மேட்ரிமோனியல் தளம் மூலம் மராட்டியப் பெண்ணிடம் ரூ. 1.57 லட்சம் மோசடி செய்த நைஜீரியர் கைது

பதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2017 22:18

தானே:

மேட்ரிமோனியல் இணையதளம் மூலம் தொடர்பு கொண்டு மராட்டியப் பெண்ணிடம் ரூ.1.57 லட்சம் மோசடி செய்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.

இதுபற்றிய விவரம் வருமாறு:
மராட்டிய மாநிலம் தானேவைச் சேர்ந்த பெண் ஒருவர் வரன் தேடி மேட்ரிமோனியல் தளம் ஒன்றில் கணக்கு தொடர்ந்திருந்தார். அந்தத் தளத்தில் இந்தியரின் பெயரில் போலியாக கணக்கு வைத்திருந்த நைஜீரியர் ஒருவர் அந்தப் பெண்ணை தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அவரை இந்தியர் என்று அந்தப் பெண் நம்பியுள்ளார். சில நாட்கள் பேசிய பின்னர் இருவரும் தொலைபேசி எண்ணை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

அதன்பிறகு ஒருநாள் அந்தப் பெண்ணை தொடர்பு கொண்ட நைஜீரியர் தான் டில்லி விமான நிலையத்திற்கு வந்திருப்பதாகக் கூறினார். அதிகப்படியான உடமைகளை எடுத்து வந்ததால், விமான நிலைய அதிகாரிகள் அபராதம் விதித்ததாகவும் ரூ.1.57 லட்சம் கட்ட வேண்டும் என்றும் அந்தப் பணத்தை தன் கணக்குக்கு அனுப்பி வையுங்கள் என்றும் அந்தப் பெண்ணிடம் கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பிய அந்தப் பெண் பணத்தை அனுப்பி வைத்துள்ளார்.

அதன்பிறகு அந்த நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. பணத்துடன் தப்பி விட்டார். இதுகுறித்து அந்தப் பெண் தானே போலீசாரிடம் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டில்லியில் அந்த நபரை கைது செய்தனர்.

அவரிடம் இருந்து ஒரு லேப்டாப், 5 மொபைல் போன்கள், ஒரு மோடம், 3 சிம் கார்டுகள், 2 ஏடிஎம் கார்டுகள், 3 பாஸ்போர்ட்டுகள், ரூ. 66,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இப்படியும் மோசடியில் பலர் இறங்கி உள்ளார்கள். எனவே வரன் தேடுபவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.