அதிக மகசூலுக்கு விதைப்பரிசோதனை முக்கியம்

பதிவு செய்த நாள்

19
பிப்ரவரி 2016
20:12

விதை உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் உற்பத்தி, விற்பனை செய்யும் விதைகள் அதிக அளவு சுத்தத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். பயிர் அறுவடை முடிந்து, கதிரடித்து, பிரிக்கப்பட்டு எடுக்கப்படும் விதைக்குவியலில் இருந்து கிடைக்கும் விதைகள் உடனடியாக விதைப்பதற்கு, நடவு செய்வதற்கு தகுதியானதாக இருக்காது. அந்த விதைகளுடன் மண், சிறுகற்கள், இலைகளின் துகள்கள், குச்சி, சாவி விதைகள் கலந்து இருக்கும். எனவே அறுவடை முடிந்து பிரித்தெடுக்கப்படும் விதைகளை விதை சுத்திகரிப்பு செய்து சுத்தமாகவும், பிற பொருட்கள் கலப்பு இன்றியும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். சுத்தமான விதைகள் விதைப்பின் போது, சீராக விதைப்பதற்கும், வேண்டிய அளவு பயிர் எண்ணிக்கை பராமரிப்பதற்கும் எளிதாக அமையும்.

நெல்லை விதைப்பரிசோதனை நிலையத்தில் புறத்தூய்மை பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. புறத்தூய்மை சோதனையின் போது, தூய விதைகள், களை விதைகள், பிற ரக விதைகள், உயிர்ப்பற்ற பொருட்கள் கலந்துள்ளனவா என கண்டறியப்படுகிறது. ஒவ்வொரு பயிருக்கும் குறைந்தபட்ச தரங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெண்டை 99 சதவீதம், கேழ்வரகு, எள் 97 சதவீதம், நிலக்கடலை, பீட்ரூட், முருங்கை 96 சதவீதம், காரட், பீன்ஸ், கீரை, மல்லி 95 சதவீதம் மற்றும் இதர பயிர்களுக்கு 98 சதவீதம் என்ற அளவில் புறத்தூய்மை இருக்க வேண்டும். விதை மாதிரிகளில் புறத்தூய்மை பரிசோதனை செய்து, நல்விதைகளை விவசாயிகளுக்கு வழங்கி அதிக மகசூல் பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

விதையின் ஈரப்பதம்

விவசாயிகள் உற்பத்தி செய்யும் விதைகள், இருப்பில் உள்ள விதைகளில் சரியான ஈரப்பதம் உள்ளதா என கண்டறிந்து பின் சேமிக்க வேண்டும். விதைக்காக பயன்படுத்தும் போது காலை, மாலையில் இளம் வெயிலில் காய வைத்து வெப்பம் தணிந்த பின், சேமிக்க வேண்டும்.

விதையில் ஈரப்பதம் இருப்பதைப் பொருத்தே, விதைக்குவியலின் ஆயுள் நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு விதையின் ஈரத்தன்மை, அதிகமாகவோ அல்லது மிகவும் குறைவாகவோ இருக்கக்கூடாது. சரியான ஈரப்பத நிலையில் உள்ள விதைகள் பூச்சி மற்றும் பூஞ்சாணத்தாக்குதல் இன்றி நீண்ட நாள் சேமித்து வைக்கக்கூடிய நிலையில் இருக்கும். ஒவ்வொரு பயிருக்கும் ஈரப்பத சதவீதம் மாறுபடும்.

நெல் – அதிகப்பட்ச ஈரப்பதம் 13 சதவீதம். மக்காச்சோளம், சோளம், கம்பு, கேழ்வரகிற்கு அதிகப்பட்ச ஈரப்பதம் 12 சதவீதம். உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயறு, துவரை, சூரியகாந்தி, கொண்டைக்கடலை, எள், கொத்தவரைக்கு 9 சதவீதம் இருக்க வேண்டும்.

விதையின் ஈரப்பதத்தை குறைத்து சேமிப்பதுடன், விதையின் ஈரப்பதம், முளைப்புத்திறன் அறிய 30 ரூபாய் கட்டணத்துடன் விதை மாதிரிகளை விதை பரிசோதனை ஆய்வகத்திற்கு அனுப்பி பரிசோதனை செய்து விதைகளின் தரத்தை அறிந்து பயன்படுத்த வேண்டும்.

தகவல்: க. அசோக்குமார், விதைப்பரிசோதனை அலுவலர், நெல்லை.