சொத்தில் பெண்களுக்கு கிடைக்கும் பங்கு என்ன...? – குட்டிக்கண்ணன்

பதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2017

பெரும்­பா­லான பெண்­க­ளுக்கு சொத்­தில் தனக்­காக கிடைக்­கும் பங்கு என்­ன­வென்று தெரி­ய­வில்லை. மேலும் பிறந்த வீட்­டில் மற்­றும் புகுந்த வீட்­டில் அவர்­க­ளுக்கு சொத்­தில் உள்ள உரி­மை­க­ளை­யும் அறி­யா­மல் உள்­ள­னர். இந்த ஐயங்­களை போக்­கி­றார் சென்னை உயர் நீதி­மன்ற வழக்­க­றி­ஞர் நிவே­தி­தா.

"பெண்­க­ளுக்­கான சொத்­து­ரிமை, அவ­ரின் சொத்­தில் அவ­ருக்கு உள்ள உரி­மை­கள் என இரண்டு வகை­யாக இந்த விஷ­யத்தை அணு­கு­வோம். இதைத் தெளி­வாக தெரிந்­து­கொண்­டால் குழப்­பங்­கள் இருக்­காது.

முத­லில், பெண்­க­ளுக்­கான சொத்­து­ரிமை குறித்து தெரிந்து கொள்­வோம். இந்த உரிமை அவர்­க­ளுக்­குத் தானாக வந்­து­வி­ட­வில்லை. 1937 வரை இந்து பொதுக் குடும்ப சொத்­தில் பெண்­க­ளுக்கு எந்­த­வி­த­மான பங்­கும் இல்­லா­மலே இருந்­தது. அதா­வது, பங்­கு­ரி­மை­யா­ன­வர்­க­ளாக  ஆண்­கள் மட்­டுமே இருக்க முடி­யும். கண­வர் இறந்­து­விட்­டால் அவ­ரு­டைய பங்கு, அந்த கூட்­டுக் குடும்­பத்­தி­லுள்ள மற்ற ஆண்­க­ளுக்­கு­தான் சேர்ந்­து­வி­டும். ஆனால், ஆண்­க­ளைப்­போல, மனை­விக்கோ, மக­ளுக்கோ எந்­தப் பங்­கும் கிடைக்­காது.

இந்த நடை­முறை மாற்றி அமைக்­கப்­பட்டு, சொத்­தில் பெண்­க­ளுக்­கான உரி­மைச் சட்­டம் 1937-ல் கொண்­டு­வ­ரப்­பட்­டது. அதன்­படி, கூட்­டுக் குடும்ப அமைப்­பில் கண­வ­ரின் சொத்து மனை­விக்கு வந்­த­டைய வழி செய்­தது. ஆனால், முழு­மை­யான உரிமை வந்­த­டை­ய­வில்லை. அதன்­பி­றகு, 1956-ல் இந்து வாரிசு உரி­மைச் சட்­டம் இயற்­றப்­பட்­ட­போ­து­தான் பெண்­க­ளுக்கு சொத்­து­ரிமை மேலும் பலப்­ப­டுத்­தப்­பட்­டது. அதன்­படி, ஓர் ஆணின் சொத்து, அவ­ரது காலத்­திற்­குப் பிறகு, பொதுக் குடும்ப சொத்து என்­றும், தனிப்­பட்ட சொத்து என்­றும் இரண்டு வகை­யா­கப் பிரிக்க வழி செய்­தது. இதில், தனிப்­பட்ட சொத்­தில் வாரிசு அடிப்­ப­டை­யில் மனை­விக்­கும், மகள்­க­ளுக்­கும் சம­பங்கு வழங்க வகை செய்­யப்­பட்­டது. ஆனால், பொதுக் குடும்­பச் சொத்து, பரம்­பரை சொத்­தில் உரிமை எது­வும் வழங்­கப்­ப­ட­வில்லை.

1989-ல் தமிழ்­நாடு, ஆந்­திரா போன்ற மாநி­லங்­க­ளில் இந்த சட்ட நடை­மு­றை­யில் திருத்­தம் கொண்­டு­வ­ரப்­பட்டு, பொதுக் குடும்­பச் சொத்­தி­லும் பெண்­கள் உரிமை கோர­லாம் என்­கிற நிலை உரு­வாக்­கப்­பட்­டது. ஆனால், அதற்கு இரண்டு நிபந்­த­னை­கள் விதிக்­கப்­பட்­டன. அதன்­படி,

25.03.1989-க்கு முன்­பாக திரு­ம­ணம் ஆன பெண்­க­ளுக்கு இந்த சட்ட திருத்­தம் பொருந்­தாது. மேலும், அன்­றைய தேதி வரை பொதுக் குடும்­பச் சொத்து பாகம் பிரிக்­கப்­பட்­டி­ருக்­கக் கூடாது என்று இந்த சட்ட திருத்­தம் சொன்­னது.

2005-ம் ஆண்டு நமது நாடா­ளு­மன்­றத்­தில் ஒரு சட்ட திருத்­தம் கொண்டு வரப்­பட்­டது. இதன்­படி, பெண் என்­ப­வர் குடும்­பத்­தின் பங்­கு­ரி­மை­யா­ன­வ­ராக கரு­தப்­ப­டு­வார் என்­றது. அதன் விளை­வாக, பொதுக் குடும்­பச் சொத்து என்­றா­லும், ஆணின் தனிப்­பட்ட சொத்து என்­றா­லும், ஓர் ஆணுக்கு என்ன உரிமை உள்­ளதோ, அந்த உரிமை பெண்­ணுக்­கும் உள்­ளது.

2005ம் ஆண்டு முதல் இந்த சட்ட திருத்­தம் நடை­மு­றைக்கு வந்­தது. தற்­போது சொத்­து­க­ளில் ஆண், பெண் பேதம் கிடை­யாது. காலப்­போக்­கில் இப்­படி பல மாற்­றம் கண்­டு­வந்­தி­ருக்­கி­றது பெண்­க­ளுக்­கான சொத்­து­ரி­மைச் சட்­டம்.

அடுத்து, நாம் பார்க்­க­வேண்­டிய முக்­கி­ய­மான விஷ­யம், ஆண்­கள் பெய­ரில் உள்ள சொத்­து­க­ளில் அவ­ருக்கு உள்ள உரி­மை­யும், பெண்­கள் பெய­ரில் உள்ள சொத்­து­க­ளில் அவ­ருக்கு உள்ள உரி­மை­க­ளும் என்ன என்­ப­தைத்­தான்.

ஆண்­கள் பெய­ரில் உள்ள சொத்து அவர்­க­ளுக்கு எப்­படி கிடைத்­தது என்­ப­தைப் பொறுத்து அவர்­க­ளின் உரிமை தீர்­மா­னிக்­கப்­ப­டும். அதா­வது, மூதா­தை­யர் வழி­யாக ஓர் ஆணுக்­குக் கிடைக்­கும் சொத்­தில் அவ­ரு­டைய மக­னுக்­கும், பேர­னுக்­கும் பங்­கு­ரிமை உண்டு. அதே­போல, ஒரு பொதுக் குடும்­பத்­தில், ஓர் ஆண் பெய­ரில் சொத்து இருந்­தா­லும் அதே குடும்­பத்­தைச் சேர்ந்த மற்­ற­வர்­கள் பொதுக் குடும்ப உறுப்­பி­னர்­கள் என்­கிற அடிப்­ப­டை­யில் பாகம் கேட்க உரிமை உண்டு. அதே ஆண் அவ­ரு­டைய சுய­சம்­பாத்­தி­யத்­தில் அல்­லது அவ­ரு­டைய தனிப்­பட்ட பாக­மா­கக் கிடைக்­கும் சொத்­து­கள் அவ­ருக்கு மட்­டுமே உரிய தனிப்­பட்ட சொத்­தா­கும். இப்­படி சொத்து வந்த முறை­யைப் பொறுத்து சொத்­தின் உரிமை தீர்­மா­னிக்­கப்­ப­டு­கி­றது.

ஆனால், பெண்­கள் பெய­ரில் உள்ள சொத்­து­களை பொறுத்து இவ்­வி­த­மான நிபந்­த­னை­கள் எது­வும் இல்லை. இந்து வாரிசு உரி­மைச் சட்­டம் பிரிவு 14-ன்படி ஒரு பெண்­ணுக்கு எந்த வகை­யில் சொத்­து­கள் இருந்­தா­லும் அது அவ­ரு­டைய தனிப்­பட்ட சொத்­தா­கவே கரு­தப்­ப­டும். திரு­ம­ண­மான ஒரு பெண்­ணுக்கு அவ­ரது பெற்­றோர் மூல­மா­கச் சொத்­து­கள் கிடைத்­தால், அதில் அவ­ரது கண­வரோ, குழந்­தை­களோ உரிமை கோர முடி­யுமா? என்று சிலர் கேட்­கி­றார்­கள்.

ஏற்க­னவே சொன்­ன­படி, இந்து வாரிசு உரி­மைச் சட்­டம் பிரிவு 14-ன்படி ஒரு பெண்­ணிற்கு எந்த வகை­யில் சொத்து கிடைத்­தா­லும், அதா­வது அவ­ரது பெற்­றோர்­கள் மூல­மாக, கண­வ­னின் மூல­மாக அல்­லது சுய சம்­பாத்­தி­யம் மூல­மாக என எந்த வகை­யில் சொத்து கிடைத்­தா­லும், அது அவ­ரது தனிப்­பட்ட சொத்­தா­கவே கரு­தப்­ப­டும். எனவே, அந்­தச் சொத்­தில் அவர் உயி­ரு­டன் இருக்­கும் வரை அவ­ருக்கு எதி­ராக பாகமோ, உரி­மையோ வேறு யாரும் கோர முடி­யாது.

கண­வன் தன்­னு­டைய வரு­மா­னத்­தைக் கொண்டு மனைவி பெய­ரில் ஒரு சொத்தை வாங்­கு­கி­றார். இரு­வ­ருக்­கும் பிரச்னை ஏற்­ப­டு­கி­றது. இந்த நிலை­யில் கண­வன் அந்­தச் சொத்தை திரும்ப எடுத்­துக்­கொள்ள முடி­யுமா என்று கேட்­டால், முடி­யாது

எப்­படி என்­கி­றீர்­களா?

ஒரு­வர் தன்­னு­டைய பணத்­தைக்­கொண்டு வேறொ­ரு­வர் பெய­ரில் சொத்­து­களை கிர­யம் செய்­வது, பினாமி பரி­வர்த்­தனை தடுப்­புச் சட்­டத்­தின்­படி தடை செய்­யப்­பட்ட ஒன்­றா­கும். எனவே, யார் பெய­ரில் சொத்து இருக்­கி­றதோ, அவரே அந்­தச் சொத்­தின் உரி­மை­யா­ள­ரா­கக் கரு­தப்­ப­டு­வார். சட்­டப்­படி, வேறு யாரும் அந்­தச் சொத்­தின் உரி­மை­யா­ள­ரா­கக் கோர முடி­யாது. அப்­ப­டிக் கோரு­வது குற்­றம்.

ஆனால், இந்த நடை­மு­றை­யி­லும் விதி­வி­லக்கு உள்­ளது. அதா­வது, ஒரு­வர் தன் மனைவி பெய­ரிலோ அல்­லது திரு­ம­ண­மா­காத மகள் பெய­ரிலோ சொத்­து­களை வாங்­கி­யி­ருந்­தால், அந்­தச் சொத்து வாங்­கு­வ­தற்­கான பணம் தன்­னால் மட்­டுமே செலுத்­தப்­பட்­டது என்­ப­தை­யும், மனைவி / மக­ளுக்கு வரு­மா­னம் ஏது­மில்லை அல்­லது கிர­யத்­தொகை அவ­ரால் செலுத்­தப்­ப­ட­வில்லை என்­பதை நிரூ­பித்­தால் மட்­டுமே அந்­தச் சொத்தை அவ­ருக்கு வழங்க நீதி­மன்­றம் உத்­த­ர­வி­டும்.

ஒரு பெண்­ணின் சொத்­திற்கு யார், யார் வாரி­சு­க­ளாக இருக்க முடி­யும் என்­பது முக்­கி­ய­மான கேள்வி. இந்து வாரிசு உரி­மைச் சட்­டம் பிரிவு 15-ன்படி, ஒரு பெண் இறந்­த­பி­றகு அவ­ரு­டைய கண­வன் மற்­றும் மகன், மகள்­கள் வாரி­சு­க­ளா­கின்­ற­னர். அவர்­கள் இல்­லா­த­போது கண­வ­னு­டைய வாரி­சு­க­ளுக்கு அந்­தச் சொத்து போய் சேரும்.

கண­வ­னோடு கருத்து வேறு­பாடு ஏற்­பட்டு பிரிந்து வாழும் மனைவி, விவா­க­ரத்து வழக்கு நிலு­வை­யில் உள்ள நிலை­யில் இறந்­து­விட்­டால் அவ­ருக்கு வாரிசு யார்? என்று நீங்­கள் கேட்­க­லாம். விவா­க­ரத்து வழங்­கப்­ப­டும்­வரை கண­வன் - மனைவி என்­கிற பந்­தம்­தான் கணக்­கி­லெ­டுக்­கப்­ப­டும். ஆகவே, வாரிசு உரி­மைச் சட்­டப்­படி, பிரிந்து வாழும் மனை­வி­யின் சொத்து கண­வ­னுக்­கு­தான் சென்­ற­டை­யும். திரு­ம­ணம் ஆகா­மல் ஒரு பெண் இறந்­தால் அவ­ரது சொத்­து­க­ளுக்கு யார் வாரிசு என்று கேட்­கி­றீர்­களா? திரு­ம­ணம் ஆகாத பெண் இறந்­தால், அவ­ரது பெற்­றோரே வாரி­சாக இருப்­பார்­கள். அவர்­கள் இல்­லா­த­பட்­சத்­தில் தந்­தை­யின் வாரி­சு­கள் இறந்­து­போன பெண்­ணின் வாரி­சு­க­ளா­கக் கரு­தப்­ப­டு­வார்­கள்.

ஒரு பெண்­ணின் தனிப்­பட்ட சொத்தை அவர் எவ்­வாறு அனு­ப­விக்க முடி­யும்? ஒரு குறிப்­பிட்ட சொத்­திற்கு ஒரு பெண் தனிப்­பட்ட முழு­மை­யான உரி­மை­யா­ளர் என்­கி­ற­போது, அவர் அந்­தச் சொத்தை தன் விருப்­பப்­படி அனு­ப­விக்க முடி­யும். அதா­வது, அவர் அந்த சொத்தை யாருக்கு வேண்­டு­மா­னா­லும் மாற்­றித் தர­லாம். அது தான­மா­கவோ /

உயி­லா­கவோ அல்­லது விற்­கவோ எந்த வகை­யி­லும் பாரா­தீ­னம் செய்­ய­லாம். இதற்கு எந்­தத் தடை­யும் இல்லை. ஓர் இந்­துப் பெண் மதம் மாறு­வ­தால், குடும்­பச் சொத்­தில் உள்ள உரி­மை­களோ, பங்கு கேட்­கும் உரி­மை­களோ பாதிக்­கப்­ப­டுமா? என்று கேட்­க­லாம்.

இந்து வாரிசு உரி­மைச் சட்­டம் பிரிவு 26-ன்படி, இந்து மதத்­தி­லி­ருந்து விலகி மதம் மாறிய ஒரு­வர் மற்­றும் அவ­ரின் வாரி­சு­கள், வாரிசு உரி­மை­யின் அடிப்­ப­டை­யில் இந்­துக் கூட்­டுக் குடும்­பச் சொத்­தில் பங்கு கேட்க முடி­யாது. இருந்­தா­லும், ஜாதிக் குறை­பா­டு­கள் அகற்­று­தல் சட்­டத்­தின்­படி ஒரு­வர் சாதி இழப்­ப­தாலோ அல்­லது மதம் மாறு­வ­தாலோ சொத்­தில் உள்ள உரி­மையை அவர் இழப்­ப­தில்லை. இதையே உயர்­நீ­தி­மன்ற சமீ­பத்­திய தீர்ப்­பு­கூட உறுதி செய்­துள்­ளது.

இந்­துப் பெண்­க­ளுக்­கான இந்த சொத்­து­ரிமை சட்­டங்­கள் முஸ்­லிம், கிறிஸ்­தவ மதத்­தில் உள்ள பெண்­க­ளுக்­குப் பொருந்­துமா? என்­ப­தும் பல­ருக்கு இருக்­கும் கேள்வி.

பரம்­ப­ரைச் சொத்து, தனிக் குடும்­பச் சொத்து போன்ற தத்­து­வங்­கள் முஸ்­லிம்­க­ளுக்­கும், கிறிஸ்­த­வர்­க­ளுக்­கும் பொருந்­தாது. ஆகவே, முஸ்­லிம்­கள், கிறிஸ்­த­வர்­க­ளைப் பொறுத்­த­வரை, ஆணாக இருந்­தா­லும், பெண்­ணாக இருந்­தா­லும் அவ­ரது பெய­ரில் உள்ள சொத்­து­கள் அவ­ரது தனிப்­பட்ட சொத்­தா­கவே இருக்­கும்'' என்­றார்.