டென்மார்க் ஓபன் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடம்பி

பதிவு செய்த நாள் : 24 அக்டோபர் 2017 01:03

ஒடென்ஸ்

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடம்பி கொரிய வீரரை வென்று இன்று சாம்பியன் பட்டம் வென்றார்.

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் ஆட்டத்தின் இறுதி போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய வீரர் கிடம்பி ஸ்ரீகாந்த மற்றும் கொரிய வீரர் லீ ஹ்யூன் ஆகியோருக்கு இடையே பலப்பரிட்சை நடந்தது.
இறுதி ஆட்டம் என்பதால் இரு நாட்டு வீரர்களும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் விளையாடினார்கள்.
ஆட்டத்தில் தொடக்கத்தில் இருந்தே ஸ்ரீகாந்த் தன் அபாரமான விளையாட்டை வெளிப்படுத்தினார். இதனால் 21-10 என்ற கணக்கில் முதல் செட்டை தன் வசப்படுத்தினார். இதனால் இரண்டாவது செட்டில் கொரிய வீரர் லீ ஹ்யூன் வெற்றி பெறவேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டது. ஆனாலும், இந்திய வீரர் ஸ்ரீகாந்த் தனது அற்புதமான ஆட்டத்தின் மூலம் இரண்டாவது செட்டை மிக நேர்த்தியாக கைப்பற்றினார். அவர் 21-5 என்ற கணக்கில் அவர்  வெற்றிபெற்றார்.

சுமார் 25 நிமிடங்கள் நடந்த இந்த இறுதி போட்டியில் இந்திய வீரர் கிடம்பி ஸ்ரீகாந்த் 21 - 10,  21 - 5 என்ற கணக்கில் கொரிய வீரரை எளிதில் வென்றார். இதன்மூலம் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தினார்.

பிரதமர் மோடி வாழ்த்து

டென்மார்க் ஓபன் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்ரீகாந்த் கிடம்பிக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளர். தனது டுவிட்டர் பக்கத்தில்,

”வாழ்த்துக்கள் ஸ்ரீகாந்த் கிடம்பி. டென்மார்க் ஓபன் தொடரில் உன் வெற்றி அனைத்து இந்தியர்களையும் பெருமிதம் கொள்ள வைத்திருக்கிறது” என்று பிரதமர் மோடி பதிவு செய்துள்ளார்.