மலேஷிய பள்ளியில் தீவிபத்து: மாணவர்கள் உட்பட 24 பேர் பலி

பதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2017 22:30

கோலா லம்பூர்

மலேஷியா தலைநகர் கோலா லம்பூரில் உள்ள ஒரு பள்ளியில் இன்று அதிகாலை திடீரென்று தீப்பிடித்துக்கொண்டது. இதில் சிக்கி மாணவர்கள் உட்பட 24 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


கோலா லம்பூர் மத்தியில் தஹ்ஃபிஸ் தருல் குரான் இத்திஃபகியுயா பள்ளி அமைந்துள்ளது. இன்று அதிகாலை அந்த 2 மாடி கட்டிடத்தில் எதிர்பாராத விதமாக தீப்பற்றிக்கொண்டது. தீ மளமளவென பரவியதால் கரும்புகை சூழந்தது. தகவல் அறிந்ததும் தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கடுமையாக போராடி தீயை அணைத்தனர்.

”கடந்த 20 வருடங்களில் ஏற்பட்ட தீ விபத்துகளில் மிகக்கொடூரமான தீ விபத்து இதுதான்” என கோலா லம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை இயக்குநர் கிருத்தின் திரஹ்மான் தெரிவித்தார்.

”இந்த விபத்தில் சிக்கி 24 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 23 குழந்தைகள், 1 வார்டன் ஆகியோர் உள்ளடங்குவர். இவர்கள் தீயிலிருந்து வெளியே தப்பிக்க முடியாமலோ அல்லது மூச்சுத்திணறல் ஏற்பட்டோ உயிரிழந்திருக்கலாம். இந்த தீவிபத்து குறித்து விசாரணை தீவிரமாக நடைபெற்றுவருகிறது” என்று கூறினார்.