கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 93

பதிவு செய்த நாள் : 11 செப்டம்பர் 2017
‘கூண்டுக்கிளி’யில் நடிக்கும்போது நண்பர்கள், பருவங்கள் மாறியதும் இரு துருவங்கள்!

எம்.ஜி.ஆரும் சிவாஜியும் ஐம்பதுகளின் கடைசி ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் இரு துருவங்களாக கருதப்பட்டார்கள். எம்.ஜி.ஆர்., ‘மக்கள் திலகம்’ என்று பெயர்பெற்றார். ‘நடிகர் திலகம்’ என்று சிவாஜி பாராட்டப்பட்டார். இருவரும்  நேர் எதிர் ‘பிராண்டு’ களாக சினிமா ரசிகர்கள் மனதில்  உருவெடுத்தார்கள். ஆனால், ஐம்பதுகளின் தொடக்கத்தில் அவர்கள் அப்படியில்லை. அவர்கள் தமிழ்த்திரை உலகில் முன்னேறிக்கொண்டிருந்த கதாநாயக நடிகர்களாக இருந்தார்கள். இருவரும் திராவிட இயக்கத்தின் நடிகர்களாகப் பார்க்கப்பட்டார்கள்.

‘என் தங்கை’ என்ற நாடகத்தில் நடித்த சிவாஜி, 'பராசக்தி' படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். சிவாஜி மேடையில் நடித்த ‘என் தங்கை’ நாடகம், திரைப்படமாக எடுக்கப்பட்டு அதில் எம்.ஜி.ஆர்., நடித்தார்! பின்னாளில் சோகமயமான படங்களை எம்.ஜி.ஆரோ அவரது ரசிகர்களோ தொடமாட்டார்கள். ஆனால் ‘என் தங்கை’யில் கண்ணீர் மழை! எத்தனையோ பிணங்கள் விழுந்த பின்,  கண்தெரியாத தங்கைக்காக எம்.ஜி.ஆர்., வாழ்கிறார். அவளும் போனதும் அவளின் சடலத்தைத்தூக்கிக்கொண்டு கடலுக்குள் நடக்கிறார். கண்ணீரைக் கடலைப்போல் வரவழைத்த படம், உப்புக்கடலுக்குள் கலப்பதுதான் முறை என்று நினைத்தார்களோ என்னவோ!

‘ஜெனோவா’ என்ற கிறிஸ்தவப் படத்திலும் எம்.ஜி.ஆர்.,  நடித்தார். படத்தில் கதாநாயகி பி.எஸ்.சரோஜாவுக்குத்தான் முக்கிய வேடம். ‘ஞானசவுந்தரி’ என்ற கிறிஸ்தவப் பக்திப்படத்தின் நாயகியைப்போல், ‘ஜெனோவா’வின் நாயகியும் பல துன்பங்களை அனுபவித்து அன்னை மேரியின் அருளால் பிழைப்பதாகக் கதை. ‘ஆக்ஷ்ன் நாயகர்’, உள்ளவர்களிடம் கொள்ளையடித்து இல்லாதவர்களுக்கு வாரிக்கொடுக்கும் ‘ராபின்ஹுட்’ என்ற பிம்பங்கள் எல்லாம் எம்.ஜி.ஆர்., மீது வலுவாக விழாத காலகட்டம் அது.

பிரபல நடிகை டி.ஆர்.ராஜகுமாரியின் தம்பியான டி.ஆர். ராமண்ணா, அடையாறு நெப்டியூன் ஸ்டூடியோவில் ஒலிப்பதிவாளராகப் பயிற்சி பெற்றிருந்தார். அதன் பிறகு அவர் டைரக்டராக விரும்பியபோது தமக்கை ராஜகுமாரி அதற்கு வழிவகுத்தார். ராமண்ணாவின் இயக்கத்தில் ‘வாழப்பிறந்தவள் ’ 1953ல் வந்தது. படம் அவருடைய ‘கன்னி முயற்சி என்றாலும்  அதில் பல நல்ல கலையம்சங்கள் இருப்பது பாராட்டத்தக்கது’ என்ற வாழ்த்தும் கிடைத்தது. ‘பாட்டாளி வர்க்கத்திலிருந்து தோன்றிய எழுத்தாளர்’ என்று பின்னாளில் ஜெயகாந்தன் பாராட்டிய விந்தனுக்கும் ‘வாழப்பிறந்தவள்’  முதல் படம். அவர் அமைத்திருக்கும் வசனங்கள் சரளமாக இருப்பதாக ‘பேசும் படம்’ பத்திரிகை பாராட்டியது. ‘வாழப்பிறந்தவள்’  பெரிய வெற்றியைப் பெறவில்லையென்றாலும், அதற்குக்கிடைத்த சராசரியான வரவேற்பு, ராமண்ணா-, விந்தன் இணையை அடுத்த பட முயற்சியான  ‘கூண்டுக்கிளி’யில் இறங்க வைத்தது.

 ‘பராசக்தி’ 1952ம் வருட தீபாவளியில் வெளியாகி, மிகப்பெரிய வெற்றி அடைந்த பிறகு, சிவாஜி கணேசன் ஏராளமான படங்களில் விறுவிறுப்பாக நடித்துக்கொண்டிருந்தார்.   சென்னை லாயிட்ஸ் சாலையில் தான் குடியிருந்த வீட்டை விலைகொடுத்து வாங்கும் முயற்சியில் பணம் தேவைப்பட்டதால், எம்.ஜி.ஆரும் கிடைக்கும் படங்களை ஏற்பவராகத்தான் இருந்தார்.

‘அன்பு’ படத்தில் டி.ஆர். ராஜகுமாரியுடன் நடித்திருந்தார் சிவாஜி. ‘பணக்காரி’யில் ராஜகுமாரியுடன் எம்.ஜி.ஆர்., நடித்திருந்தார். பணிவுக்கும் மரியாதைக்கும் பேர்போன நட்சத்திரம், ராஜகுமாரி. அவருடைய தம்பியான ராமண்ணா, அக்காளின் குடைநிழலின் கீழ் எடுக்கும் படத்தில் சிவாஜியும் எம்.ஜி.ஆரும் நடிக்க ஒப்புக்கொண்டார்கள். ‘கூண்டுக்கிளி’யில் நிகழ்ந்த இந்த அபூர்வ இணைவைப் பற்றிப்  பின்னாளில் நிகழ்ந்த மத்தளமேளங்கள் எல்லாம் படம் தொடங்கும்போது இருந்ததாகத்தெரியவில்லை. செப்டம்பர் 10, 1953 அன்று 'கூண்டுக்கிளி' ஆரம்பிக்கப்பட்ட செய்தியை அந்நாள் பத்திரிகை ஒன்று இப்படி வெளியிட்டது  —  ‘‘'வாழப்பிறந்தவ'ளை வெளியிட்டு வெற்றிக்கண்ட ஆர்.ஆர். பிக்சர்ஸின் இரண்டாவது படத்திற்கான ஆரம்ப விழா, ரேவதி ஸ்டூடியோவில் ஆடம்பரமற்ற முறையில் கொண்டாடப்பட்டது’’. (ரேவதி ஸ்டூடியோ என்பது அந்நாளில் ஆற்காடு சாலையில் இருந்தது. பிறகு அது வாஹினிக்குள் அடங்கிவிட்டது).

ஆடம்பரம் இல்லாத தொடக்கம் பொருத்தமானதுதான். ஏனென்றால், ஆலைத் தொழிலாளர்களையும் நகரத்தில் வாழும் சாமானியர்களையும் ஓரளவுக்கு யதார்த்தமாக மையப்படுத்தித்தான் 'விந்த'னின் கதை விரிந்தது. அலங்காரத்தம்மா (அங்கமுத்து) என்ற பெண்மணி, அறைகளை வாடகைக்கு விடும் ஒரு காலனியில் முக்கால்வாசிப் படம் நடக்கிறது. பல ஆலைத்தொழிலாளர்களும் பல ஏழை பாழைகளும் சில சோம்பேறிகளும் வசிக்கும் அந்த காலனி, பிமல் ராயின் 'தோ பிகா ஜமீ'னைப் பார்த்து காப்பி அடிக்கப்பட்டது என்றார் அந்நாளைய விமர்சகர் ஒருவர். அப்படியெல்லாம் அட்டை காப்பி ஒன்றும் இல்லை. பிமல் ராயின் அளவுக்கு யதார்த்தப்பாணிக்குப்போனால் ‘கூண்டுக்கிளி’யின் ஒண்டு குடித்தனக்காரர்கள்கூட ஓடிப்போய்விடுவார்கள்!

இந்த அலங்காரத்தம்மாவின் காலனியில், சிவாஜிக்கு ஒரு அறையை வாடகைக்கு எம்.ஜி.ஆர்., பிடித்துக்கொடுக்கிறார். படத்தில்

எம்.ஜி.ஆர்., தங்கமான குணம் படைத்த தங்கராஜ். அவரால் தற்கொலையிலிருந்து காப்பாற்றப்படும் பால்ய நண்பன், ஜீவா என்ற எக்குத்தப்பான  பாத்திரத்தில் சிவாஜி.

தான் தனியே இருக்கும் அறைக்குள் நுழையும் போது சிவாஜி (ஜீவா) ஒரு பாடலை முணுமுணுத்தபடியே வருகிறார்.

‘எட்டடிக்குச்சுக்குள்ளே, முருகா

எத்தனை நாள் இருப்பேன்

மச்சுவீடு கட்டித்தாடா, பழநி

மலைமேல் வாழ்பவனே!’

இதை ஜன்னலிலிருந்து பார்த்தபடியே, எம்.ஜி.ஆர்., சிவாஜியைப் நோக்கிப் பேசுகிறார், ‘ஏய், என்னப்பா வேதாந்தத்துக்குள்ளே இறங்கிட்டே?’

சிவாஜி -- ‘நான் இறங்கலை. இந்த ரூம் இறங்க சொல்லுது’.

எம்.ஜி.ஆர்., -- ‘ஏன் பிடிக்கலையா?’

சிவாஜி -- ‘பிடிக்காம என்ன? எல்லாம் எண் ஜான் உடம்புக்கு எட்டடி ரூமுன்னு கணக்குப் பார்த்துத்தானே கட்டியிருக்கு?’

எம்.ஜி.ஆர்., -- ‘ஏன் ஜீவா, ஆத்துல போட்டாலும் அளந்து போடுன்னு சொல்லியிருக்காங்களே பெரியவங்க, அப்படியிருக்கும் போது இந்த அலங்காரத்தம்மா மட்டும் எப்படி அளக்காம கட்டமுடியும்?’

நாடகப்பாணி வசனங்கள் தெறிக்கும் சில உணர்ச்சிப்பெருக்கான காட்சிகளைத்   தவிர்த்தால், எம்.ஜி.ஆரும் சிவாஜியும் இடம்பெறும் பல காட்சிகளில்,  இருவரின் நடிப்பில் ஓர் அனாயாசமும் பரஸ்பர புரிதலும் அழகாக அமைந்திருப்பதைக் காணலாம்.

காலனியில் இருக்கும் வாசகசாலைக்கு

எம்.ஜி.ஆரும் சிவாஜியும் செல்கிறார்கள். அதன் காரியதரிசி பிரண்டு ராமசாமி. அவரைப் பார்த்து

எம்.ஜி.ஆர்., கேட்கிறார், ‘‘வாசகசாலை நிதிக்காக ஏதோ நாடகம் போடணும்னு சொன்னீங்களே, அது என்ன ஆச்சு?’’

அதற்கு, ‘‘கட்டபொம்மன் நாடகம் போட்டால் நல்ல வசூல் ஆகும்னு நினைக்கிறேன்,’’ என்கிறார் சிவாஜி! (இது அவர் கட்டபொம்மன் நாடகம் போடத்தொடங்குவதற்கு முன்பு).

‘‘ஆமாம், ஆமாம்,’’என்கிறார்

எம்.ஜி.ஆர்.,!

‘‘சுதந்திரம்தான் வந்திடுச்சே, அதுக்கு சண்டை போட்டவங்க கதை எதுக்கு இப்போ?’’ என்கிறார் பிரண்டு ராமசாமி.

‘‘காதல் கதைதான் எந்நாளைக்கும் எடுக்குமுங்க,’’ என்பது காமெடியன் கே. சாரங்கபாணியின் வாதம்.

‘‘ரோமியோ ஜூலியட் அல்லது லைலா மஜ்னு,’’ என்று தன் வற்றல் மேனியைக் குலுக்கியபடி தளுக்கு நடைபோடுகிறார் பிரண்டு ராமசாமி.

‘‘நாசமாப் போச்சு’’ என்றவாறு எழுகிறார், வளர்ந்த அமுல் பேபி போல் இருக்கும் கொட்டாபுளி ஜெயராமன். ‘‘காதல் கதை வேணும்னா ரோமுக்கும் அரேபியாவுக்கும்தான் போகணுமா? ஏன் தமிழ்நாட்டிலே இல்லையா வள்ளித் திருமணம்? நான் சின்ன பேபியா இருக்கும்போது நம்ம கிட்டப்பா வந்து வேடன் வேஷம் போட்டுக்கிட்டு, பாடுவார் பாரு....,’’ என்று கொட்டாபுளி, டி.எம்.எஸ்ஸின் குரலில் ‘காயாத கானகத்தே’ என பாடத்தொடங்குகிறார். பாட்டை ரசித்த எம்.ஜி.ஆரும் சிவாஜியும் ஒருவரை ஒருவர் சந்தோஷமாகப் பார்த்துக்கொள்கிறார்கள். பிற்காலத்தில் தங்கள் இருவரின் பிரதான குரலாக மாறப்போகும் டி.எம்.எஸ்ஸூக்கு இரு நட்சத்திரங்களும் முதன்முதலில் திரையிலேயே காண்பித்த வரவேற்பு ‘கூண்டுக்கிளி’ காட்சியில் வருகிறது.

இப்படி எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் இடையே ரசனைக்குரிய பல காட்சிகள் படத்தில் இருக்கின்றன. தான் பித்துப்பிடித்தவன்போல் ஒருதலைப்பட்சமாக காதலித்த மங்களா (பி.எஸ். சரோஜா), தன்னுடைய உயிர் சினேகிதனின் மனைவி என்று கண்டதும், ஜீவா (சிவாஜி) மயங்கிவிழுகிறான்.

சின்னச் சின்ன குடித்தனங்களில் மக்கள் வாழும் காலனி அல்லவா...கூட்டம் கூடிவிடுகிறது.

எம்.ஜி.ஆர்., வந்து மயங்கிக்கிடக்கும் சிவாஜியைத் தன் மடியில் எடுத்துக்கொள்கிறார். மயக்கம் தெளிந்ததும், சுத்திமுத்திப் பார்க்கும் சிவாஜி, ‘என்ன இதெல்லாம்?’ என்கிறார்!

எம்.ஜி.ஆர்., -- ‘சரிதான் போ. நான் உன்னை கேட்கலாம்னா நீ என்னை கேக்கிறியா?’ இந்த வகையில் இயல்பான பேச்சும் நடிப்பும் நன்றாக இருக்கின்றன.

ஆனால், அடிப்படைக் கோணல் ஒன்று, தவறான கதைப் பின்னலின் வாயிலாகப் படத்தின் உசிரை வாங்குகிறது. மங்களா என்ற பெண் மீது மனநோய்போல் ஜீவா கொள்ளும் ஒருதலைப்பட்சமான மிதமிஞ்சிய நாட்டம்தான் அது. அதை காதல் என்கிறான் ஜீவா. ஆனால் மங்களாவோ ஜீவாவைப் பார்த்ததுகூட கிடையாது!

 இந்த நிலையில் பெண்கள் மீது ஜீவா வெறுப்பை கக்குகிறான். காலனியில் கூச்சம் நாச்சம் இல்லாமல் சிட்டைப்போல் திரிந்துவருபவள், இளம்பெண் சொக்கி (குசலகுமாரி). அவளை ஜீவா உற்றுப்பார்க்கிறான். அவன் அப்படிப் பார்ப்பதை காலனியின் தடியன் சொக்கலிங்கம் ஆட்சேபிக்கிறான். சிவாஜி (எள்ளல் தொனியுடன்)..‘‘இப்படியும் ஒரு பொண்ணு இருப்பாளான்னு நான் பார்த்துக்கிட்டிருந்தா....’’

எம்.ஜி.ஆர்., -- ‘‘அது அவனுக்கு எப்படிப்பா தெரியும்? அவனுக்கு இந்த பொண்ணு மேல ஒரே பைத்தியம்’’.

சிவாஜி -- ‘‘அவனோட பைத்தியத்திற்கும் காரணம் ஒரு பொண்ணுதானா....’’ (ஆனால் சிவாஜி ஏற்ற பாத்திரம் மங்களா மீது காதல் கொள்ள அவள் காரணம் அல்ல. அந்தப் பாத்திரத்தின் வக்கிரம்தான் காரணம்).

சிவாஜியின் கேரக்டர் படத்தில் அமைக்கப்பட்டதில் உள்ள வில்லங்கம், ‘கூண்டுக்கிளி’ என்ற படத்தின் தலைப்பிலேயே தெரிந்தது.   இன்னொருவர் மனைவியாகவும், ஒரு பிள்ளையின் தாயாகவும் மனநிறைவோடு வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு பெண்ணை ‘கூண்டுக்கிளி’ என்று குறிப்பிடுவது சரியா?  படக்கதைக்குப் பொருந்தாத விஷயங்கள் ‘சரியா தப்பா’ பாடலில் இடம்பெற்றன. இசைத்தட்டில் உள்ள பிரதியைப் பார்த்தால் இது வெட்டவெளிச்சம் ஆகும். தணிக்கையாளர்கள் ஆட்சேபித்த பின்னர் திரைப்படத்தில் மாற்றியமைக்கப்பட்ட ‘சரியா தப்பா’வின் வரிகள், சிவாஜி ஏற்ற தங்கராஜ் பாத்திரம் பிடித்துக்கொண்டிருந்த கண்டன பலூன்களை புஸ்ஸாக்குகின்றன! தூற்றுதல் கூட நியாயமானதாக இருந்தால்தானே எடுபடும்!

படத்தில் சிவாஜி பேசும் பல வசனங்கள்,

எம்.ஆர். ராதா பாணியிலான வசனங்களைப்போல் எள்ளலும் சாடலும் நிறைந்தவை. தன்னை தற்கொலையிலிருந்து காப்பாற்றி, வேலை வாங்கித்தந்து, இருக்க இடமும் அமைத்து தரும் நண்பனின் மனைவியை அபகரிக்கப்பார்க்கும் வேடம் சிவாஜியுடையது. எம்.ஜி.ஆர்., ஏற்ற தங்கராஜ் வேடமோ நட்பிலும் அன்பிலும் திளைக்கும் பாத்திரம். இப்படி அமைந்த வேடங்களைக்குறித்து பின்னாளில் சிவாஜி காட்டமாக கருத்து தெரிவித்தார் (எனது சுயசரிதை). ‘‘நிஜவாழ்க்கையில் நடிகர்களுக்கு பல கெட்டப்பழக்கங்கள் இருந்தாலும், படங்களில் நல்லவன்போல் காட்டிக்கொண்டு, அரசியலில் நுழைந்து, மக்கள் மனதில் இடம் பிடிக்கவேண்டும் என்ற தத்துவம் அப்போது எனக்குத் தெரியாது,’’ என்றார்! படம் வெளி வந்த போது ‘ஊத்தி’க்கொண்டாலும், அதன் இரு முக்கிய நடிகர்கள் தமிழ் சினிமாவின் இரு துருவங்களாக மாறியபின், படம் மீண்டும் வெளிவந்த போது ‘கூண்டுக்கிளி’க்குத் தனி மவுசு ஏற்பட்டது. ரசிகர்கள் இடையே மோதல்களும் ஏற்பட்டன.

'கூண்டுக்கிளி'யிலிருந்து எம்.ஜி.ஆர்., ஒரு முக்கியமான நன்மையைப் பெற்றார். சிவாஜிக்காக ‘சரியா தப்பா’ பாடிய டி.எம்.எஸ்ஸின் குரல் தனக்கு சரியான பாட்டுக்குரல் என்று முடிவு செய்து, 'மலைக்கள்ள'னில் அவர் தனக்குப் பாடவேண்டும் என்று தயாரிப்பாளர்களான பட்சிராஜா ஸ்டூடியோவில் கூறிவிட்டார். பட்சிராஜா ஸ்டூடியோவுக்கு டி.எம்.எஸ். எத்தனையோ முறை சென்று வாய்ப்புக்கேட்டும் திறக்காத கதவுகள், எம்.ஜி.ஆரின் சிபாரிசுக்குப் பிறகு திறந்துகொண்டன! ‘எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’ என்று 'மலைக்கள்ள'னில் எம்.ஜி.ஆருக்காக டி.எம்.எஸ். பாடினார். ‘கோட்டை மீது நமது கொடி பறந்திடவேண்டும்’ என்று ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ வரை அதுதொடர்ந்தது. அப்போது எம்.ஜி.ஆரின் கட்சிக்கொடி கோட்டையிலே பறந்துகொண்டிருந்தது!

(தொட­ரும்)