மூத்த பத்திரிகையாளர் சுதாங்கனின் ‘சிவநேசச் செல்வர்கள்! – 67

பதிவு செய்த நாள் : 05 செப்டம்பர் 2017

 அந்த முருகனார் நான்மறைகளை நன்குணர்ந்தவர். ஞானமார்க்கத்தின் முடிவான எல்லையைக் கண்டவர். சிவபிரானது திருவடியில் நிறைந்த அன்பினால் உருகும் மனமுடையவர். அவர் முந்தைய மெய்தவப் பயனால் சிவபெருமானின் விரிசடையில் அணிவிப்பதற்குத்  திருப்பள்ளித்  தாமும்  பறித்து வந்து சாத்துவதைத்  தம் திருத்தொண்டாகக் கொண்டிருந்தார்.

 அவர் நாள்தோறும் பொழுது புலரும் முன் வைகறையில் துயில் எழுவார்.  தூய நீராடுவார். திருநந்தவனம் புகுவார். ஆகாச கங்கையும் வெண்ணிலவும் சூடிய சிவபெருமானின் விரிசடையில் பூக்களை அணிவித்து வாசனை வீசச் செய்ய வேண்டும் என்பதற்காக மலரும் பருவத்திலுள்ள விதவிதமான பூக்களையெல்லாம் முருகனார் பறிப்பார். கோட்டுப் பூ, கொடிப் பூ, நீர்ப்பு, நிலப்பு என்ற நால்வகை மலர்களில் சில பூஜைக்குரிய மலர்களை நிறையப் பறித்து, வெவ்வேறாகப் பூக்கூடைகளில் சேர்ப்பார். பிறகு அவற்றைத் தூக்கிக் கொண்டு சென்று ஒரு தனியிடத்தில் அமர்ந்து கொள்வார். கோவை மாலை, இண்டை மாலை, பத்திமாலை. கொண்டை மாலை, சரமாலை, தொங்கல் மாலை முதலிய பல்வேறு மாலைகளை காலத்திற்கு ஏற்றபடி தொடுத்துக் கட்டுவார். அப்பூமாலைகளை உரிய பூஜாக் காலங்களில் அவர் எடுத்துக்கொண்டு போய் வர்த்தமானேச்சுரம் என்னும் அவ்வூர்ச் சிவாலயத்தை அடைந்து அங்குள்ள  சிவபெருமானுக்கு பேரன்போடு சாத்துவார். நெஞ்சு உருகி உருகும் பேரின்ப பாக்கள் தொடுப்பார். திருவைந்தெழுத்தை உள்ளன் போடு இடைவிடாமல் ஓதுவார்.

 இம்முறையில் திருத்தொண்டு புரிந்துவந்த முருகனார் ஒரு சமயம் உமையம்பிகையிடம் ஞானப்பால் அருந்திய திருஞான சம்பந்த சுவாமிகளுக்கு  நண்பராகி பெருமை பெற்றார். அச்சுவாமிகளின் திருமணச் சிறப்பில் முருகனார் கலந்து கொண்டு சிவபெருமானின் திருவருளால் எம்பெருமானின் திருவடி நிழலை அடைந்தார்.

அரவம் அணிந்த அண்ணலாரை அருச்சித்து அவருடைய திருவடி நிழலை அடைந்த முருக நாயனாரின் மெய்த்தொண்டைப் போற்றிவிட்டு, அடுத்ததாக உருத்திர பசுபதி நாயனாரின் பெருமையைப் பார்ப்போம்.

 காவிரி நதி பாயும் சோழவள நாட்டில் குலத்தில் உயர்ந்த குடிகளையுடையது திருத்தலையூர் என்னும் ஊராகும்.

 திருத்தலையூர் இது மாயவரம் – பேரளம் வழியில் கொல்லுமாங்குடி புகைவண்டி நிலையத்திலிருந்து கிழக்கே இரண்டு மைலில், காட்டு வாய்க்காலின் தென்கரையிலுள்ள சிவத்தலமாகும்.

 அங்கு வாழும் அந்தணர்கள் வளர்க்கும் வேள்வித்தீயின் பயனால் பருவம் தவறாமல் மழை பெய்யும் நறுமலர்கள் நிறைந்த சோலைகள்  தேனைச் சொரியும். பசுக்கூட்டங்கள் பஞ்சகவ்யத்தைப் பொழியும். அவ்வூரே தர்மத்தையும் நீதியையும் அமைதியாகப் பெருக்கும்.

 அவ்வூரில் அந்தணர்கள் குலத்தில் பசுபதியார் என்னும் பெயருடைய ஒருவர் வாழ்ந்து வந்தார். உமையொரு பங்கரான சிவபெருமானிடம் அவர் பேரன்பு கொண்டு திருத்தொண்டு புரிவதில் அவர் விருப்பமுடையவராக விளங்கினார். வேதத்தில் விளங்கும் உருத்திர மந்திரத்தனை உள்ளம்போடு ஓதிக் கொண்டு இறைவன் திருவடிகளை அவர் தியானித்து வருவார். அதை அவர் தம் தொழிலாகவும் தொண்டாகவும் கொண்டு சிவநேசத்திலே நெஞ்சு ஒன்றி நின்றார்.

 அவ்வூரில் ஒரு அழகான தாமரைத் தடாகம் உண்டு. சங்குள் அலையும் அதன் கரைகளிலே பறவைகளும் வண்டுகளும் இன்னொலிகள் எழுப்பும். குளத்தினுள் வரால் மீன்கள் பிறழ, கயம் மீன்கள் நீரில் பாயும்.  அந்நீரிடையே நெருப்பு எழுவது போல் வாசனை நெகிழும். தாமரை மலர்கள் பூத்து எழும்பி நிற்கும். அத்தாமரைத் தடாகத்தில்  பசுபதியார் இறங்கிக் கழுத்தளவு உள்ள குளிர்ந்த நீரினில் நின்று கொண்டு, தன் இரு கைகளையும் தலைமீது குவித்துக் கொண்டு உள்ளன்போடு, மனமுருகி அருமறைப்பயனாகிய உருத்திர மந்திரத்தை ஓதுவார். அந்த உருத்திர மந்திரத்தை  முறைப்படி இரவும் பகலும் இடைவிடாமல், ஒருமை மனத்துடன் ஓதி வந்தார். அதனால், அவர் தாமரை மலரை இருப்பிடமாகக் கொண்டே நான்முகனைப் போல் விளங்கினார்.   உருத்திர மந்திரத்தை ஓதுவதையே தம் திருத்தொண்டாக அவர் சில காலம் நடத்தி வந்தார்.

 இவ்வாறு மெய்யன்பரான பசுபதியார்  செய்து வந்த தவத்தின் பெருமையையும், உருத்திர மந்திர நியதியின் அளவு மிகுந்து  நிற்றலையும் கண்டு சிவபெருமான் திருவுள்ளம் மகிழ்ந்து, அவருக்குத் திருவருள் புரிந்தார். அதன் விளைவாக பசுபதியார்  தீதில்லாத நிலையுள்ள சிவபுரி எல்லையில் சேர்ந்து இறைவரது நிழலில் இனிதமர்ந்தார்.

பெரும் அன்பால் உருத்திர மந்திரத்தை இடைவிடாமல் ஓதி சிவபெருமானின் திருவடிகளை அடைந்ததால், அவருக்கு ‘உருத்திர பசுபதி நாயனார்’ என்னு  பெயர் இவ்வையகத்தில் வழங்கலாயிற்று.

 சிவருபெருமானின் அருளடைந்த உருத்திர பசுபதி நாயனாரைப் போற்றுகிறேன். அடுத்ததாக, தில்லைநகர் திருநாளைப்போவார் நாயனாரின் திருத்தொண்டு பற்றிப் பேசுவோம்.

 திருநாளைப்போவார் நாயனார். இவர் சோழ வளநாட்டின் ஒரு பகுதியில் கொள்ளிட நதி பாய்ந்து செல்கிறது. அந்நதி தன் அலைக்கரங்களால் செழுமணிகளை அள்ளி அள்ளித் தரும். அவற்றை கரையின் இருமருங்கும் தாமரை மலர்கள் கைநீட்டி வாங்கும். அந்தப் பகுதி மேற்கானாடு என்று வழங்கப்படுகிறது.

 அந்த நாட்டில் ஆதனூர் என்னும் ஒரு சிற்றூர் உண்டு. அவ்வூரில் உழவர்கள் எருதுகள் பூட்டி வயலை உழுவார்கள். அப்போது சேற்றிலுள்ள சினை நண்டுகள் படைச்சாலுக்குத் தப்பி தாமரை மலரில் ஏறிக் கரு ஈனும். தாமரை மலர்களோ தேன் சொரியும். மரங்கள் செழுமையாக உயர்ந்து வளர்ந்து தங்கள் மலர்க்கரங்களை நீட்டிச் சூரிய மண்டலத்தைத் தடவும்.  சோலகள் மீது மேகங்களும் வண்டுகளும் புடைசூழ்ந்து நீர் மழையோ  தேன் மழையோ பூஞ்சோலைகளெங்கும் பொழியும்! தடாகக் கரைகளில் உள்ள தென்னை மரங்களின் அடிப்புறம் அதிரும்படி ……