மா மரத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்

பதிவு செய்த நாள்

19
பிப்ரவரி 2016
20:15

   முக்கனிகளில் முதற்கனி மா. தற்பொழுது மாமரங்கள் பூத்துக்குலுங்குகின்றன. அவ்வாறு பூக்காத மரங்களைப் பூக்க வைக்கவும், பூத்தபின் மேற்கொள்ளவேண்டிய ஒருங்கிணைந்த பயிர்ப்பாதுகாப்பு முறைகளையும்  விவசாயிகள் அறிந்து கொள்ளலாம்.

பூக்காத மரத்தைப் பூக்கவைக்க : 

ஜனவரி, -பிப்ரவரி மாதங்களில்  மாமரங்கள் பொதுவாகப் பூத்து, காய்  பிடிக்க ஆரம்பிக்கும். பிப்ரவரி மாதம் 15ம்தேதி  வரை பூக்காமல் இருந்தால் , பூக்காத மரங்களுக்கு  10 கிராம் பொட்டாசியம் நைட்ரேட்டை  ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம். அவ்வாறு தெளிப்பதன் மூலம் பூக்காத மரங்களும் பூத்துக் காய்க்க வைக்கலாம். 

பூச்சி  நிர்வாகம்  :

தத்துப்பூச்சிகள் :

  தத்துப்பூச்சிகள்   மா பூக்கும்  தருணத்தில்  பூங்கொத்துகளின்  சாற்றை  உறிஞ்சுவதால்  அவை  வாடிவிடும். சேதம்  அதிகரிக்கும்  நிலையில்  மொட்டுகளும், பூக்களும்  கருகி  உதிர்ந்து  விடும். குஞ்சுகள்  தேன்  போன்ற  திரவத்தைச்  சுரப்பதனால்,  இலை  மற்றும்  பூங்கொத்துகளில்  இத்தேன் துளிகளைக் காணலாம்.  தேன் சொட்டுவதால்  கேப்னோடியம்  என்ற  பூசணம், பூங்கொத்துகளைத் தாக்கி, கருமையாக  மாற்றி  உதிரச் செய்துவிடும்.

கட்டுப்பாடு :  

இத்தத்துப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த, பூங்காம்பு  உருவாகும்  தருணத்திலும், இரு வாரம் கழித்தும்  மருந்தடிக்க  வேண்டும்.  ஒரு  லிட்டர்  நீருக்கு  ஒன்றரை மிலி  பாசலோன் 35 ஈ.சி மருந்துடன் ஐந்து மிலி  வேப்பெண்ணெய்  கலந்து  தெளிக்க  வேண்டும். மறு முறை  பத்து   லிட்டர்  நீருக்கு   மூன்று  மிலி  இமிடாகுளோபிரிட் 17.8 எஸ்.எல்  மருந்துடன்  ஐம்பது  மிலி  வேப்பெண்ணெய்  கலந்து  தெளிக்க  வேண்டும். 

பூங்கொத்துப்புழு : 

இவை பூ பூக்கும் தருணத்தில் பூங்கொத்துக்களில் கூடுபோல  கட்டிக்கொண்டு, பூ மொட்டுக்களைத் தின்று சேதப்படுத்தும். இதனைக்கட்டுப்படுத்த   பாசலோன் 35 ஈ.சி  2 மிலி மருந்தை 1 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும்

மாங்கொட்டைக் கூன்வண்டு :

 மாந்தோப்புகளில்  மரத்தின்கீழ் விழக்கூடிய காய்கள்,  மாங்கொட்டைகள் மற்றும் சருகுகளை சேகரித்து எரித்துவிடவேண்டும். மாம்பிஞ்சுகள்  பட்டாணி  அளவில்  இருக்கும்போது  ஒருமுறையும்,15 நாட்கள் கழித்து ஒருமுறையும்,  ஒரு  லிட்டர்  நீருக்கு   இரண்டு  மிலி என்ற அளவில்  பென்தியான் 100 ஈ.சி  கலந்து  தெளிக்க  வேண்டும்.

பழ  ஈ :

 இடை உழவு  செய்வதன் மூலம் மரத்தைச் சுற்றி  மண்ணில்  உள்ள கூட்டுப்புழுக்களை  வெளிப்படுத்தி அழிக்கலாம். ஒரு லிட்டர் நீரில் ஒரு மிலி மிதைல்  யூஜீனால் மற்றும் 2மிலி மாலத்தியான் 50 ஈ.சி கலந்து பெறப்பட்ட கரைசலில் ஒரு   பாட்டிலில் பத்து மிலி வீதம் 5-6 அடி உயரத்தில் ஏக்கருக்கு 10 எண்கள் வீதம்  வைத்து தாய்ப் பழ ஈக்களைக்  கவர்ந்து  அழிக்கலாம்.வெம்பி  விழுந்த பழங்களைச் சேகரித்து அழிக்கலாம்.ஒரு  லிட்டர்  நீருக்கு  30 மிலி  வேப்பெண்ணெய் கலந்து  தெளித்தும்  கட்டுப்படுத்தலாம். 

நோய்கள் : 

சாம்பல் நோய் : 

ஒரு  லிட்டர்  நீருக்கு  இரண்டு  கிராம்  நனையும் கந்தகம் (அல்லது) அரை மிலி  டிரைடிமார்ப்    கலந்து  தெளித்துக்  கட்டுப்படுத்தலாம்.

 பறவைக்கண்  நோய்  (ஆந்திரகோனஸ்) :

 ஒரு  லிட்டர்  நீருக்கு இரண்டு கிராம் மாங்கோசெப் (அல்லது)  ஒரு கிராம் கார்பண்டசிம்  (அல்லது) இரண்டு கிராம்  குளோரோதலானில்   மருந்துகளில் ஏதாவது  ஒன்றை15 நாள் இடைவெளியில் மூன்று முறை   தெளித்துக்  கட்டுப்படுத்தலாம்.

கரும்பூஞ்சாண நோய்: 

இலைகளின் மேற்பரப்பில் கருமையான படலம் தோன்றி, இலைகள் கருப்பாகத் தென்படும். ஒரு கிலோ மைதாவை ஒருலிட்டர் நீருடன் கலந்து கொதிக்க வைத்து, அக்கூழை இருபது லிட்டர்நீரில் கரைத்துப் பெறப்பட்ட கரைசலில், ஒருலிட்டர் கரைசலுக்கு  பாஸ்போமிடான் 2 மிலி என்ற அளவில் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம். 

இவ்வாறு  முறையான  ஒருங்கிணைந்த பயிர்ப்பாதுகாப்பு  முறைகளை  மேற்கொண்டு, நிறைவான  மகசூல்  பெற்று விவசாயிகள்  பயனடையலாமே...

டி.சி.கண்ணன், தோட்டக்கலை துணை இயக்குனர், நெல்லை.