ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்துவோம்: ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் விதித்த தடைக்கு வடகொரியா பதிலடி

பதிவு செய்த நாள் : 13 செப்டம்பர் 2017 23:39

சியோல்,

ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் விதித்த தடைக்கு கண்டனம் தெரிவித்துள்ள வடகொரியா அதற்கு பதிலடியாக ஏவுகணை சோதனைகளை மேலும் அதிகரிப்போம் என்று சூளுரைத்துள்ளது.


வடகொரியா சில நாட்கள் முன்பு 6 வது அணுகுண்டு சோதனையை நடத்தியது. இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் பல பொருளாதார தடைகள் விதித்தும் வடகொரியா தன் அணு ஆயுத சோதனையை நிறுத்தவில்லை.

இந்நிலையில் அமெரிக்காவின் முயற்சியால் வடகொரியா மீது மிக கடுமையான பொருளாதார தடை ஒன்று திங்கட்கிழமை அன்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றப்பட்டது. இது வடகொரியாவின் மீது விதிக்கப்படும் 8வது தடையாகும்.

இந்த புதிய தடையால் வடகொரியாவின் ஜவுளி ஏற்றுமதி மற்றும் எண்ணெய், எரிவாயு போன்றவற்றின் இறக்குமதி ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக வடகொரியாவில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயம் உள்ளது.

ஐ.நாவின் புதிய தடைக்கு வடகொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தி வெளியிட்ட வடகொரியா வெளியுறவு துறை ‘‘அமெரிக்கா திட்டமிட்டு மற்றொரு பொருளாதார தடையை எங்கள் மீது திணித்துள்ளது. இதன் மூலம் வடகொரியா தேர்ந்தெடுத்துள்ள பாதை சரியானது என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். எனவே வடகொரியாவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆயுத சோதனையை மேலும்  அதிகரிப்போம்’’ என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.