இந்தியா - ஜப்பான் இடையே 15 ஒப்பந்தங்கள் கையெழுத்து

பதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2017 23:49

காந்திநகர்:

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபேயும், பிரதமர் மோடியும் இன்று பேச்சு நடத்தினார்கள். அதன்பிறகு இருநாடுகளுக்கும் இடையே 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டமான அகமதாபாத்-மும்பை புல்லட் ரயில் திட்டத்தை பிரதமர் மோடியும், ஜப்பான் அதிபர் ஷின்ஸோ அபேயும் இன்று தொடங்கி வைத்தனர்.

அதன் பிறகு குஜராத் தலைநகரான காந்தி நகரில் பிரதமர் மோடியும், ஷின்ஸோ அபேயும் பேச்சு நடத்தினார்கள்.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, இருநாடுகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் மட்டுமல்லாது உலகளாவிய பிரச்சினைகளிலும் இந்தியா - ஜப்பான் உறவு தொடரும் என்று கூறினார்.


இந்தியா - ஜப்பான் இடையே விமானப் போக்குவரத்து, வர்த்தகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ பேசும்போது, சமீபத்தில் இந்தியா-ஜப்பான்-அமெரிக்க கடற்படைகள் இணைந்து நடத்திய மலபார் கடற்பயிற்சி குறித்து நினைவுகூர்ந்தார்.   

மோடி ஜப்பான் சென்ற போது இந்தியா-ஜப்பான் இடையே அணுசக்தி ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்து ஆனது. இதற்கு மோடி ஷின்ஷோ அபேக்கும், ஜப்பான் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

சென்ற 2016-17ம் ஆண்டில் ஜப்பான் இந்தியாவில் 470 கோடி டாலர் முதலீடு செய்துள்ளது. இது முந்தைய ஆண்டை விடவும் 80 சதவீதம் அதிகம் என்று மோடி குறிப்பிட்டார்.

கூட்டறிக்கை வெளியீடு

மோடி-ஷின்ஸோ சந்திப்பிற்குப்பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், அல்கொய்தா, ஐஎஸ்ஐஎஸ், பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஸ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா ஆகிய பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிராக இருநாடுகளுக்கும் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுப்பது எனக்கூறப்பட்டு இருந்தது.

2008 மும்பை குண்டுவெடிப்பு, 2016 பதன்கோட் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூட்டறிக்கையில் வலியுறுத்தப்பட்டு இருந்தது.