பல்கேரிய ஓபன் சீரீஸ் பேட்மின்டன் இளம் வீரர் லக்ஷயா சென் பட்டம் வென்றார்

பதிவு செய்த நாள் : 18 ஆகஸ்ட் 2017 09:43


சோபியா (பல்கேரியா) 

: பல்கேரியா நாட்டில் உள்ள சோபியா நகரில் பல்கேரிய ஓப்பன் இன்டர்நேஷனல் சீரீஸ் பேட்மின்டன் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த இளம் வீரர் லக்ஷயா சென் முதன் முறையாக பட்டம் வென்று சாதனை படைத்தார். கடந்த புதன்கிழமை தன் 16வது பிறந்த நாளைக் கொண்டாடிய அவர், அன்றைய தினம் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், இலங்கையின் கருணாரத்னாவை 21-19, 21-14 என்ற செட்களில் வீழ்த்தினார்.

நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் குரோஷியாவின் துர்கின்ஜாக்கை 3 செட் ஆட்டங்களில் வீழ்த்தி, பட்டம் வென்றார். 57 நிமிடங்கள் நீடித்த இந்தப் போட்டியில் 18-21 என்ற புள்ளிகளில் முதல் செட்டை லக்ஷயா சென் இழந்தார். இருப்பினும் 21-12 என்ற புள்ளிகள் கணக்கில் 2ம் செட்டையும், 21-17 என்ற புள்ளிகளில் 3ம் செட் ஆட்டத்தையும் கைப்பற்றி வென்றார். இளையோர் பட்டியலில் உலகில் நம்பர் ஒன் இடத்தில் உள்ள லக்ஷயாசென், சமீபத்தில் பிரெஞ்ச் தேசிய அணியின் பயிற்சியாளராக உள்ள, முன்னாள் ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் சாம்பியனான பீட்டர் காடேவிடம்

பயிற்சிக்கு சென்று திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.