அகமதாபாத்-மும்பை புல்லட் ரயில் திட்டம்: பிரதமர் மோடி– ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே அடிக்கல் நாட்டினர்

பதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2017 19:25

அகமதாபாத்:

அகமதாபாத் – மும்பை இடையே இந்தியாவின் முதல் அதிவேக புல்லட் ரயில் திட்டத்தை, பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும் அடிக்கல் இன்று நாட்டி தொடங்கி வைத்தனர். இதற்காக குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, மகாராஷ்ட்ர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

ஒருலட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தொடங்கப்படும் இந்தத் திட்டத்திற்கு மோடியும், அபேவும் இணைந்து அடிக்கல் நாட்டினர். அடிக்கல் நாட்டியதும் சபர்மதி புல்லட் ரயில் நிலையத்திற்கான பணிகள் உடனடியாக துவங்கியது.
திட்டத்திற்கு அடிக்க நாட்டி பேசயி ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, இந்தியாவின் வளர்ச்சிக்காக இணைந்து செயல்படுவதில் பெருமிதம் கொள்வதாக கூறினார். இந்தியா – ஜப்பான் உறவு சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அபே கூறினார்.
பிரதமர் மோடி தொலைநோக்குப் பார்வையுள்ள தலைவர் என்று பாராட்டிய அபே, இந்தியாவுக்கு துணைபுரியும் நாடாக ஜப்பானை அவர் தேர்ந்தெடுத்தது பெருமை அளிப்பதாகவும் கூறினார்.
பின்னர் உரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டின் வளர்ச்சிக்கு போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்துவது அவசியம் என்றார்.

அதிவேக புல்லட் ரயில் திட்டத்திற்கு ஒத்துழைப்பு அளிப்பதற்காக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேக்கு தமது நன்றியைத் தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியாவும் ஜப்பானும் இணைந்தே வளரும் என தெரிவித்தார். இந்தியாவின் உண்மையான நண்பன் ஜப்பான் என்பது இந்த மேடையில் நிரூபணம் ஆகி இருப்பதாகவும் மோடி குறிப்பிட்டார்.

இந்தத் திட்டத்திற்கு 50 ஆண்டுகளில் திருப்பித் தரும் வகையில், 88 ஆயிரம் கோடி ரூபாயை 0.1 சதவீத வட்டியில் ஜப்பான் கடனாக தருகிறது. இதை பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.

ஏழை, எளிய மக்கள் மத்தியில் தொழில்நுட்ப அறிவை வளர்த்தெடுப்பதன் மூலம், வறுமைக்கு எதிராக போராட முடியும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். புல்லட் ரயில் திட்டம் மூலம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடையும் என்றும் மோடி குறிப்பிட்டார்.

இந்தத் திட்டம் 2022ம் ஆண்டில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்த தூரம் 500 கிலோ மீட்டர் ஆகும். இந்திய ரயில்வே மற்றும் ஜப்பானின் ஷின்கான்ஸன் தொழில்நுட்பத்துடன் இணைந்து இந்தத் திட்டம் நிறைவேற்றப்படுகிறது.

புல்லட் ரயில் திட்டத்திற்கு பயிற்சி அளிப்பதற்காக வதோதராவில் ஒரு மையம் தொடங்குவதற்கும் பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபேயும் அடிக்கல் நாட்டினார்கள். இதில் 4,000 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.