அணு ஆயுத சோதனை செய்யும் நாடுகளை சட்டரீதியாக தண்டிக்கும் ஒப்பந்தம் தேவை: ஐ.நா பொதுச்செயலாளர் வலியுறுத்தல்

பதிவு செய்த நாள் : 30 ஆகஸ்ட் 2017 03:56

நியூயார்க்,

அணு ஆயுத சோதனையை முழுவதுமாக தடுக்க, சோதனை செய்யும் நாடுகளை சட்டரீதியாக தண்டிக்கும் வகையில் அணு ஆயுத தடை ஒப்பந்தம் உருவாக்கப்படவேண்டும் என ஐ.நா பொதுச்செயலாளர் ஆண்டனி கட்டாரெஸ் கூறியுள்ளார். இதற்காக இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்தும் முன்வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அணு ஆயுதங்கள் தடுப்பு தினமான இன்று ஐ.நா பொதுச்செயலாளர் ஆண்டனி கட்டாரெஸ் செய்தி ஒன்றை வெளியிட்டார். ‘‘கடந்த 7 ஆண்டுகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அணு ஆயுத சோதனைகள் நடைபெற்றுள்ளன. அந்த சோதனைகளால் உலகில் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், சுற்றுசூழல் சீர்கெட்டது.’’ என கட்டாரெஸ் கூறினார்.
வடகொரியாவின் அணு ஆயுத சோதனையை குறிப்பிட்டு பேசிய ஆண்டனி கட்டாரெஸ் ‘‘அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டால் சட்டரீதியாக தண்டணை வழங்கக்கூடிய ஒப்பந்தம் அவசியம் என்பதை வடகொரியாவின் தொடர் அணு ஆயுத சோதனைகள் உணர்த்துகின்றன.

 இனி எந்த நாடும் மீண்டும் அணு ஆயுத சோதனைகள் நடத்தக்கூடாது என்றால் அதற்கு கடுமையான சட்டவிதிகள் கொண்ட விரிவான அணு ஆயுத தடை ஒப்பந்தம் (Comprehensive Nuclear-Test-Ban Treaty) விரைவில் அமல்படுத்தப்பட வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

1996ம் வருடம் உருவாக்கப்பட்ட அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் இதுவரை 186 நாடுகள் கையெழுத்திட்டு உள்ளன. ஒப்பந்தம் நடைமுறைக்கு வர மேலும் 8 நாடுகள் ஒப்புதல் வழங்க வேண்டும். அந்த 8 நாடுகளில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வடகொரியா ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட அனைத்து நாடுகளும் விரைவில் முன்வர வேண்டும் என  ஆண்டனி கட்டாரெஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.