சிறந்த கால்பந்தாட்ட வீரர் பட்டம் வென்றார் ரொனால்டோ

பதிவு செய்த நாள் : 26 ஆகஸ்ட் 2017 09:24


மொனாக்கோ :

 ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் வழங்கப்படும் 2016-17ம் ஆண்டின் சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான விருதை, ஸ்பெயின் நாட்டின் ரியல்மேட்ரிட் அணியின் நட்சத்திர வீரரும், போர்ச்சுக்கல் தேசிய கால்பந்தாட்ட அணியின் வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ வென்றார்.

இந்த விருதை ரொனால்டோ 3வது முறையாக வென்றுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. சாம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்ட தொடரில் ரொனால்டோவின் அபாரமான ஆட்டத்துக்காகவே இந்த விருது அவருக்குக் கிடைத்துள்ளது. சிறந்த வீரருக்கான போட்டி யில் இருந்த மெஸ்ஸிக்கு இந்தமுறை விருது கிடைக்கவில்லை. அவர் ஏற்கனவே 2முறை சிறந்த கால்பந்தாட்ட வீரர் விருதை பெற்றுள் ளார். 3வது முறையாக விருது பெற்றது குறித்து பேசிய ரொனால்டோ, ‘ஒவ்வொரு ஆண்டும் அதே இலக்குகள், அதே சவால்கள் உள்ளன. முயற்சி செய்தால் எல்லாம் வெற்றிதான். உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்காக என் போர்ச்சுக்கல் அணியை தகுதிபெறச் செய்ய வேண்டும். இந்தப் பரிசு எனக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் கொடுத்துள்ளது. ரியல் மேட்ரிட் அணியில் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது’ என்றார்.