உத்தரப் பிரதேசம் பிஆர்டி மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 63 குழந்தைகள் பலி

பதிவு செய்த நாள் : 12 ஆகஸ்ட் 2017 19:58

கோரக்பூர்

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில், 5 நாட்களில் 63 குழந்தைகள் உயிரிழந்ததற்கு ஆக்சிஜன் பற்றாக்குறையே காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் எம்.பி.யாக வெற்றி பெற்ற கோரக்பூர் தொகுதியில் பாபா ராகவ் தாஸ் (BRD) மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு கடந்த 2 நாட்களில் 30 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.

ஆகஸ்ட் 10ஆம் தேதியன்று 23 குழந்தைகளும், நேற்று 7 குழந்தைகளும் உயிரிழந்துள்ளன. மேலும் 3 குழந்தைகள் உயிரிழந்ததை அடுத்து, கடந்த 6 நாட்களில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது. மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளினால் குழந்தைகள் உயிரிழந்துள்ளன.

மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகித்து வந்த புஷ்பா சேல்ஸ் என்ற தனியார் நிறுவனம் மருத்துவமனை செலுத்த வேண்டிய நிலுவைத்தொகைக்காக ஆக்ஸிஜன் விநியோகத்தை நிறுத்தியதே குழந்தைகள் அடுத்தடுத்து பலியானதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்துக்கு ரூ.70 லட்சம் பாக்கி இருந்ததால், அந் நிறுவனம் ஆகஸ்ட் 1ம் தேதி அன்று மருத்துவமனைக்கு எழுதிய கடிதத்தில் தங்கள் நிறுவனத்துக்குத் தர வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாகத் தராவிட்டால் ஆக்ஸிஜன் விநியோகம் நிறுத்தப்படும் என எச்சரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் இறந்தாக எழுந்த குற்றச்சாட்டை  மாவட்ட கலெக்டர் ராஜீவ் ரவுதலா மறுத்து இருக்கிறார். அவர் கூறும்போது, மருத்துவமனையில் போதுமான ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளன. பல்வேறு காரணங்களால் இந்த உயிரிழப்பு நடந்து இருக்கிறது. குழந்தைகள் பிரசவ வார்டில் 17 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர். 5 குழந்தைகள் மூளை அலற்சி நோய் சிகிச்சை வார்டிலும் 8 குழந்தைகள் பொதுவார்டிலும் இறந்து உள்ளன என்றார்.

ஆனால், பொது மக்களின் இந்த குற்றச்சாட்டை உத்தரப்பிரதேச சுகாதார அமைச்சர் சித்தார்த் நாத் சிங், மருத்துவம் மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சர் அசுதோஷ் டாண்டன் ஆகியோர் மறுத்துள்ளனர். இருவரும் இன்று கோரக்பூர் மருத்துவமனைக்கு சென்று நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.  இதை முன்னிட்டு கோரக்பூர் பிஆர்டி மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பெரும் எண்ணிக்கையில் மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.

மேலும், பிஆர்டி மருத்துவமனையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆய்வு மேற்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.