ஒரு பேனாவின் பயணம் – 120 – சுதாங்கன்

பதிவு செய்த நாள் : 14 ஆகஸ்ட் 2017மேல் நாடுகளில் இந்தியாவின் மானம் பறந்தன!

ஜோன்ஸ் என்ற பாதிரியார் இப்படி அறிவித்துவிட்டு தன் மெய்க்காப்பா ளர்களுக்கு சைகை செய்தார். சயனைடு என்ற கொடிய விஷமும், தூக்க மாத்திரைகளும் கலந்த பானம் ஒன்று  பெரிய அண்டாவில் கொண்டு வரப்பட்டது. ஜோன்ஸ் கையை உயர்த்தி, ` முதலில் குழந்தைகள்!’’ என்று ஆணையிட்டார். சில தாய்மார்கள், "குழந்தைகள் எதற்கு?’’ என்று அலறினார்கள். அவர்களிடமிருந்து குழந்தைகள் பலவந்தமாகப் பறிக்கப்பட்டுக் கொல்லப்பட்டன. எதிர்த்தவர்கள் தாக்கப்பட்டனர். பிறகு, ஒவ்வொருவராக, வந்து, விஷத்தை ஒரு கோப்பையில் ஏந்திக் குடித்தனர். ஒளிந்து கொண்டு தப்பியவர்கள் வெகு சிலரே!

சில நிமிடங்களில் நூற்றுக்கணக்கான வர்கள், ஒரே சமயத்தில் வாயிலிருந்தும், மூக்கிலிருந்தும்  ரத்தம் வழிய, நெளிந்து துடிக்க ஆரம்பித்தனர். இந்த காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த  ஜோன்ஸ், திருப்தியுடன் ஒரு துப்பாக்கியை எடுத்துத் தன்னைச் சுட்டுக்கொண்டார்.

வெளி உலகம் ஜோன்ஸ் டவுனுக்குள் எட்டிப் பார்த்தபோது, உள்ளே 900 சடலங்கள் வரிசையாக ஒன்றையொன்று  அணைத்தவாறு கிடந்தன. சிம்மாசனத்திற்கு கீழே `கடவுள்’  ஜோன்ஸின் உடல் கிடந்தது.

இந்த காலகட்டத்தில் சரியான வேலையும் கிடைக்காமல் படங்கள் பார்ப்பதும், தமிழ் இலக்கிய கூட்டங்களுக்கும், அரசியல் கூட்டங்கள், நாடகங்கள் என்று இலக்கு தெரியாமலும் போய்க் கொண்டிருந்தேன்.

1978ம் ஆண்டு  தீபாவளிக்கு பதினோரு படங்கள் வெளியாகின. 1. நாகேஷ் கதாநாயகனாக நடித்த 'அதிர்ஷ்டக்காரன்'.  2, கமல், ரஜினி நடித்து ருத்திரய்யா இயக்கிய 'அவள் அப்படித்தான்'. 3. சிவகுமார், லதா நடித்த 'கண்ணாமூச்சி' 4.  முத்துராமன், சுஜாதா நடித்த 'காஞ்சி காமாட்சி',  5.பாரதிராஜாவின் 'சிகப்பு ரோஜாக்கள்'. 6. விஜயகுமார்  ஸ்ரீவித்யா நடித்த 'தங்கரங்கம்'. 7. கே. பாலசந்தரின் 'தப்புத்தாளங்கள்'. 8.  சிவாஜியின் 'பைலட் பிரேம்நாத்' 9. தேவர் பிலிம்சின் 'தாய் மீது சத்தியம்'. 10. ஆர்.சி. சக்தி இயக்கத்தில் கமல் ஸ்ரீதேவி நடித்த 'மனிதரில் இத்தனை நிறங்களா'  11. ஜெய்சங்கர், ஜெயசித்ரா  நடித்த, கருணாநிதி வசனம் எழுதிய 'வண்டிக்காரன் மகன்'

ஆனந்த விகடன் 19.11.1978 இதழில் அத்தனை படங்களுக்கும் ஒரே இதழில் விமர்சனம் எழுதியது. அதிகபட்ச சினிமா விமர்சனங்கள் இடம்பெற்ற ஒரே பத்திரிகை ஆனந்த விகடன்தான்.

அத்தனை படங்களையும் பார்த்தேன். அதில் மிகப்பெரிய வெற்றி அடைந்த படம் 'சிகப்பு ரோஜாக்கள்'. இந்த படம் தேவி பாரடைஸில் வெளிவந்தது. அதே வருடம் ஜூன் மாதம் வெளியான பாரதிராஜாவின் இரண்டாவது படமான 'கிழக்கே போகும் ரயில்' இன்னமும்  வெற்றிகரமாக தேவி பாலாவில் ஓடிக்கொண்டிருந்தது.

'தப்புத்தாளங்கள்' மிகுந்த சர்ச்சைக்குள்ளானது. இந்த படத்தில்தான் சரிதாவை அறிமுகப்படுத்தினார் பாலசந்தர். இந்த  படத்திற்கு விஜயபாஸ்கர் இசையமைத்திருந்தார்.

இந்த சமயத்தில் டில்லியில் மொரார்ஜி பிரமராக இருந்தார். ஜனதா ஆட்சி! ஆட்சி பீடத்தில் ஜனதா கட்சி அமர்ந்து விட்ட போதிலும் அதன் தலைவர்களிடையே ஒற்றுமை இல்லாததால்,  மந்திரிசபையில் நெருக்கடி ஏற்பட்டது. சரண்சிங்கும், ராஜநாராயணனும் இந்திரா காந்தியையும், சஞ்சய் காந்தியையும், எப்படி பழிவாங்குவது என்று யோசித்தபடி இருந்தார்களே தவிர, ஆக்கபூர்வமாக செயல்படவில்லை.

ஒரு நாள், ராஜநாராயணன் நிருபர்களை அழைத்தார்.

`நான் இவ்வளவு ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா?’ என்று கேட்டார்.  நிருபர்கள் விழித்தார்கள். ராஜநாராயணன் புன்னகையுடன், `உங்களுக்குத் தெரியாது, காரணம் நான் பழங்காலத்தில் ரிஷிகளும், முனி வர்களும் கடைப்பிடித்த முறையைப் பின்பற்றுகிறேன்’ என்று கூறினார்.

`அந்த முறை என்ன என்று கூறுங்களேன். உலக மக்கள் எல்லோரும் பயன் அடைவார்கள்‘’ என்று ஒரு நிருபர் கூறினார்.

`அதுவும் சரிதான்’ என்று கூறிய ராஜநாராயணன் தொடர்ந்து சொன்னார்.

`காலையில் எழுந்ததும் பலர் காபி – டீ குடிக்கிறார்கள். அது தவறு. அவற்றில் விஷ சத்து இருக்கிறது' என்று கூறி நிறுத்தினார்.

`அப்படியானால் நீங்கள் டீ குடிப்பதில்லையா?’

நிருபர்கள் கேட்டனர்.

`நோ.. நோ.. நான் குடிப்பது வேறு’ என்றார்.

`அதைத்தான் சொல்லுங்களேன்’ என்று நிருபர்கள் வற்புறுத்தினார்கள்.

`சொல்லத்தான் போகிறேன். எல்லோரும் பயன் அடையவேண்டும் அல்லவா?" என்று கூறிய ராஜநாராயணன் குரலைத் தாழ்த்திக்கொண்டு `தினமும் காலையில் என் சிறுநீரை அரை டம்ளர் அளவுக்கு குடிக்கிறேன்' என்று சொன்னார்.

 இதை கேட்ட நிருபர்கள் அதிர்ச்சியால் உறைந்து போனார்கள்.  ராஜநாராயணன் ஏற்கனவே, `அரசியல் கோமாளி’ என்று பெயர் எடுத்தவர். அவர் உண்மையாகவே கூறுகிறாரா, அல்லது தமாஷ் செய்கிறாரா என்று திகைத்தார்கள்.

`என்ன, எல்லோரும் வாயடைத்துப் போய்விட்டீர்கள்? நான் விளையாடு கிறேன் என்று நினைக்கிறீர்களா? சத்தியமாக சொல்கிறேன். இது நிஜம்.நிஜம் நிஜம்!’’ என்றார்.

அதிர்ச்சியிலிருந்து நிருபர்கள் மீளவில்லை. என்றாலும், ஒரு நிருபர் மனதை திடப்படுத்திக்கொண்டு `எவ்வளவு நாட்களாக நீங்கள் இந்த அமுதத்தை குடித்து வருகிறீர்கள்?’ என்று கேட்டார். `அமுதம்’ என்று நீங்கள் கேலியாகக் குறிப்பிட்டாலும் சரி, உண்மையாக உணர்ந்து சொன்னாலும் சரி, என்னைப் பொறுத்தவரை அது அமுதம்தான். அதைக் கழிவுப்பொருள் என்று நினைப்பது சரியல்ல. ரத்தத்தை சுத்தீகரிக்கக்கூடிய சக்தி அதற்கு உண்டு" என்றார் ராஜநாராயணன்.

``இன்று அருமையான செய்தி கிடைத்துவிட்டது!’’ என்று நிருபர்கள் கிளம்பினார்கள். அதை தங்கள் அலுவலகங்களுக்கு தெரிவிக்க அவசரமாக கிளம்பினார்கள்.

`கொஞ்சம் பொறுங்கள்’ என்றார் ராஜநாராயணன்.

`இன்னும் என்ன செய்தி சொல்லப்போகிறாரோ’ என்று நிருபர்கள் உட்கார்ந்தனர்.

` நான் கூறிய மருந்தின் மகிமை, என் குரு உள்துறை மந்திரி சரண்சிங்கிற்கும் தெரியும்.  அவரும் அதை தினமும் அருந்தி பயன் அடைந்து வருகிறார்’ என்று கூறிய ராஜநாராயணன்,  `இந்த மருத்துவ முறையை பின்பற்றும் இன்னொருவர் பெயரையும் கூறப்போகிறேன். அவருடைய பெயரைக் கேட்டால் நீங்கள் திகைத்துப் போவீர்கள்’’ என்று கூறி நிறுத்தினார்.

`அவர் யார் என்று கூறுங்கள், சஸ்பென்சாக நிறுத்தி, எங்கள் பொறுமையை சோதிக்காதீர்கள். செய்தி கொடுக்க நேரமாகிறது’’ என்று அவசரப்படுத்தினார் ஒரு நிருபர்.

`பொறுங்கள். பொறுங்கள். சிறுநீர் அருந்துவோர் பட்டியலில். நமது பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்களும் இருக்கிறார்கள்.  எண்பது வயதுக்கு மேலும் அவர் எவ்வளவு தெம்புடனும், உற்சாகத்துடனும் இருக்கிறார் பாருங்கள்! எல்லாம் இந்த மருந்தின் மகிமை’’ என்றார் ராஜநாராயணன்.

ராஜநாராயணன் பேட்டி, மறுநாள் உலகம் முழுவதும் உள்ள பத்திரிகைகளில் கொட்டை எழுத்துக்களில் பிரசுரமாகியது. `சிறுநீர் குடிக்கும் இந்திய மந்திரிகள்’ என்ற தலைப்புடன் செய்தி வெளியிட்டு  மேல்நாட்டு பத்திரிகைகள் இந்தியாவின் மானத்தை வாங்கின. ராஜநாராயணன் இப்படி பேட்டி அளித்தது, மொரார்ஜி தேசாய்க்கு ஆத்திரத்தை உண்டாக்கியது.  `கோமாளித்தனத்துக்கு ஒரு எல்லை இல்லையா'? என்று ராஜநாராயணனிடம் கடிந்து கொண்டார்.

`நான் உண்மையைத்தானே சொன்னேன்? நாம் மட்டும் பலன் அடைந்தால் போதுமா? உலகமே பலன் அடையவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான் கூறினேன்’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார் ராஜநாராயணன். ஏற்கனவே இந்திரா காந்தியை கொடுமைப்படுத்தியதால் ஜனதா அரசாங்கத்தின் மீது மக்கள் வெறுப்பு அடைந்திருந்தனர். ராஜநாராயணன் அளித்த பேட்டியால், ஜனதா  கட்சியின் செல்வாக்கு மேலும் சரிந்தது.

இதற்கிடையே இந்திரா காந்தியை ஷா கமிஷன் நேரில் அழைத்து விசாரித்தது.

நீதிபதி கேட்ட எந்த கேள்விக்கும், இந்திரா பதில் அளிக்க மறுத்தார். ` நான் பிரதமராகப் பதவி ஏற்கும்போது, ரகசிய காப்புப் பிரமாணம் செய்து கொடுத்திருக்கிறேன். எனவே, பதில் அளிக்க இயலாது’ என்றார்.

ஷா கமிஷன் தனது 500 பக்க அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்தது.  அதில், நெருக்கடி நிலையின்போது நடந்த பல அத்துமீறல்கள் நடந்தது பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், இந்திரா காந்தி மீது குறிப்பாக எந்தக் குற்றச்சாட்டையும் கூறவில்லை.

இந்த சமயத்தில் மொரார்ஜி தேசாய் மகன் காந்தி தேசாய் மீது ஊழல் புகார்கள் கூறப்பட்டன. இது பற்றி விசாரணை நடத்தவேண்டும் என்று மொரார்ஜிக்கு சரண்சிங் கடிதம் எழுதினார்.  `வெறும் வதந்தியை மட்டும் வைத்து விசாரணை நடத்த முடியாது’ என்று தேசாய் பதிலளித்தார்.

இதைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் பதவியை சரண்சிங்கும், சுகாதார அமைச்சர் பதவியை ராஜநாராயணனும் ராஜினாமா செய்தனர்.  இதனால் ஜனதா கட்சி பிளவுபட்டது.

 மந்திரிசபை கவிழ்ந்து விடக்கூடாது என்பதற்காக, மொரார்ஜி தேசாய்க்கும், சரண்சிங்குக்கும் சமரசம் செய்து வைக்க ஜனதா தலைவர்கள் முயற்சி மேற்கொண்டனர்.

தனக்கு உள்நாட்டு இலாகாவுடன், துணைப் பிரதமர் பதவியும் வேண்டும் என்றும், தன்னுடைய சீடர் ராஜநாராயணனுக்கு மீண்டும் மந்திரி பதவி தரவேண்டும் என்ற்ம் சரண்சிங் வற்புறுத்தினார். துணைப்பிரதமர்  பதவி தருவதாகவும், ஆனால் உள்நாட்டு இலாகாவைத் தரமுடியாது என்றார் தேசாய். சரண்சிங், ஜெகஜீவன்ராம் ஆகிய இருவரையும்  துணைப்பிரதமராக நியமித்தார். சரண்சிங்குக்கு நிதி இலாகா கொடுக்கப்பட்டது. ராஜநாராயணனுக்கு மந்திரி பதவி கொடுக்க முடியாது என்று தேசாய் மறுத்துவிட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ராஜநாராயணன், தேசாய் ஆட்சியை கவிழ்ப்பதாக சபதம் செய்தார். ஜனதா கட்சியை விட்டு விலகி `ஜனதா ( எஸ்)' என்ற பெயரில் தனி கட்சி தொடங்கினார்.

ஜனதா கட்சியை சேர்ந்த  34 எம்.பிக்கள் அக்கட்சியை விட்டு விலகி, ராஜநாராயணன் கட்சியில் சேர்ந்தனர். பின்னர் ரபிராய், ஜானேஸ்வர் மிஸ்ரா, ஜக்பீர்சிங் ஆகியோரும் ஜனதாவை விட்டு விலகி, ராஜநாராயணன் கட்சியில் சேர்ந்தனர். இதனால், மொரார்ஜி தேசாய் ஆட்சி ஆட்டம் கண்டது. ஜனதா கட்சியில் நெருக்கடி அதிகமாகிக் கொண்டே இருந்தது.

மொரார்ஜி தேசாயை கவிழ்த்துவிட்டு பிரதமராக வேண்டும் என்று நீண்ட காலமாக திட்டமிட்டு வந்த சரண்சிங் `இதுதான் சமயம்’ என்று ஜனதா கட்சியை உடைப்பதில்  ஈடுபட்டார்.

`மொரார்ஜி தேசாய் பதவி விலக வேண்டும்’ என்று சரண்சிங் கோஷ்டி போர்க்கொடி தூக்கியது. `நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்?’ என்று திட்டவட்டமாக கூறிவிட்டார் தேசாய்.

மொரார்ஜிக்கு எதிர்ப்பு தெரிவித்து, பட்நாயக், பகுகுணா, ஜார்ஜ்  பெர்னாண்டஸ் உட்பட 13 மந்திரிகள் ராஜினாமா செய்தனர்.

80 எம்.பிக்கள்  ஜனதாவை விட்டு விலகி, ராஜநாராயணன் கட்சியில் சேர்ந்தார்கள்.

 இந்த நிலையில் மொரார்ஜி தேசாய்க்கு மெஜாரிட்டி இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட காங்கிரஸ், அவரது மந்திரிசபை மீது பார்லிமென்ட்டில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது.

`எனக்கு  இன்னமும் மெஜாரிட்டி ஆதரவு இருக்கிறது.  பார்லிமென்ட்டில் என் மெஜாரிட்டியை நிரூபிப்பேன். நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தோற்கடிப்பேன்‘ என்றார் மொரார்ஜி.

டில்லியில் இந்த அமர்க்களம் நடந்து கொண்டிருக்கும்போது இங்கே  அடுத்து என்ன செய்யலாம் என்று கிடைத்த வேலைக்கெல்லாம் போய்க் கொண்டிருந்த நான் `கண்டதை படித்தால் பண்டிதனாகலாம்’ என்று எல்லாவற்றையும் படித்துக் கொண்டிருந்தேன். நான் இப்படி படித்துக்கொண்டிருப்பதை பார்த்த என் அப்பா, சில புத்தகங்களை கொடுத்து படிக்கச் சொல்வார். அப்பாவுக்கு ஆங்கிலம் வராது. ஆனால், காலையில் தினமணி நாளிதழை எடுத்தால், தலைப்பிலிருந்து அச்சிட்டு வெளியிடுபவர் வரை முழுவதும் படித்துவிடுவார்.

ஏ.என். சிவராமன் கணக்கன் என்ற பெயரில் தினமணியில் எழுதுவதை அப்பா விலாவாரியாக அலசுவார். இதில் அப்பா கம்யூனிஸ்ட் – அம்மாவோ பூஜை புனஸ்காரம், ஆச்சாரம், விரதம் என்று பட்டினியெல்லாம் கிடப்பார். `தான் வாட வாட தவம் செய்ய வேண்டாம்’ என்று உங்க நம்மாழ்வாரே பாடியிருக்கிறாரே' என்று அப்பா அம்மாவை கிண்டல் செய்வார்.

அப்போதுதான் அப்பா ராகுல சாங்கிருத்தியாயனனின் `வால்காவிலிருந்து கங்கை வரை’ புத்தகத்தை கையில் கொடுத்தார்.  `கண்ட புத்தகங்களை எல்லாம் கொடுத்து பிள்ளையை கெடுக்காதீங்க. ஏற்கனவே அவன் பியூசியில் பெயிலாகி உருப்படாம சுத்திக்கிட்டிருக்கான்’ என்பார் அம்மா.

 `வால்காவிலிருந்து கங்கை வரை’ புத்தகம் பெரும் சர்ச்சையை கிளப்பிய புத்தகம். ஆனால் காலத்தைக் கடந்து நிற்கும் பொக்கிஷம். முதலில் ராகுல சாங்கிருத்தியாயனைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளவேண்டும்.   பேராசிரியர் ராகுல சாங்கிருத்தியாயன்  தமிழ் உலகத்திற்குப் புதியவரல்ல. அவருடைய `பொது உடைமைதான் என்ன ?’ என்று நூலை படித்தவர்கள்  ஒவ்வொருவரும்,  இந்த அறிவுக் கடலின்  சிறு பகுதியையேனும் பார்த்திருப்பார்கள். பிள்ளை பருவத்திலேயே அறிவு தாகம் எடுத்த ராகுல்ஜி அறிவை சேகரிப்பதற்காக உலகத்தில் மூலை முடுக்குகளை யெல்லாம்  சுற்றியிருக்கிறார்.  ஐக்கிய மாகாணத்தில் ஆஜம் கட் ஜில்லாவை சேர்ந்த ஒரு சிறு கிராமத்தில் பிறந்தவர் இவர். காசி நகரிலே தொடங்கிய பொது அறிவு சேகரிக்கும் முயற்சியை லெனின்கிராடு சர்வ கலாசாலைப் பேராசிரியர் பதவியைப் பெற்றபோதும் செய்தார்.

(தொடரும்)