டிரம்ப் நிர்வாகத்தின் அகதிகள் குடியேற்ற தடை சட்டத்திற்கு அமெரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி, இடைக்காலத் தடை ரத்து

பதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2017 03:32

வாஷிங்டன்,

அமெரிக்காவில் அகதிகளின் குடியேற்றத்திற்கு தடை விதிக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் ஆணைக்கு அமெரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதன் தொடர்பாக ஏற்கெனவே கீழமரவு நீதி மன்றங்களால் வழங்கப்பட்ட இடைக்கால தடைகளையும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

அதிபர் டிரம்ப் 6 முஸ்லிம் நாடுகளை சேர்ந்த மக்கள் மற்றும் உலகளவில் உள்ள அகதிகள் அனைவருக்கும் அமெரிக்காவில் நுழைய தடை விதித்து ஆணை பிறப்பித்தார். இந்த ஆணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளின் இறுதியில் 6 முஸ்லிம் நாடுகளை சேர்ந்த மக்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஆணைக்கு கீழ் நீதிமன்றங்கள் 90 நாட்கள் இடைக்கால தடை விதித்தன. அதேபோல் அகதிகள் குடிபெயர்வுக்கு எதிராக போடப்பட்ட ஆணைக்கு 120 நாட்கள் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டிரம்பின் முஸ்லிம் நாட்டு மக்களின் குடியேற்ற தடை சட்டத்திற்கான இடைக்கால தடை இந்தாண்டு நிறைவடைகிறது. அதே போல் அகதிகள் குடியேற்றத்தை தடுக்கும் ஆணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை ஒரு மாதத்தில் முடிவடைகிறது. அதன் காரணமாக உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக அடுத்தகட்ட விசாரணை நடைபெற்றது. அதில் அமெரிக்காவில் அகதிகள் குடியேற்றம் தொடர்பாக கீழ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அமெரிக்க உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் அகதிகள் அமெரிக்காவில் குடியேற டிரம்ப் நிர்வாகம் அளித்த தடை உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் அனுமதியளித்தது.

இதன் மூலம் அக்டோபர் இறுதிக்குள் அமெரிக்காவில் சுமார் 24,000 அகதிகள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தீர்ப்பு டிரம்பின் குடியேற்ற தடை சட்டத்தில் வழங்கப்பட்ட இறுதி தீர்ப்பாக எடுத்துகொள்ள முடியாது. இந்த வழக்கில் வரும் அக்டோபர் 10ம் தேதி அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் என்று நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

இது குறித்து செய்தி வெளியிட்ட வெள்ளை மாளிகை பேச்சாளர் சாரா ஹக்கபீ ‘‘ உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தடை ஆணையின் முக்கிய விதிமுறையை செயல்படுத்த நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. டிரம்பின் குடியேற்ற தடை ஆணை முழுவதுமாக நடைமுறைப்படுத்த நாங்கள் இறுதி வரை போராடுவோம்’’ என்று சாரா தெரிவித்தார்.