ஜெருசலேம் தேவாலயத்தில் கொங்கணி மொழியில் ஜெபம் எழுதிய பலகை அமைப்பு

பதிவு செய்த நாள் : 26 செப்டம்பர் 2017 23:09

ஜெருசலேம்:

இஸ்ரேலில் ஏசு கிறிஸ்து பிறந்த ஜெருசலேமில் உள்ள ஒரு தேவாயலத்தில் கொங்கணி மொழியில் ஜெபம் எழுதிய பெயர்ப்பலகை நிறுவப்பட்டுள்ளது. ஜெருசலேம் எயின் கெரம் பகுதியில் உள்ள ஒரு பழைமையான தேவாயலத்தில் இவ்வாறு கொங்கணி மொழியில் ஜெபம் எழுதிய பெயர்ப்பலகை பொறிக்கப்பட்டுள்ளது.

இது கொங்கணி மொழி பேசும் கிறிஸ்தவர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கோவா, டையூ டாமன் போன்ற பகுதிகளில் கொங்கணி மொழி பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

இதுகுறித்து டையூ டாமன் பகுதியின் கிறிஸ்தவ பங்குத்தந்தை பிலிப் நேரி பெரோ கூறும்போது, இது கொங்கணி மொழி பேசும் மக்களுக்கு கிடைத்த கவுரவம் என்று தெரிவித்தார்.

கொல்கத்தாவை சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் ராஜூவும் இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். இதே போல வங்காள மொழி ஜபப் பலகையும் இடம்பெற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இதற்குமுன் இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய இந்திய மொழிகளில் ஜெபம் எழுதப்பட்ட பெயர்ப்பலகைகள் அந்த தேவாலயச் சுவற்றில் அமைக்கப்பட்டுள்ளன.