உத்தர பிரதேசத்தில் படகு கவிழ்ந்து விபத்து: 19 பேர் பலி, பலர் மாயம்

பதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2017 20:35

பாக்பத்

உத்தர பிரதேச மாநிலம் யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 19 பேர் நீரில் மூழ்கி உயிரிழிந்தனர். மேலும் பலர் மாயமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

யமுனை ஆற்றில் படகு ஒன்று 60க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. மாவட்ட தலைநகரத்தில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள கதா கிராமத்திற்கு அருகில் சென்றுகொண்டிருந்தபோது படகு திடீரென்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது என மாவட்ட நீதிபதி பவானி சிங் தெரிவித்தார்.
காவல்துறை மற்றும் மாகாண ஆயுதப்படை அதிகாரிகள் படகு விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுவரும்போது 19 பேரின் உடல்களை கண்டெடுத்துள்ளனர்.
 மேலும் 12 பேரை பாதுகாப்பாக மீட்டுள்ளனர். தொடர்ந்து தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
படகில் அதிக அளவிலான பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றதால், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த படகில் பயணித்தவர்கள் பெரும்பாலானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்க உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். இதனை அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

முதலில் இந்த விபத்தில் 22 பேர் பலியானதாக தகவல் வெளியானது. 19 பேரே உயிர் இழந்தனர் என்பதை மாலையில் அதிகாரிகள் உறுதிப்படுத்தினார்கள்.