அரசியல் வேறு, நட்பு வேறு – ஸ்டாலினை சந்தித்ததில் அரசியல் இல்லை: எச். ராஜா பேட்டி

பதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2017 22:45

சென்னை,

பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா, திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினைச் இன்று சந்தித்தார். இந்த சந்திப்பில் எள்ளளவும் அரசியல் இல்லை என எச். ராஜா தெரிவித்தார்.

அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலினைச் சந்தித்தபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எச். ராஜா, இந்த சந்திப்பில் எள்ளளவும் அரசியல் இல்லை. அரசியல் வேறு, நட்பு வேறு என்பதில் தெளிவாக இருக்கிறேன்.

என்னுடைய மணி விழாவுக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக ஸ்டாலினைச் சந்தித்தேன். திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல் நலம் சரியில்லாததால், அவரை விழாவிற்கு அழைக்கவில்லை. அவரின் உடல்நிலை குறித்து ஸ்டாலினிடம் நலம் விசாரித்தேன்.

பாஜகவின் அகில இந்திய எதிர்கட்சி காங்கிரஸ். அதன் தலைவர்கள் டெல்லியில் நடைபெறும் அரசு விழாவில் பாஜக தலைவர்களை சந்திக்கிறார்கள், பேசுகிறார்கள். அது போலதான் இந்த சந்திப்பும். இதில் தவறு ஒன்றும் இல்லை.

சாரணர் இயக்கத்திற்கு தலைவராக போட்டியிடுவது பற்றி செய்தியாளர்களின் கேள்வி பதிலளித்தார் ராஜா.

எனது தந்தை ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டத்தின் சாரண, சாரணியர் இயக்கத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேல் முக்கியப் பொறுப்புகளை வகித்தவர். அதனால், அந்த இயக்கத்தோடு சிறுவயது முதல் எனக்கு தொடர்பு உண்டு. நண்பர்கள் உண்டு. அந்த அடிப்படையில் சாரண, சாரணியர் இயக்கத்தில் உள்ள நண்பர்கள் விரும்பி கேட்டுக் கொண்டதால் அதன் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன். நிச்சயம் வெற்றியும் பெறுவேன் என்று எச்.ராஜா கூறினார்.