சசிகலா நியமனம் செல்லாது; அதிமுகவில் இனி பொதுச் செயலாளர் பதவியே கிடையாது: பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றம்

பதிவு செய்த நாள் : 12 செப்டம்பர் 2017 18:53

சென்னை,

அனைத்திந்திய அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலா நீக்கப்பட்டார். இனி யாரும் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படமாட்டார்கள். ஜெயலலிதா வகித்த அப்பதவி, அவர் மீதான மதிப்பு மரியாதை காரணமாக இனி எப்பொழுதும் காலியாகவே இருக்கும் என இன்று – செவ்வாயன்று சென்னை - வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் பணிகளை புதிதாக நியமிக்கப்படும் ஒருங்கிணைப்பாளர்களான எடப்பாடி பழனிசாமியும் ஓ. பன்னீர் செல்வமும் நிறைவேற்றுவார்கள் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முதல் தீர்மானமாக அதிமுக தனது இரட்டை இலைச் சின்னத்தை மீட்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. முதல் தீர்மானத்தை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வாசித்தார். பின்னர் அது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

அதிமுகவில் முதல்வர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் செயல்பட்டு வந்த 2 அணிகளும் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி இணைந்தன.

அதிமுக இரு அணிகள் இணைந்ததற்கு பாராட்டு தெரிவித்ததோடு  ஒரே கட்சியாக திரும்பவும் இணைந்ததற்கு பாராட்டியும் வாழ்த்தியும் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

இரு அணிகள் இணைப்பின் போது சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று அப்போது அறிவித்தனர். இதையடுத்து, துணை முதல்வராக ஓபிஎஸ் பதவியேற்றார். இதற்கு தினகரன் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தினகரன் ஆதரவு 21 எம்எல்ஏக்கள், முதல்வர் பழனிசாமிக்கான ஆதரவை வாபஸ் பெற்றனர்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி அதிமுக நிர்வாகிகள் கூடி, பொதுக்குழுவை விரைவில் கூட்ட முடிவெடுத்தனர். செப்டம்பர் 12-ம் தேதி பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது.

இதற்கிடையில், அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில், தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் மனு கொடுத்திருந்தார்.

நீதிபதி சி.வி. கார்த்திகேயன்  இந்த விசயத்தில் நீதிமன்றம் தலையிட்டு அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க எவ்வித சட்ட முகாந்திரமும் இல்லை. எனவே, நாளை நடைபெறும் பொதுக்குழுவுக்கு தடை விதிப்பதற்கில்லை என்று தீர்ப்பு கூறினார்.

இந்த சிக்கல்கள் தெரிந்திருந்தும் நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் வகையில் வழக்கு தொடர்ந்த எம்எல்ஏ., வெற்றிவேலுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது என்று நீதிபதி தெரிவித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து எம்எல்ஏ வெற்றிவேல் தரப்பு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியிடம் முறையிட்டனர். மனுவாக தாக்கல் செய்யுங்கள். பரிசீலனை செய்கிறேன் என்று நீதிபதி கூறினார். வெற்றிவேல் உடனே மனு தாக்கல் செய்தார்

அந்த மனு  நீதிபதிகள் ராஜிவ் சக்தேர், அப்துல் குத்துாஸ் முன் நேற்றே விசாரணைக்கு வந்தது,

அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுவுக்கு தடை விதிக்க முடியாது. பொதுக்குழுவை நடத்தலாம். பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவுகள், வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டப்பட்டதாக அமையும்.  வழக்கு விசாரணை, அக்டோபர் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என நீதிபதிகள் இருவரும் நேற்று இரவே தீர்ப்பளித்தனர்.

பெங்களூர் நீதிமன்றம் தடை

தினகரன் ஆதரவாளரும் கர்நாடக மாநில அதிமுக செயலாளருமான புகழேந்தி பெங்களூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில், சென்னையில் நடைபெற இருக்கும் பொதுக்குழுவை தடை செய்யக்கோரி மனு கொடுத்தார். அதிமுக பொதுக்குழுவை கூட்டுவதற்கு நேற்று இரவு பெங்களூரு மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது குறிப்பிடத் தக்கது.

அந்தத தடையைப் பொருட்படுத்தாமல் அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டங்கள் சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

டிடிவி ஆதரவாளரும், அதிமுக தில்லி பிரதிநிதியுமான தளவாய் சுந்தரம் இந்த கூட்டத்தில் பங்கேற்றார். செயற்குழுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தவர்களில் 98 சதவீதம் பேர், 2,130 பேர் வருகை தந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த பொதுக்குழுவில் முக்கியமாக 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள் விவரம்:

1. இரட்டை இலைச் சின்னத்தை மீட்போம் என்ற தீர்மானம் முதல் தீர்மானமாக பொதுக்குழுவால் நிறைவேற்றப்பட்டது.

2. ஜெயலலிதா மணிமண்டபம் ரூ.15 கோடியில் அமைக்கப்படும் என்று அறிவித்த தமிழக அரசின் முடிவுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்.

3.  ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்கள் அந்தந்த பொறுப்புகளில் தொடரலாம்.

4.  டிடிவி தினகரன் பதவியே செல்லாது. எனவே அவர் வெளியிட்ட அறிவிப்புகள், நியமனங்கள் அனைத்தும் செல்லாது என மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

5.  எம்ஜிஆர், ஜெயலலிதா விட்டுச் சென்ற இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. ஜெயலலிதாவே கட்சியின் பொதுச் செயலர். எனவே, இனி அதிமுகவில் பொதுச் செயலாளர், பொறுப்பு என்பது கிடையாது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இனி வருங்காலங்களில் பொதுச் செயலாளர் பதவி கிடையாது என அமைப்பு விதிகளில் திருத்தம் கொண்டு வரப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

6. வி.கே. சசிகலாவின் பொதுச் செயலாளர் நியமனம் செல்லாது. அதனால் அப்பொறுப்பிலிருந்து அவர் இனிசெயல்பட கூடாது எனவும் 8வது தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7. அதிமுக பொதுச் செயலாளருக்கு உள்ள அதிகாரங்களை தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கும் தீர்மானம் 11வது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது

8. கட்சியில் உறுப்பினர்களை சேர்க்க, நீக்க எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிகாரம்.

9. கட்சி விதி எண் 19-ல் திருத்தம் செய்ய ஒப்புதல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்.

10. கட்சியை வழிநடத்தும் பொறுப்பை நிறைவேற்ற 11 உறுப்பினரக்ள கொண்ட வழிகாட்டும் குழுவையும் இந்தப பொதுக்குழு நியமித்துள்ளது. கட்சியை வழிநடத்தும் பணியை இக்குழு நிறைவேற்றும் என தீரமானத்தில கூறப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானங்களைத் தவிர கட்சியின் 22 அமைப்பு விதிகளை திருத்தும் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

போலீஸ் பாதுகாப்பு

அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற சென்னை – வானகரம் ஸ்ரீவாரு கல்யாண மண்டபத்திலும், சென்னை – ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மேலும், கல்யாண மண்டபத்தில் எந்தவித சலசலப்பும் இல்லாமல் அதிமுக பொதுக்குழுவினரால் தீர்மானங்கள் நிறைவேற்றபட்டதாகவும் தகவல் கூறப்பட்டது.

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைக் காண இங்கே சொடுக்கவும்

https://drive.google.com/open?id=0B93WycD7fv36NlJ5UzRkbnJuQms

https://drive.google.com/open?id=0B93WycD7fv36NXBtNURScEZLSHc