ஜம்மு காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆதரவாளர்கள் 2 பேர் கைது

பதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2017 23:02

ஸ்ரீநகர்

ஜம்மு காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆதரவாளர்கள் 2 பேரை பாதுகாப்புப் படையினர் இன்று கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குப்வாரா மாவட்டம் ஹந்த்வாரா பகுதியில் நடந்த 2 வெவ்வேறு சம்பவங்களில், 2 பேரை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். இருவரிடம் இருந்தும் கைக்குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கச்லூ கிரால்குந்த் பகுதியை சேர்ந்த வஹீத் அஹமது பட், லர்கனபோரா கிராமத்தின் அருகில் உள்ள சோதனைச் சாவடியில் வழக்கமான கண்காணிப்பில் பிடிபட்டார். இதேபோல் சுபெர்னகாமா பகுதியைச் சேர்ந்த மொஹமது ஷஃபி மிர் என்னும் மற்றொருவர், குலாமாபாத் கிராமத்தின் அருகில் உள்ள சோதனைச் சாவடியில் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட இருவரும் தடைசெய்யப்பட்ட ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் ஆதரவாளர்கள் என்று தெரியவந்துள்ளது. இருவரின்மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.