கள் அடித்தனர். இதனால் சரியான வெற்றியாளர் யார் என்று உறுதிபடுத்த முடியாமல் போனது. ஆகையால், இறுதியாக இரு அணிகளின் கேப்டன்கள் ராணி ராம்பால் மற்றும் லியாங் மெய்யு ஆகிய இருவருக்கும் தலா ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டன. இதில் ராணி ராம்பால் தன் திறமையை வெளிபடுத்தி கோல் அடித்தார். சீன அணி கேப்டன் லியாங் மெய்யு கோல் அடிக்க முடியவில்லை. இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.  

இதன் மூலம் ஆசிய கோப்பையை இரண்டாவது முறையாக இந்திய மகளிர் அணியினர் இன்று கைப்பற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2009 ஆம் ஆண்டு நடைப்பெற்ற போட்டியில் சீனாவிடம் இந்தியா தோல்வியுற்றது. இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக இந்த போட்டி அமைந்துள்ளது. இந்திய மகளிர் அணியினர் 13 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆசிய கோப்பையை கைப்பற்றியுள்ளனர். இந்த வெற்றியின் மூலம் வரும் 2018 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடக்கவுள்ள உலகக்கோப்பைக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் டாக்காவில் நடைப்பெற்ற போட்டியில் ஆடவருக்கான ஆசிய கோப்பையை இந்திய அணியினர் கைப்பற்றினார்கள். இதன்மூலம் ஒரே ஆண்டில் இரண்டு கோப்பைகளையும் கைப்பற்றிய நாடு என்னும் பெருமையை இந்தியா பெற்றுள்ளது என்பது பெருமைக்குரிய விஷயமாகும்.

கடந்த 1994 ஆம் ஆண்டு தென்கொரியா மகளிர் மற்றும் ஆடவர் அணி இரண்டு கோப்பைகளையும் பெற்றது. இதன் வரிசையில் இந்தியாவும் இன்று சேர்ந்துள்ளது.