பார்த்தது படித்தது ரசித்தது – சுதாங்கன் – 30–07–17

பதிவு செய்த நாள் : 30 ஜூலை 2017

சென்ற வாரம் ஒரு சேனலில் 'நெஞ்சில் ஒர் ஆலயம்' படம் பார்த்தேன். அடுத்த நாள் இயக்குநர் ஸ்ரீதரின் பிறந்த நாள்.   தேசிய அளவில் அங்கீகரிக்கப்படாத சில தமிழ் திரைப்படக் கலைஞர்கள் உண்டு. ஸ்ரீதர், நாகேஷ், இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.

எனக்கு இதில் பெரிய வருத்தமுண்டு.  ஸ்ரீதரின் பூர்வீகம் செங்கல்பட்டு. மதுராந்தகத்தில் தங்கியிருந்தார். அவரது தந்தை  ஒரு கூட்டுறவு வங்கி ஊழியர். பள்ளி நாட்களிலிருந்தே ஸ்ரீதர் நாடகம் எழுதத் துவங்கிவிட்டார்.

பிறகு எப்படியாவது சினிமாவுக்கு வந்து விடவேண்டுமென்று சென்னைக்கு வந்தார். அவர் சென்னைக்கு வந்ததே ஒரு வித்தியாசமான அனுபவம். அவரது உறவினர் ஒருவர் வங்கியில் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி சென்னைக்கு அழைத்தார்.

 சென்னைக்கு வந்த ஸ்ரீதர், அடுத்த நாள் வங்கித் தலைவரை சந்திப்பதாக ஏற்பாடு. ஆனால் அவரை அழைத்த உறவினர், அன்றிரவே மாரடைப்பால் இறந்து போனார். அதனால் வங்கி வேலை கிடைக்கவில்லை.

பிறகு ஜூபிடர் பிக்சர்ஸில் பிரதிநிதியாக சில காலம் தஞ்சாவூரில் வேலை பார்த்தார். பிறகுதான் முதலில் ஒரு நாடகம் எழுதினார். ஒரு நண்பர் சொன்னதால் முதலில் அந்த நாடகத்தை கொண்டு போய் அப்போது பிரபலமாக இருந்த டி.கே. சண்முகத்திடம் கொண்டு போய் கொடுத்தார்.

ஸ்ரீதரை பார்த்தவுடன் சண்முகத்தால் முதலில் நம்ப முடியவில்லை. இந்த சின்ன பையன் என்ன கதை எழுதிவிடப்போகிறான் என்றுதான் முதலில் நினைத்தார்.

அதனால் அவர் எழுதி வந்த புத்தகத்தை வாங்கி வைத்துக்கொண்டார். ஆனால் படித்தவுடன் அவருக்கு கதை பிடித்துப் போனது.  உடனே ஸ்ரீதரை அழைத்து அந்தக் கதையை நாடகமாக்குவதாகச் சொன்னார்.  அந்த நாடகம்தான் 'ரத்தபாசம்'.  நாடகம் பெரும் வெற்றிபெற்றது. பிறகு அதே நாடகம் திரைப்படமானது.

அவர் எழுதிய அடுத்த நாடகம் 'லட்சியவாதி'. ஸ்ரீதரின் பள்ளி நாள் தோழர்தான் சித்ராலயா கோபு.  ஸ்ரீதரோடு அவர் வாழ்நாள் முழுவதும்  கழித்தார் கோபு. ஸ்ரீதர் படங்களின் நகைச்சுவைக்கு முக்கிய காரணம் கோபுதான்.

'மகேஸ்வரி', மற்றும் தெலுங்கு படங்களுக்கெல்லாம் வசனம் எழுதினார் ஸ்ரீதர். நாளடைவில் ஸ்ரீதரிடம் கதை கேட்க தயாரிப்பாளர்கள் வந்தார்கள். கையில் காசு வர ஆரம்பித்ததும், அவரும் நண்பர் கிருஷ்ணமூர்த்தியும் இன்னொரு நண்பரும் சேர்ந்து சொந்த படம் எடுக்க தீர்மானித்தார்கள். அப்படி அவர்கள் எடுத்த படம் சிவாஜி நடித்த 'அமரதீபம்'. ஆனால் அந்த படத்தை ஸ்ரீதர் இயக்கவில்லை. டி.பிரகாஷ்ராவ்தான் இயக்கினார்.

'அமரதீபம்' வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, அடுத்து ஒரு பிரம்மாண்ட படம் எடுக்கத் தீர்மானித்தார்கள். அதற்காக அவர் தேர்ந்தெடுத்த கதை 'ஸ்ரீவள்ளி'.  இந்த எண்ணத்தை சிவாஜியிடம் போய் சொன்னார்கள். சிரித்தார் சிவாஜி. இதே கதைக்காக இன்னொரு தயாரிப்பாளர் வந்து அட்வான்ஸ் கொடுத்துவிட்டு போயிருக்கும் விஷயத்தை சொன்னார் சிவாஜி.

அடுத்து என்ன கதை என்று  யோசிக்க ஆரம்பித்தார்கள். அலெக்ஸாண்டர் டூமாஸ் எழுதிய  'THE MAN WITH THE IRON MASK'  கதையைத் தழுவி படம் செய்யலாமென்று நினைத்தார்கள். ஆனால் அந்த கதையை ஏற்கனவே மாடர்ன் தியேட்டர்ஸ் பி.யு சின்னப்பாவை வைத்து 'உத்தமபுத்திரன்' என்று தமிழில் முதல் இரட்டைவேடப் படத்தை எடுத்து வெற்றி கண்டிருந்தார்கள்.

ஆனாலும் ஸ்ரீதர் விடவில்லை. அந்த படம் வந்து 15 ஆண்டுகளுக்கு மேலாகிறது. அதே தலைப்பில் மீண்டும் எடுப்போம். சிவாஜியை இரு வேடங்களில் நடிக்க வைப்போம் என்று முடிவு செய்து, சிவாஜியின் ஒப்புதலையும் பெற்றார்கள்.

பத்திரிகைகளில் சிவாஜி இரு வேடங்களில் நடிக்கும் 'உத்தமபுத்திரன்' என்று விளம்பரம் கொடுத்தார்கள். விளம்பரம் வந்த அன்று அவர்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. அதே நாளில் பத்திரிகையில் இன்னொரு விளம்பரம். எம்.ஜி.ஆர் இரு வேடங்களில் நடிக்கும் 'உத்தமபுத்திரன்' என்று  வந்திருந்தது. திகைத்துப்போனார் ஸ்ரீதர். பிறகு என்.எஸ். கிருஷ்ணன் எம்.ஜி.ஆரை சமாதானம் செய்து, தலைப்பை மாற்றிக்கொள்ளச் சொன்னார். அப்படி மாற்றிய தலைப்புடன் வந்த படம்தான்  'நாடோடி மன்னன்'!

'உத்தமபுத்திரன்' படத்தை ஸ்ரீதர் இயக்கவில்லை. கதை, வசனம் மட்டும் எழுதினார்.  இயக்கியவர், டி.பிரகாஷ்ராவ்.

அந்தப் படத்தில் இவருக்கு வசன உதவியாளராக இருந்தவர்  பின்னாளில் பிரபலமான இயக்குநரான கே.எஸ். கோபாலகிருஷ்ணன். கூடவே 'உத்தமபுத்திரன்' படத்தில்  `உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே’ பாடலையும் எழுதினார் கே.எஸ். கோபாலகிருஷ்ணன். படம் மாபெரும் வெற்றியடைந்தது. சிவாஜியின் திரையுலக வாழ்க்கையிலும் ஒரு திருப்புமுனையாக இருந்த படம் 'உத்தமபுத்திரன்'. ஓர் இளைஞன் சரித்திர பின்னணிக் கொண்ட படத்திற்கு இத்தனை அருமையாக வசனமெழுதியிருக்கிறானே என்று  எல்லோரும் வியந்தார்கள். அடுத்ததாக, ஒரு முக்கோணக் காதல் கதையை தன் பங்குதாரர்களிடம் சொன்னார் ஸ்ரீதர்.

 கதையைக் கேட்ட பங்குதாரர்கள்  ஸ்ரீதரையே இயக்கச் சொன்னார்கள்.

அவர் கதை, வசனம் எழுதிய முதல் படம்தான் 'கல்யாண பரிசு'!

ஆங்கிலப்படங்களையே வெளியிட்டுக்கொண்டிருந்த சென்னை காசினோ தியேட்டரில் முதலில் வெளியான தமிழ் படம் 'கல்யாண பரிசு'.

அவர் இயக்கிய முதல்படமே வெள்ளிவிழா கொண்டாடியது.

அதுவரையில் சினிமா கேமரா என்பது நாடக பாணியில்தான் காட்சிகளை படமாக்கிக் கொண்டிருந்தது. அப்போதெல்லாம் ஏராளமான பாடல்களும், நீண்ட வசனங்களும் கொண்டதாக இருக்கும். வசனங்களைக் குறைத்து, கேமரா கோணங்களை வித்தியாசமாக தமிழ் சினிமாவுக்கு காட்டியது ஸ்ரீதர்தான். இந்த படத்தில் நடந்த இன்னொரு சுவாரஸ்யம் உண்டு. பாட்டெழுத வந்தார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். அவருக்காக 'கல்யாண பரிசு' கதையை ஒரு அரை மணி நேரம் காட்சிவாரியாக சொல்லிக்கொண்டிருந்தார் ஸ்ரீதர்.

உடனே பட்டுக்கோட்டை "ஏன் இவ்வளவு நேரம் எடுத்துக்கிறீங்க? `காதலிலே தோல்வியுற்றாள் கன்னியொருத்தி, கலங்குகிறாள் அவனை நெஞ்சில் நிறுத்தி.’ இதுதானே உங்கள் படத்தின் கதை?" என்றார் பட்டுக்கோட்டை. அசந்து போனார் ஸ்ரீதர். பட்டுக்கோட்டை சொன்ன வரிகளையே படத்தில் பாடலாக்கினார் ஸ்ரீதர். அந்த பாட்டு அந்த படத்திற்கே ஹைலைட்டாக அமைந்தது. 'கல்யாண பரிசு' வெற்றிக்கு பிறகு ஸ்ரீதர் யோசித்த வித்தியாசமான கதைக் களம்தான் 'தேன் நிலவு'. அப்போதெல்லாம் வெட்டவெளி, மைதானம், வயல்பரப்பு என்றால் கூட ஸ்டூடியோவுக்குள்ளேயே செட் போட்டுத்தான் எடுப்பார்கள். படப்பிடிப்பு முழுவதும் வெளிப்புறத்தில், அதுவும் காஷ்மீரில் சென்று எடுப்பதென்று முடிவெடுத்தார் ஸ்ரீதர்.

காஷ்மீரில் ஒரு தமிழ் படமா? திரையுலகமே வியந்தது.

இரண்டரை மாதங்கள் காஷ்மீருக்கே அன்றைய பிரபல நட்சத்திரங்களாக இருந்த ஜெமினி, வைஜெயந்திமாலா, தங்கவேலு, நம்பியார் போன்ற நட்சத்திரங்களை வைத்து படமெடுத்தார் ஸ்ரீதர்.

 பாடகராக இருந்த ஏ.எம். ராஜாவை 'கல்யாண பரிசு' படத்தின் மூலமாக இசையமைப்பாளராக்கியதும் ஸ்ரீதர்தான்.  அதே ராஜாவையே 'தேன் நிலவு' படத்திற்கும் இசையமைக்க வைத்தார் ஸ்ரீதர்.

 அப்போது காஷ்மீரில் ஸ்ரீதர் குழுவினரோடு, அங்கேயே ஒரு மாதம் தங்கினார் அப்போது உலகப் புகழ் பெற்றிருந்த ஓர் இந்தி நடிகர். அவர்தான் ராஜ்கபூர்.

அவர் தங்குவதற்கு காரணமிருந்தது.

அவர் அடுத்து எடுக்கவிருக்கும் இந்தி படத்தில் வைஜெயந்திமாலாவை நடிக்க வைக்க விரும்பினார்.

ஆனால், வைஜெயந்திமாலாவின் பாட்டி யதுகிரி  பிடி கொடுக்கவில்லை. அப்போதெல்லாம் வைஜெயந்திமாலாவின் பாட்டிதான் அவருடன் படப்பிடிப்புக்கு வருவார்.  ஒரு மாதம் காஷ்மீரிலேயே தங்கி  ஒரு வழியாக வைஜெயந்திமாலாவை சம்மதிக்க வைத்தார் ராஜ்கபூர்.

அவர் எடுத்த இந்தி படமான 'சங்கம்' மூலமாக வைஜெயந்திமாலா அகில இந்தியப் புகழை அடைந்தார்.

ஒரு நாளிதழில் ஒரு செய்தி வந்தது. வடநாட்டில் ஒரு பெண்ணுக்கு பூர்வஜென்ம நினைவுகள்  வந்ததாகச் சொன்னது அந்த செய்தி.

அதையே தன் அடுத்த படத்திற்கு கதையாக்கினார் ஸ்ரீதர். அந்தப் படம்தான் 'நெஞ்சம் மறப்பதில்லை'.  இரண்டு ஜென்ம கதை.  அதில் இரண்டு ஜென்மங்களுக்கு ஒரே கதாபாத்திரம் இருக்கும். அந்தப் பாத்திரத்தில் மிகவும் வித்தியாசமாக நடித்திருந்தார் நம்பியார்.

 அந்தப் படத்தில் ஒரு திகிலூட்டும் அதே சமயம் இனிமையாகவும் இருக்கக்கூடிய ஒரு பாட்டு ஸ்ரீதருக்கு தேவைப்பட்டது. அந்த படத்தின் இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி. ஆறு மாதங்கள் வரை விஸ்வநாதன் போட்ட எந்த டியூனும் ஸ்ரீதருக்கு பிடிக்கவில்லை. ஆறு மாதங்களுக்கு பின தேர்ந்தெடுத்த டியூன்தான் அந்த படத்தில் சுசீலா குரலிலும், பிறகு பி.பி. ஸ்ரீனிவாஸ் குரலிலும் ஒலித்த 'நெஞ்சம் மறப்பதில்லை' என்ற பாடல்.

22 நாட்களில் ஒரு ஸ்டூடியோவுக்குள்ளேயே மருத்துவமனை செட் போட்டு ஸ்ரீதர் எடுத்த படம்தான் 'நெஞ்சில் ஒர் ஆலயம்'. படம் வெள்ளி விழா கொண்டாடியது. இந்த படத்தில் வந்த ஒரு பாடலை காரில் ஒரு ஸ்டூடியோவிலிருந்து இன்னொரு ஸ்டூடியோவுக்கு போவதற்குள்  தயார் செய்தார்கள் கவிஞர் கண்ணதாசனும் விஸ்வநாதனும். அந்த பாடல்தான்முத்தான முத்தல்லவோ முதிர்ந்து வந்த முத்தல்லவோ’ பாடல். தமிழில் வந்த முதல் ஈஸ்ட்மென் கலர் படம் ஸ்ரீதர் இயக்கிய 'காதலிக்க நேரமில்லை'.

* * *