சவால்கள் நிறைந்த டீன் ஏஜ்

பதிவு செய்த நாள் : 06 அக்டோபர் 2017

வாழ்க்கையின் இளமை காலத்தில் மிக சுவாரஸ்யம் நிறைந்த பகுதி டீன் ஏஜ் எனப்படும் பதின்பருவம். 12 முதல் 19 வயது வரையிலான இந்த பருவத்தில் குழந்தைத்தனம் மறைந்து உடலளவிலும் மனதளவிலும் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதனால் இந்த பதின்பருவம் மிகவும் ஈர்ப்புள்ளது. அதேசமயம் பல சவால்கள் நிறைந்த பருவமாகும்.

மாற்றங்கள் நிறைந்த இந்த காலக்கட்டத்தில் ஆண் பெண் இரு பிரிவினரும் வயதுக்கு வருவதால் உடலில் ஹார்மோன் அளவுகளில் மாற்றங்கள் ஏற்படும். அவை உடலளவில் மிகபெரிய வித்தியாசப்படுத்தும் மாற்றங்களை உண்டாக்கும்.

அதன் காரணமாக இந்த தருணத்தில் குழந்தைகள் உடலளவில் தீடீர் வளர்ச்சி (Growth Spurt) பெறுவர். இந்த திடீர் வளர்ச்சி காரணமாக அவர்களின் ஊட்டச்சத்து தேவை இயல்பான அளவைவிட கூடுதலாக அதிகரிக்கும்.

அதிகரிக்கும் ஊட்டசத்து தேவை

பதின்பருவத்தில் ஆண் பெண் இருவருக்கும் உடலளவில் ஏற்படும் மாற்றங்கள் வேறுபடும். இரு பிரிவினருக்கும் எடை, உயரம் ஆகியவை அதிகரிக்கும்.  

திடீர் வளர்ச்சி காரணமாக பதின்பருவத்தில் குழந்தைகளின் பசி அதிகரிக்கும். உணவு பழக்கத்தில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். முக்கியமாக அவர்களின் பசியும் ருசியாக சாப்பிடும் ஆர்வமும் அதிகரிக்கும்.

அதன் காரணமாக விதவிதமான உணவு பொருட்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும்.

அவர்களின் உடல் வளர்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில் சத்தான பல ஆகாரங்களை பெற்றோர் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்க வேண்டும். முக்கியமாக மாவுசத்து, புரதம், கொழுப்பு சத்து, இரும்பு சத்து, ஃபோலிக் ஆசிட், கால்சியம், வைட்டமின்கள் ஆகியவை நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துகொள்ள வேண்டும்.

அறியாமையால் ஏற்படும் ஆபத்து

உலகின் இளம் நாடாக கருதப்படும் இந்தியாவில் 25 கோடிக்கும் மேற்பட்ட பதின்பருவத்தினர் உள்ளனர். ஆனால் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக அவர்களின் பெரும்பாலானவர்கள் இரத்த சோகை, வளர்ச்சிக் குறைபாடு, குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி, ஆற்றல் குறைபாடு போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
பதின்பருவத்தில் என்னென்ன உணவுகள் சாப்பிட வேண்டும் என்ற விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் பல குழந்தைகள் தவறான உணவு பழக்கத்தை கடைபிடிக்கிறார்கள்.

பதின்பருவத்தினரின் உணவு பழக்கத்தில் நண்பர்களின் பழக்க வழக்கங்கள் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். காலத்திற்கேற்ப புதிய உணவு வகைகளை தேடி சாப்பிடுவதில் ஆர்வம் அதிகரிக்கும். அது காலத்திற்கேற்ற நடைமுறையாகவும் நவீனப் பழக்கமாகவும் கருதப்படுகிறது. உணவு, பான வகைகள், இறைச்சி வகைகளை தயாரிக்கும் கம்பெனிகள், விற்பனை செய்யும் கம்பெனிகளின் விளம்பரங்கள் வாழ்க்கையில் முதன்முறையாக சுதந்திரமாக வாழத் துவங்கும் இரு பாலரையும் ஈர்க்கின்றன. விளம்பரம் மக்கள நலனுக்காக என்றும் அமைவதில்லை.  

அறியாமை காரணமாக பலர் பீட்சா, பர்கர், குளிர் பானங்கள் போன்ற துரித உணவுகளுக்கும் பான வகைகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பது வாடிக்கையாகி வருகிறது. அதன் காரணமாக ஏற்படும் உடல் கோளாறுகள் அவர்களின் வாழ்க்கையில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த காலக்கட்டத்தில் போதிய உணவு அல்லது தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கவில்லை என்றால் ரத்த சோகை ஏற்படும். பொது உடல் நலன் குறைய இது வழி வகுக்கும்.  

எலும்புகள் பலவீனமாதல், உடல் சோர்வு, பெண்களுக்கு மாதவிடாய் சீரற்று இருப்பது, முடி கொட்டுதல், எடை குறைதல், ஞாபக மறதி போன்ற பல பிரச்சினைகள் ஏற்படும்.

சமூகம் சார்ந்த அழுத்தம் காரணமாக தங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து சில குழந்தைகள் தவறான எண்ணங்களை வளர்த்து கொள்வர். அதனால் அவர்களின் மன அழுத்தம் அதிகரிக்கும்.

‘‘என் உடலை எனக்கு பிடிக்கவில்லை. அது எனக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது’’ என்று கூறும் நிலை டீன் ஏஜ் குழந்தைகளிடம் ஏற்படும் சூழல் அதிகரித்து வருகிறது.
இதற்கு முக்கிய காரணம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் அல்லது நண்பர்கள் என யாராவது குழந்தைகளின் உணவு பழக்கம் பற்றி தவறான கண்ணோட்டத்தை முன்வைப்பதே.
முக்கியமாக பெண் குழந்தைகள் அதிகமாக சாப்பிட்டால் தொப்பை விழுந்துவிடும் குண்டாகி விடுவர் என கூறும் நம் சமூகத்தால் பல பெண் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடால் தவிக்கும் நிலை உள்ளது.


பதின்பருவத்தில் பெண்களுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு எதிர்காலத்தில் அவர்களின் மகப்பேறு காலத்தில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதனால் தான் பெண்கள் வயதுக்கு வரும்போது சடங்குகள் என்ற பெயரில் அவர்களுக்கு சத்தான உணவுகள் வழங்கும் நடைமுறை நம் நாட்டில் பின்பற்றப்பட்டு வருகிறது.

இன்றைய சூழ்நிலையில் பெண்கள் மட்டுமன்றி ஆண்களும் ஊட்டச்சத்து குறைபாடால் பாதிக்கப்படுகிறார்கள். வறுமை, ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் போன்ற பல காரணங்களால் சத்தான உணவுகளை சாப்பிட முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இன்று ஊட்டச்சத்து குறைபாடால் ஆண்கள் மத்தியில் மலட்டுதன்மை போன்ற பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.

இதை தவிர இன்று பல பதின்பருவ குழந்தைகள் ‘அனோரெக்சியா நெர்வோசா’ என்ற மனகோளாறால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த பிரச்சனை உள்ளவர்கள் உடல் எடை கூடும் என்ற பயத்தால் உணவு சாப்பிடுவதை தவிர்ப்பர். உணவின் மேல் அவர்களுக்கு வெறுப்பும் பயமும் ஏற்படும்.

அதனால் அவர்களின் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்படும். உடல் வளர்ச்சி, நினைவு திறன், நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவை குன்றிவிடும். கவனிக்க தவறினால் உயிருக்கே ஆபத்தாகிவிடும். மேற்கத்திய நாடுகளில் அதிகளவு காணப்படும் இந்த பிரச்சனை தற்போது இந்தியா போன்ற வளரும் நாடுகளிலும் அதிகரித்து வருகிறது.

பெற்றோர்களின் அனுசரணை தேவை

ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படுவதை தவிர்க்க பதின்பருவ குழந்தைகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு தேவை.

அதேசமயம் பதின்பருவ குழந்தைகள் தங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். பெற்றோர்கள் அதை குழந்தைகளுக்கு புரிய வைக்க முயற்சிக்க வேண்டும். தோளுக்கு மேல் வளர்ந்து விட்ட குழந்தைகளிடம் தோழமையுடன் மனம் விட்டு பேசவேண்டும்.
மேலும் தங்களால் விளக்க முடியாத பிரச்சனைகள் குறித்து பெற்றோர் நிபுணர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளையும் தெரிந்து கொள்ள ஊக்குவிக்க வேண்டும். தொலைகாட்சி, இணையத்தளம் போன்றவற்றில் வெளியாகும் அத்தியாவசிய தகவல்களை படித்து பயன்பெற வேண்டும்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் உணவில் விசேஷ கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பல பதின்பருவ குழந்தைகள் தங்கள் உடல் எடையை பராமரிக்க முதலில் ஒதுக்குவது காலை உணவைத் தான்.
காலை உணவை தவிர்த்தாலோ அல்லது அளவைக் குறைத்தாலோ அந்த ஒரு நாளின் துவக்கமே பற்றாக்குறையில் ஆரம்பிக்கும். இது ஆல் ரவுண்ட் சரிவிற்கு வகை செய்யும். எனவே காலை உணவின் அத்தியாவசியத்தை பெற்றோர் குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும்.

ஊட்டமளிக்கும் உணவுகள்

பதின்பருவ குழந்தைகள் நன்றாக சாப்பிடுவதை பெற்றோர் ஊக்குவிக்க வேண்டும். ஆரோக்கியமான ஊட்டச்சத்து மிக்க உணவுகளை அவர்கள் தேர்ந்தெடுத்து உண்ண பழக்க வேண்டும். பொருளாதார வசதிக்கேற்ப தரமான உணவுகளை குழந்தைகள் சாப்பிட வேண்டும்.

தானியங்கள், பயிறுவகைகள், சிறுதானியங்கள், கீரைகள், பழங்கள், காய்கறிகள், பால், தயிர், சத்துமாவு கஞ்சி, போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துகொள்ள வேண்டும். உடலுக்கு கேடு விளைவிக்கும் இனிப்புகளை தவிர்த்து, ஆரோக்கியத்துக்கு நன்மை அளிக்கும் கடலை உருண்டை, எள்ளுருண்டை, கமர்கட், அப்பம், கொழுகட்டை, அதிரசம் போன்ற பாரம்பரிய இனிப்புகளை உண்ண வேண்டும்.
மேலும் பாக்கெட் உணவுகள், பீட்சா, பர்கர், சுகாதாரமில்லாத தரமற்ற உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

நேரத்திற்கு உணவை சாப்பிடவேண்டும். முக்கியமாக காலை உணவை வயிறாரச் சாப்பிடவேண்டும். பள்ளி செல்லும் அவசரத்தில் சாப்பாட்டை தவிர்க்கவோ குறைக்கவோ கூடாது.

நேரத்திற்கு சாப்பிடவில்லை என்றாலோ உணவை தவிர்த்தாலோ உடல்நலம் கெடும். உடல் எடை அதிகரித்தல், உடல் சோர்வு, வயிற்று புண் போன்றவை ஏற்படும்.

அதிகளவு நீர் அருந்த வேண்டும். தாகம் எடுக்கவில்லை என்ற காரணத்தால் நீர் அருந்துவதை தவிர்க்க கூடாது. குழந்தைகள் மும்முரமாக பாடத்தை கவனிக்கும் போது, எழுதும் போது தாகம் எடுக்காதது போல் உணருவது சகஜம். அதனால் இடையில் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை பெற்றோர் பழக்க வேண்டும். வெப்பமான நம் நாட்டில் தேவையான தண்ணீர் குடிப்பது அத்தியாவசியம்.

பசி அதிகரிக்க வேண்டுய இந்தப் பதின் பருவ வாழ்க்கை மற்றவர்களை முன் மாதிரியாகக் கொண்டு உடை அணிதல், தலைவாருதல், மீசை வளர்த்தல், போன்ற “போலச் செய்யும்” பண்புகளை உருவாக்கும். இந்த வகைத் தொற்றுதலில் சில உடல் நலனைப் பாதிக்கும் கெட்ட பழக்கங்களாகவும் அபத்தங்களாகவும் அமைய வாய்ப்புண்டு. புகை பிடிக்கும் பழக்கம் இப்படித்தான் விக்கிரமாத்தனின் வேதாளமாக நம மனத்தில் மரமேறுகிறது.

நண்பனாக, மந்திரியாக நல்லாசிரியனாக் பெற்றோர் அலுப்பின்றி குழந்தைகளுக்கு உதவ வேண்டும்.  கட்டுரையாளர்: நிரஞ்சனா

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation