நடிகை கடத்தல் வழக்கு: நடிகர் திலீப்பின் ஜாமீன் மனு மீண்டும் நிராகரிப்பு

பதிவு செய்த நாள் : 29 ஆகஸ்ட் 2017 21:42

கொச்சி:

பிரபல நடிகை ஒருவரை கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட மலையாள நடிகர் திலீப்பின் ஜாமீன் மனுவை கேரள உயர்நீதிமன்றம் மீண்டும் நிராகரித்துள்ளது. அவருடைய ஜாமீன் மனுவை கேரள உயர்நீதிமன்றம் நிராகரிப்பது இது இரண்டாவது முறையாகும்.

நடிகர் திலீப் தற்போது ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவருக்கு வருகிற செப்டம்பர் 2ம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஜாமீன் கோரி திலீப் தாக்கல் செய்த மனு கேரள உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தனக்கும் இந்த வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அப்பாவியான தான் இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டு உள்ளதாக திலீப் தன் ஜாமீன் மனுவில் கூறியிருந்தார்.

மனு மீதான விசாரணையின் போது திலீப்புக்கு ஜாமீன் வழங்க கேரள அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுனில் தாமஸ் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

நடிகை கடத்தல் வழக்கில் ஜூலை 9ம் தேதி கைது செய்யப்பட்ட நடிகர் திலீப் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.