அரசு பெரும்பான்மையை நிரூபிக்க கோரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஐகோர்ட்டில் புதிய மனு

பதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2017 20:47

சென்னை,

சட்டப்பேரவையைக் கூட்டி தமிழக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களும் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

எடப்பாடி கே. பழனிசாமி அரசு மீதான நம்பிக்கையை இழந்து விட்டதாகக் கூறி தினகரன் தலைமையிலான 19 எம்.எல்.ஏக்கள் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மனு கொடுத்தனர். அந்த மனு மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் , ஆளுநர் அமைதி காத்து வருகிறார்.
இந்த நிலையில் சட்டப்பேரவை எதிர்கட்சித்தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க. ஸ்டாலினும், பிற எதிர்கட்சிகளும் சேர்ந்து ஆளுநரிடம் இந்த  விவகாரம் தொடர்பாக கடிதம் கொடுத்தனர்.

ஆனால், திமுகவினர் அளித்த இந்த கடிதத்திற்கும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லாத காரணத்தால், நேற்று முன்தினம் மு.க. ஸ்டாலின் சென்னை உயர் நீதின்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதில் அவர், ஆளுநர் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் சட்டப்பேரவையினை உடனடியாகக் கூட்டி, தமிழக அரசு தனது பெரும்பான்மையினை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று ரிட் மனு தாக்கல் செய்தார்.

இன்று அந்த மனு மீதான விசாரணை நடந்து கொண்டிருந்தபொழுது, மூத்த வழக்கறிஞர் சி.எஸ். ராமன்: இதே போன்ற கோரிக்கையினை வலியுறுத்தி, டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார்.

எனவே இரண்டு வழக்குகளையும் சேர்த்து விசாரிக்குமாறு அவர் கோரிக்கை வைத்தார்.

அதற்கு அவர் தரப்பு வாதங்களை மனுவாக தாக்கல் செய்தால் விசாரிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.