குட்கா விவகாரம்: திமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க அக்.12 வரை தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

பதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2017 23:19

சென்னை,

சட்டசபையில் குட்கா கொண்டு வந்த விவகாரத்தில் திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸ் தொடர்பாக அக்டோபர் 12ம் தேதி வரை சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப்பொருள்களை சட்டசபைக்குள் கொண்டு வந்ததாக எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 20 திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது உரிமை மீறல் புகார் கொண்டு வரப்பட்டது. அதன்படி உரிமைக்குழு கூட்டம் கூடியது. திமுக எம்எல்ஏக்கள் 21 பேருக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

நோட்டீஸை எதிர்த்து ஸ்டாலின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு கடந்த வாரம் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் ஆஜராகி வாதாடினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, திமுக எம்எல்ஏக்களுக்கு அனுப்பப்பட்ட உரிமைக்குழு நோட்டீஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க சபாநாயகர் தனபாலுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். வழக்கை 14ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

அதன்படி, இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மறு உத்தரவு வரும் வரை குட்கா விவகாரத்தில் திமுக எம்எல்ஏக்கள் 21 பேர் மீது உரிமைக்குழு நோட்டீஸ் மீது சபாநாயகர் தனபால் எந்த நடவடிக்கையும் எடுக்கத் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கை அக்டோபர் 12ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி துரைசாமி உத்தரவிட்டார். ஆகவே, திமுக எம்எல்ஏக்களுக்கு உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸ் மீது அக்டோபர் 12ம் தேதி வரை நடவடிக்கை இருக்காது.