நெல்லையில் பத்திரிகையாளர்கள் மீது போலீசார் தடியடி – வைகோ கண்டனம்

பதிவு செய்த நாள் : 29 செப்டம்பர் 2017 22:52

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் மூன்று பத்திரிகையாளர்கள் மீது தீர விசாரியாமல் வழக்குப பதிவு செய்த போலீசாரைக் கண்டித்து பத்திரிகையாளர்கள இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்  போராட்டம் நடத்திய பத்திரிகையாளர்கள் மீது தடியடி நடத்தி நூற்றுக்கு மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவத்திற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ வளாகத்தில் பயங்கர சத்தத்துடன் புகை வந்தது தொடர்பாக செய்தி வெளியிட்ட மூன்று செய்தியாளர்கள் மீது பணகுடி போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் உள்ள சுமார் 150 பத்திரிகையாளர்கள் பாளையங்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிடச் சென்ற அவர்களைப் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மேலும், பத்திரிகையாளர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தி, சட்டைகளைக் கிழித்தனர். செல்போன்களை பறித்து கீழே போட்டு உடைத்தனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களை கைது செய்து போலீசார் அழைத்துச் சென்றனர். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பத்திரிகையாளர் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பத்திரிகையாளர்கள் மீதான பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என தென்மண்டல் காவல்துறை தலைவர் சைலேஷ் குமார் யாதவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். (மனித உரிமைகள் ஆணையத்தில் உரையாற்றுவதற்காக தற்போது ஜெனீவா சென்றுள்ளார் வைகோ)

இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

நெல்லை மாவட்டம், ராதாபுரம் வட்டம், பணகுடி அருகே இஸ்ரோ மையம் அமைந்துள்ள மகேந்திரகிரி மலையில் 10 கிலோ மீட்டர் தொலைவில் பாறை ஒன்றில் பிளவு ஏற்பட்டது குறித்த தகவலின் அடிப்படையில், பத்திரிகையாளர்கள் வள்ளியூர் ராஜாகிருஷ்ணன், நெல்லை மாவட்டப் பொறுப்புச் செய்தியாளர் நாகராஜன் கந்தன் மற்றும் தினகரன் செய்தியாளர் ஜெகன் ஆகியோர் செய்தி அனுப்ப ஊடகங்களிலும், நாளேடுகளிலும் அச்செய்தி வெளிவந்துள்ளது.

இச்செய்தியின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்ய வேண்டிய பணகுடி காவல்துறை ஆய்வாளர் அதில் கவனம் செலுத்தாமல், செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர்கள் மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் (இ பி கோ 469, 505, 507, ஐடிபிசி 67) வழக்குப் பதிவு செய்துள்ளார். மகேந்திரகிரி மலையில் இஸ்ரோ மையத்தில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கும் அப்பால் பாறையில் வெடிச்சத்தம் கேட்டதாக பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் ஊடக, பத்திரிகையாளர்கள் செய்தி தந்துள்ளனர்.

மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் பாதுகாப்பு பொறுப்பில் இருக்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் உள்ளூர் கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் மனுக்களைப் பெற்று, அதன் மீது எவ்வித விசாரணையும் மேற்கொள்ளாமல் பணகுடி காவல் ஆய்வாளர் அவர்கள் மேற்கண்ட 3 செய்தியாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ள செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இவ்வாறு, வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.