அமெரிக்காவின் முக்கியமான நிறுவனத்தை சீனா கையகப்படுத்த தடை : அதிபர் டிரம்ப் அதிரடி நடவடிக்கை

பதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2017 23:36

வாஷிங்டன்,

அமெரிக்காவின் லாட்டீஸ் செமிகண்டக்டர் காப்பரேஷன் ( Lattice Semiconductor Corporation) என்ற நிறுவனத்தை கையகப்படுத்த சீனாவின் கான்யான் பிரிட்ஜ் ஃபண்ட் (Canyon Bridge Fund) என்ற நிறுவனம் திட்டமிட்டது. ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதற்கு தடை விதித்துள்ளார். அமெரிக்காவின் பாதுகாப்பை கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக டிரம்ப் கூறியுள்ளார்.

அதிபர் டிரம்ப் பதவியேற்றது முதல் அவரது நிர்வாகம் சீன வர்த்தகம் தொடர்பாக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தேசிய பாதுகாப்பை முன்னிருத்தி சீனாவின் அலுமினியம் மற்றும் ஸ்டீல் ஆகியவற்றின் வர்த்தகத்தில் விசாரணை மேற்கொள்ள அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அமெரிக்காவின் செமி கண்டக்டர் நிறுவனமான லாட்டீஸ் செமிகண்டக்டர் காப்பரேஷனை சீனாவின் கான்யான் பிரிட்ஜ் ஃபண்ட் என்ற நிறுவனம் கையகப்படுத்த திட்டமிட்டது.

ஆனால் இந்த திட்டத்திற்கு அதிபர் டிரம்ப் தடை விதித்துள்ளார்.

அமெரிக்காவில் தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு  வெளிநாட்டு முதலீடுகளுக்கு தடை விதிக்க அதிபர் டிரம்புக்கு அதிகாரம் உண்டு.

லாட்டீஸ் செமிகண்டக்டர் காப்பரேஷன் என்ற இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் தொழில்துறை சார்ந்த பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் அமெரிக்க அரசுக்கும் பல முக்கியமான பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

இது குறித்து அமெரிக்காவின் கருவூல துறை வெளியிட்ட செய்தியில் ‘‘லாட்டீஸ் செமிகண்டக்டர் காப்பரேஷன் நிறுவனம் அரசுக்கு சில முக்கியமான பொருட்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் அதை சீன நிறுவனம் கையகப்படுத்தினால் தேச பாதுகாப்பு தொடர்பான தகவல்கள் வெளியே கசியும் அபாயம் உள்ளது. அதனால் அதிபர் டிரம்ப் நேரடியாக தலையிட்டு சீனாவின் முதலீட்டுக்கு தடை விதித்துள்ளார்’’ என தெரிவித்துள்ளது.